Sunday, December 23, 2007

நீதிமன்றம் செல்லவிருக்கும் இயக்குநர்கள் சாமி மற்றும் தங்கர்பச்சான் அவர்களுக்கு...

சினிமாக்காரர்கள் இளிச்சவாயர்களா??

நேற்று ஜெயா தொலைக்காட்சியில் கோலிவுட் கோர்ட் என்ற நிகழ்ச்சியில் மிருகம் பட இயக்குநர் சாமி "Animal Welfare Association" இடமிருந்து NOC வாங்குவது பற்றிப் பொங்கிக் கொண்டிருந்தார்.மிருகம் படத்தில் சுமார் 10 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சிகள் தூக்கப்பட்டுவிட்டது என்றும் அதற்கு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் கூறியிருந்தார்.(சினிமாக்காரர்கள் இளிச்சவாயர்களா?? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்).

இதே போல் சென்ற வாரத்தில் தங்கர்பச்சான் ஒன்பது ரூபாய் நோட்டின் கள்ளக்குறுந்தகடு (நன்றி சுகுணா திவாகர்) 30 ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்டுபிடித்து அதைப் போலீஸில் புகார் செய்திருந்தார்.(ஏற்கனவே அந்தப் படத்தில் கள்ளக்குறுந்தகட்டிற்கு எதிராக ஒரு காட்சியும் வைத்திருப்பார்).இவரும் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது.

நன்று.அப்படியே எங்கள் பிரச்சினைகளையும் சொல்கிறோம். அதையும் அங்கே சொல்லுங்கள்.

ரசிகர்கள் இளிச்சவாயர்களா???

சென்னையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் திரைப்படங்கள் வெளிவருகிறது.அதை அந்த வார இறுதியில் கவுண்டரில் டிக்கெட் எடுத்து யாராவது பார்த்தால் அவர்கள் பெயரை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.உன்னை யாருய்யா அந்த வாரமே பார்க்கச் சொன்னா?? என்று கேள்வி எழுப்பாதீர்கள்.அடுத்த வாரங்களில் அந்தத் திரைப்படங்கள் அந்தத் திரையரங்குகளில் ஓடுவதில்லை.வேறு புதிய படங்கள் வந்து அதையும் பிளாக்கில் பார்க்க வேண்டிய நிலைதான் உள்ளது.சுருக்கமாகச் சொல்லப்போனால் "First come first serve" லாம் இப்போது இல்லை. "கையில காசு வாயில தோசை" தான் உள்ளது.

இந்தியாவின் மொத்த‌க் க‌ருப்புப்ப‌ணத்தையும் வெளிக்கொண்டுவரப் பாடுபட்ட உச்ச நடிகரின் திரைப்படந்தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று கேள்வி.(சென்னையில் அதன் ஒரு டிக்கெட்டின் விலை 300 - 1000 வரை).

இப்போது உங்கள் டார்கெட் மார்க்கெட் பணம் ஜாஸ்தியாகக் கொடுக்க மறுக்கும் நடுத்தரக்குடும்பமோ அல்லது குடும்பப் பெண்களோ இல்லை தான்.பர்ச்சேஸிங் பவர் ஜாஸ்தியாக உள்ள இளைஞர்கள் தான்.ஆனால் அதற்காக வழக்கமான கட்டணத்தை விட 5 மடங்கு எல்லாம் கொஞ்சம் ஓவர்.

அந்த மார்க்கெட்டை அழிக்க எப்படி டி.வி யும், கள்ளக்குறுந்தகடும் வந்ததோ அதே போல் இந்த மார்க்கெட்டையும் அழிக்க ஏதொவொன்று வரும்.அதற்கு முன்பாகவே முடிவு நீங்கள் தான் எடுக்க வேண்டும்.

தரமான படங்களைச் சரியான கட்டணங்களோடு நல்ல தியேட்டர் வசதிகளுடன் எங்களுக்குக் கொடுங்கள்.இப்படி இருந்தால் தான் நாம் அனைவரும் ஒரு product (திரைப்படம்) மூலம் சந்தோசமடைய முடியும்.கள்ளக்குறுந்தகடும் இன்ன பிற பிரச்சினைகளும் தாமாகவே அழிந்துவிடும்.

(பில்லா படத்திற்குச் சென்று டிக்கெட் விலை கேட்டு நாங்கள் எங்கள் எதிர்ப்பைத்தெரிவிக்க அன்று படத்திற்குச் செல்லவில்லை :)))

Sunday, December 16, 2007

பில்லா - தியேட்டரில் கொலை???

பில்லா திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.தியேட்டரில் உள்ள அனைவரும் அஜீத்திடமும்,நயந்தாராவிடமும் மனசை விட்டுக்கொண்டிருக்க என் அருகில் அமர்ந்திருந்தவர் உயிரை விட்டிருந்தார்.

நிற்க.அவர் சுடப்பட்டு இறந்திருந்தார்.

விக்ரம் படத்தில் அம்பிகாவை நெற்றிப் பொட்டில் சுடுவார்களே.அந்த மாதிரி சுட்டிருந்தார்கள்.(சே இந்த நேரத்தில் கூட திரைப்பட ஞாபகமா??)

சுட்டவன் நல்ல வேலைக்காரானாக இருந்திருக்க வேண்டும்.சென்னையின் மையப்பகுதியில், ஞாயிற்றுக் கிழமையில், பட்டப் பகலில், தியேட்டரில் துப்பாக்கி சுடும் காட்சி வரும் சமயத்தில் சுட்டிருந்ததால் டி.டி.எஸ் எபக்டில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த அசம்பாவிதத்தை உணரவில்லை.

சரி இப்போது நான் என்ன செய்வது?.கத்துவதா? தியேட்டர் மேனேஜர் ரூம் எங்கு இருக்கும்??

ந‌ண்பா நீ யார்? தியேட்ட‌ரில் வ‌ந்து சுடும் அளவிற்கு உன் எதிரி யார்? அவ‌ருக்கு நீ செய்த‌ கொடுமை என்ன‌?

அச‌ந்த‌ர்ப்ப‌மாக‌ செல்போன் அடித்த‌து.

"சே முடிவைக் கூட‌ ப‌டிக்க‌ விட‌மாட்டேங்கிறாங்க‌" என்று சொல்லிய‌வாறே அலுவ‌ல‌க‌க் க‌ணிணியின் த‌மிழ்ம‌ண‌ விண்டோவைக் க்ளோஸ் செய்தேன்.

குறிப்பு:

1)இது பதிவர் ச‌ர்வேச‌னின் ந‌ஒக‌ விற்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து.

2)இத‌ற்கு முன்பு என்னால் எழுதப்ப‌ட்ட‌ ஒரு சிறுக‌தை நண்ப‌ர்க‌ளிட‌ம் அடி வாங்கித்த‌ரும் அள‌விற்குத் திறமையுட‌ன் இருந்த‌து.இப்போது ந‌ண்ப‌ர்க‌ள் யாரும் அருகில் இல்லாத‌ தைரிய‌த்தில் எழுதிவிட்டேன்.

Thursday, December 13, 2007

சோ‍ - நல்லவரா?? கெட்டவரா??

காலையில் எழுந்து "இட்லிவடை" சாப்பிடும் போது அறிவாளியாக,நடுநிலையானவாராக, தைரியமானவராக, நேர்மையானவராகத் திரியும் ஒரு மனிதர், தமிழினி பக்கம் ஒதுங்கினால் கோமாளியாக, ஒரு கட்சி சார்புடையவராக,பழமைவாதியாகத் தெரிவது எப்படி?.அவர் என்ன அந்நியன் படத்தில் வரும் விக்ரமா?. இது குறித்து பதிவு போடலாமா? வேண்டாமா? என்ற குழப்பம்.(யாருப்பா அது சோ னாலே குழப்பந்தான்னு சவுண்டு குடுக்கிறது).போடலாம் என்று அங்கீகரிப்பவர்கள் மேலே படியுங்கள்.

நல்லவரா???????

1) சோ வின் நகைச்சுவை உணர்ச்சி.தேன்மழை, நினைவில் நின்றவள் இந்த இரண்டு படங்கள் மட்டும் போதும் அவருடைய ஹியூமரை எடுத்துக்காட்ட.என்னைப் பொறுத்த வரை தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த காமெடி ஜோடிகளில் ஒன்று நாகேஷ்‍ - சோ.

2) அவருடைய எழுத்து.சமீபத்தில் அவருடைய புத்தகங்களில் சுமார் 10 புத்தகங்களைப் படித்தேன்.கவனிக்கப் பட வேண்டிய நகைச்சுவையான எழுத்து.விகடனில் வெளிவந்த மிஸ்டர்.ரீல் முதல் இப்போது வரும் லூசுப்பையன் வகை எழுத்துக்கு அவர் தான் முன்னோடி.அவருடய "துக்ளக் படமெடுக்கிறார்" படித்துப் பாருங்கள்.

3) அவர் நடத்தி வரும் துக்ளக் பத்திரிக்கையில் இது வரை ஒரு நடிகையின் நாபிக் கமலத்தைக் கூடக் காட்டியது இல்லை.சினிமாவில் குப்பை கொட்டிய அவருக்கு இது முடியாதது இல்லை.கவர்ச்சிப் படங்கள் போடாமல் வரும் வெகுசனப் பத்திரிக்கைகளை எண்ணுவதற்கு நம் ஒரு கையில் உள்ள விரல்களே போதும் என்ற இந்த சூழ்நிலையிலும் அவர் கொள்கை.ஹேட்ஸ் ஆப்.

4) அவர் வாதங்கள் எடுத்து வைக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியதே. அது சரியா? தவறா? என்பது வேறு.இன்றளவும் தமிழ்நாட்டின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரிடம் கருத்துக் கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

5) ஆட்சியில் இருப்பவர்களைப் பிரபலங்கள் "இவரு நல்லவரு, வல்லவரு, தங்கமான தங்கமானவரு" என்று மட்டுமே கூறும் இந்த வேளையில் குறைகளைச் சொல்ல இருக்கும் சில பேர்களில் ஒருவர்.வெறும் முரசொலியோ, நமது எம்.ஜி.யார் மட்டும் வெளிவரும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

6) "எங்கே பிராமணண்?", "சாத்திரங்கள் சொன்னதில்லை" போன்ற நூல்களை அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்குப் பிடிக்காத வண்ணம் எழுதியிருப்பார்.

கெட்டவரா????

1) "ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமானால் அவர்கள் மொழியை அழித்தால் போதும்", என்ற கருத்தை உணர்ந்து இன்று வரை டி.வி பேட்டிகளில் ஆகட்டும், மற்ற பேட்டிகளில் ஆகட்டும் அந்த பிராமண பாஷையை விடாமல் இருக்கும் பாஷாபிமானம்.இவருடைய சென்னைத் தமிழ் உலகறிந்தது.ஏன் அதிலேயே பேசலாமே.பெரியார் தாசன் சென்னைத் தமிழில் தான் பேசுவார்.ஆனால் மற்றவர்களின் மொழிப் போராட்டங்களை மட்டும் கிண்டல் செய்யும் ஹிப்பொக்ரெட்.

2) எழுதுவது குருமூர்த்தியாக இருந்தாலும் அந்த தீவிரவாதக் கருத்துகளை அங்கீகரித்து வெளியிடுவது இவர் தான்.உலகெங்கும் இருக்கும் தீவிரவாதத்தை எதிர்க்கும் இவர்கள் இஸ்லாம் சகோதரர்கள் பற்றி வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் படித்து என் நண்பர் ஒருவர் அந்த சமூகமே நமக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்த பின்பு நான் துக்ளக் படிப்பதை நிறுத்தினேன்.

3) பெண்கள் மீதான இவர் பார்வை.இவர் படத்தில் கூட பெண்களைத் தான் அதிகம் ஓட்டுவார்.சரி ஏதோ காமெடி செய்கிறார் என்று நினைத்தால், இப்போது தான் அது காமெடி மட்டும் இல்லை என்று புரிகிறது.

4) பாரதிய சனதா கட்சி என்ன செய்தாலும் சரி. தி.மு.க என்ன செய்தாலும் தவறு என்ற நிலைப்பாடு.இரண்டு கட்சிகளிலும் சரி, தவறு கலந்து உள்ளது என்ற மினிமம் கருத்துடன் கூட ஒத்துப் போகாத நடுநிலையாளர். என் பதின்ம வயதில் என்ன ஏது என்றே தெரியாமல் நான் r.s.s ல் சேர்ந்த போது அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை விதைத்த போது வேண்டாம் என்று விலகினேன்.(அப்போது வயது 10).

நல்லவரா? கெட்டவரா?

பதில்:

தெரியலயேப்பா!!!!!

Sunday, December 9, 2007

கல்லூரி - விமர்சனம்

+2 வில் சேர்ந்து படிக்கும் 9 நண்பர்கள்(4 பெண்கள்,5 ஆண்கள்) மதுரைக்கு அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக B.A வரலாறு பிரிவில் சேர்கிறார்கள்.அங்கு குடும்ப சூழ்நிலை காரணமாக டெல்லியில் படிக்க வேண்டிய பெண் (தமன்னா) தற்காலிகமாக அந்த கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளது.ஆரம்பத்தில் இவர்களோடு ஒட்டாமல் இருக்கும் அந்தப் பெண், ராகிங்கில் இருந்து காப்பாற்றியவுடன் இவர்களோடு நட்பு கொள்கிறது.நட்பின் காரணமாக டெல்லியில் இருந்து படிக்க வரும் வாய்ப்பையும் மறுக்கிறது.

"எங்களுக்குள் காதல் வராது , நட்பு மட்டுமே வாழ்க்கை முழுவதும் தொடரும்" என்ற நண்பர்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தகர்த்து அகிலிற்கும், தமன்னாவிற்கும் காதல் வருகிறது.

இது ச‌ரியா? த‌வ‌றா? என்ற குழ‌ப்ப‌ம் இருவ‌ருக்கும் தீர்வ‌த‌ற்குள் அனைவ‌ரும் ஒரு பேருந்தில் க‌ல்விச் சுற்றுலா செல்கிறார்க‌ள்.இவ‌ர்க‌ள் காத‌ல் நண்ப‌ர்க‌ளுக்குத் தெரிய‌வ‌ரும் வேளையில்....தியேட்ட‌ரில் நிச‌ப்த‌ம்.அனைவ‌ரும் க‌ன‌த்த ம‌ன‌துட‌ன் வெளியே வ‌ருகின்ற‌ன‌ர்.(அப்பாடா கிளைமேக்ஸ் என்ன‌ன்னு சொல்ல‌ல‌)

ப‌ட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ரும் ப‌ஸ் பாட‌ல் காட்சியிலேயே ந‌ம்மைக் க‌ல்லூரி மூடிற்கு கொண்டு வ‌ந்து விடுகிறார் பாலாஜி ச‌க்திவேல்.

ப‌ட‌த்தில் வ‌ரும் ஒவ்வொரு க‌தாபாத்திர‌த்தையும் இய‌ல்பாகவே உல‌வ‌ விட்டிருப்ப‌து ப‌ட‌த்தின் சிற‌ப்பு.எல்லோரும் சினிமாத்தனமாக இல்லாமல் நிச‌த்தில் நாம் பார்க்கும் ம‌னித‌ர்க‌ள் போல‌வே இருக்கிறார்க‌ள்.

அகிலும்,தமன்னாவும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள். க‌ய‌ல்விழியாக வ‌ரும் பெண் ப‌ட்ட‌ய கிள‌ப்பி உள்ளார்.குடும்ப‌ நிலை உண்ர்ந்து ப‌டிப்ப‌து, த‌ப்பு செய்ப‌வ‌ர்க‌ளின் ச‌ட்டையைப் பிடிப்ப‌து, த‌ம‌ன்னா த‌ன் காத‌ல் ப‌ற்றி சொல்லும் போது அதைப் புரிந்து கொள்வ‌து என அத்த‌னையும் அழ‌கு.

ஆதில‌ட்சுமியாக வ‌ரும் பெண், ச‌ர‌வ‌ண‌ணாக வ‌ரும் பைய‌ன் அகிலின் தங்கை, தமன்னாவை ஒரு தலையாக லவ் பன்னும் சீனியர் என அனைவ‌ரும் நம் நினைவில் நிற்பார்க‌ள்.

ஒரே காட்சியில்,9 மாண‌வ‌ர்க‌ளின் குடும்ப க‌ஷ்ட‌ங்க‌ளையும் உறுத்தாம‌ல் காட்டியிருப்பது க‌விதை.

இரட்டையர்களாக வந்து "ஏங்க நீங்க சொல்லுங்க? ஏன் நீங்க சொல்லக்கூடாதா" என்ற ஒரு டயலாக் மட்டும் வைத்துக் கொண்டு படம் முழுக்க வந்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு பேர்.

பாலாஜி ச‌க்திவேல் காட்சிக‌ளால் க‌விதை வ‌டிக்கிறார் என்றால்,நா.முத்துக்குமார் க‌விதைக‌ளால் காட்சி அமைக்கிறார்.(ச‌ரியா? த‌வ‌றா? பாட‌ல் மிக‌ச் சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.)பாடல்கள் அத்தனையும் அருமை.

செழிய‌னின் கேமரா இய‌ல்பாக‌ உறுத்தாமல் எல்லாவற்றையும் ப‌ட‌ம் பிடித்துள்ள‌து.

ஹைகோர்ட்டில் தூக்குத் த‌ண்ட‌ணை உறுதியாகி உள்ள‌ இந்த சூழ‌லில், ஆந்திர‌ அர‌சிய‌ல் போல் காட்டினாலும் அந்த‌ ச‌ம்பவ‌த்தை அழுத்தமாக காட்டியுள்ளது இயக்குநரின் துணிச்சல்.(ஐயையோ கிளைமேக்ஸ சொல்லிட்டேனா???)

இவ்வளவு இருந்தும் படம் சற்று மெதுவாக நகர்வது போன்ற உணர்வு.படத்தில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன.(உ.ம் க‌ய‌ல்விழி கோபிப்ப‌து, இர‌ட்டைய‌ர்க‌ள் காட்சி)

கதையும் ஏப்ரல் மாதத்தில்,பிரியாத வரம் வேண்டும் போன்ற‌ க‌ல்லூரிக‌ளில் பார்த்த‌து தான்.(காத‌ல் ப‌ட‌த்தில‌ ம‌ட்டும் க‌த‌ புதுசோ??)

ந‌ம் உண‌ர்ச்சிக‌ளை வைத்து இவ‌ர்க‌ள் வியாபார‌ம் செய்வ‌து ம‌ட்டும் நெருட‌ல்.

ப‌ரிந்துரை:

எல்லோரும் பார்க்க‌லாம்.

Wednesday, December 5, 2007

தமிழ்சினிமாவும்‍ - பிள்ளைக் காதல்களும்

"அறியாத வயசு, புரியாத மனசு
இரண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்"

யுவனின் இசையில் இளையராஜாவின் வாய்சில் மனசை அள்ளும் பாடல்.பாடலைக் கேட்டு முடித்த பிறகு என்றாவது நமக்கு குற்ற உணர்வு வந்திருக்கிறதா???.நம் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது நாம் அவ‌ர்கள் பருவத்திற்குப் போகாமல் அவர்களை நம் பருவத்திற்கு இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை.

1990 ல் வெளிவந்த அஞ்சலி படத்தில் மணிரத்தினம் ஆரம்பித்து வைத்த கூத்து இது.அதில் தான் குழந்தைகளின் வாழ்க்கையைக் காட்டுகிறேன் என்று அதுகள் "I LOVE YOU",சொல்வதையும், காதலுக்கு ஹெல்ப் செய்வது போலவும் வயதுக்கு மீறிய செய்கைகளைப் பதிவு செய்திருப்பார்.நல்ல வேலையாக தாலி சென்டிமென்ட் (சின்னத்தம்பி) அம்மாசென்டிமென்ட் படங்களும் அப்போது வந்ததாலும்,பெண்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துக்கொண்டிருந்ததால் அவ்ர்களுக்கு இது பிடிக்காது என்பதாலும் மற்றவர்கள் யாரும் இந்த வழியைப் பின்பற்றவில்லை.

செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை" மீண்டும் பிள்ளைப் பருவக் காதலைக் கையில் எடுத்தது.சொல்லப்போனால் அவர் அதில் ஒரு படி தாண்டி உடலுறவையும் காண்பித்து தமிழ்சினிமாவை உலகத் தரத்திற்கு (??) உயர்த்தினார்.

இதைத் தொடர்ந்து இதே கதை அம்சம் கொண்ட சுமார் 15 படங்களுக்கு பூசை போடப்பட்டது.நல்ல வேளையாக ஒன்றும் வரவிலை.வெளிவந்த +2, பருவம், கிச்சா போன்ற படங்களும் ஊத்திக்கொண்டன.

தங்கரின் "அழகி" இந்த நேரத்தில் வெளிவந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.எல்லோரும் தங்கள் இளவயதுக் காதலுடன் கம்பேர் செய்து பார்த்து இது ஒரு மிகச் சிறந்த படம் என்று certificate கொடுத்தார்கள்.

அடுத்து வந்த "ஆட்டோகிராப்" இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.ஒரு ஆண் தன் வாழ்க்கையில் சந்தித்த / காதலித்த 3 பெண்களுக்கு, 4 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக பத்திரிக்கை வைக்கும் நாயகனைப் பற்றிய கதை இது.இதிலும் சேரன் பள்ளிக்கூடக் காதலைக் காட்டியிருப்பார்.திருவள்ளுவரையே எதிர்க்கும் பெண்ணிய வாதிகள் கூட இந்தப்படத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில்,ஒரு பெண் தன் கல்யாணத்திற்கு இதேபோல் பத்திரிக்கை வைக்கப் போனால் ஏற்றுக் கொள்வார்களா?? என்ற கேள்வி கூடக் கேட்காமல் வழக்கம் போல இது உலகத்தரமான படம் என்று கூடிக் கும்மிஅடித்தார்கள்.

பாலாஜிசக்திவேலின் "காதல்" வெளிவந்தது.படத்தை மேக்கிங்,மற்றும் திரைக்கதையால் எங்கோ கொண்டு சென்றிருப்பார்.ஆனால் அதிலும் இதே பள்ளிக்கூட காதல் எழவு தான்.அந்தப் படம் வெளிவந்த போது அப்படத்தில் வருவதாக காட்டப்படும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் நிசத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்."இப்படத்தை பார்த்து விட்டு எங்கள் பள்ளி பிள்ளைகள் கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.எனவே படத்தைத் தடை செய்யவேண்டும்",என்று தொடர்ந்தார்.தினத்தந்தியில் இந்த செய்தி 8 ம் பக்கத்தில் யாரும் படிக்காத ஒரு இடத்தில் வந்தது.அனைவராலும் இது உலகத்தரமான திரைப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்சினிமாவின் மைல்கல்லில் ஒன்று என்று அழைக்கப்பட்டது.

வெயில் (பாடலில்) ஆகட்டும், பருத்திவீரன் ஆகட்டும், தமிழ் M.A ஆகட்டும்,ஒன்பது ரூபாய் நோட்டு ஆகட்டும் நல்ல படங்கள் என்று சொல்லப்படும் எல்லாப் படங்களுமே பிள்ளைக்காதலைத் தான் காட்டுகிறார்கள்.

இந்த லிஸ்டில் தொலைக்காட்சியில் வரும் "கனா காணும் காலங்களும்" சேர்த்தி.

படம் எடுப்பவர்களுக்கு இது வாழ்க்கை, வியாபாரம்.எது ஓடுமோ அதைத் தான் காட்டுவார்கள்.நல்ல படங்களைத் தேர்ந்து எடுப்பது நம் கையில் தான் உள்ளது.பல நல்ல படைப்புகளை / படைப்பாளிகளை நாம் தான் தேர்ந்து எடுத்து அங்கீகரித்து உள்ளோம்.இளையராஜாவை அவர் ஆகச் சிறந்த பாடல்களைக் கொடுத்த போது தலையில் வைத்து ஆடியதும் நாம் தான்.அவர் மோசமான பாடல்களைக் கொடுத்த போது அங்கீகரிக்க மறுத்ததும் நாம் தான்.

17 வயது வரை உள்ள பருவம் காதலிக்க ஏற்றது அல்ல.அந்த வயதில் காதலித்துக் கொண்டிருந்தால்,அந்த வயதில் கிடைக்க வேண்டிய அனுபவம்,நட்பு,படிப்பு,விளையாட்டு,அறியாமை,அறிந்துகொள்ளல்,பாராட்டு,மகிழ்ச்சி இன்ன பிற வஸ்துக்களையும் இழக்க நேரிடும்.20 வயதுக்கு மேல் காதலிப்பவர்களுக்கே அது காதலா?? இனக்கவர்ச்சியா?? என்று தெரியாத நிலையில் பாவம் சிறுவர்களை விட்டுவிடுவோம்.

Tuesday, December 4, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்

முதலில் கதை.

பத்திரக் கோட்டை கிராமத்தில் ஊர் மெச்ச வாழ்ந்து வரும் தம்பதிகள் மாதவபடையாச்சி,வேலாயி.அவர்களுக்கு 3 ஆண்குழந்தைகள்,2 பெண்குழந்தைகள்.விவசாயியாக இருக்கும் மாதவர் கொடையாளியாகவும் உள்ளார்.ஊர் மக்கள் பிரச்சினையை அவ்வப்போது பணம் கொடுத்தோ / கொடாமலோ தீர்த்து வைக்கிறார்.அவர் நண்பர் பாய்க்கு(நாசர்) தொழிலில் முன்னேற தம்பதிகள் இருவரும் முகம் சுளிக்காமல் பண உதவி செய்கிறார்கள்.அவரும் தோல் தொழில் வியாபாரம் ஆரம்பித்து முன்னேறுகிறார்.

பிள்ளைகள் வளர்கிறார்கள்.கல்யாணம் முடித்த முதல் இரண்டு பையன்களும் தங்கள் மனைவி மற்றும் மாமாவால் (நடன இயக்குநர் சிவசங்கர்)தூண்டப்பட்டு அப்பாவை எதிர்க்கிறார்கள்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

கடைசிப் பையன் ஊரில் துணி துவைக்கும் சாதியை சார்ந்த பெண்ணைக் காதலிக்கின்றான்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

இதனால் மனம் உடைந்த மாதவரும்,வேலாயியும் ஊரை விட்டே வெளியேறி ஆம்பூரில் இருக்கும் நாசரிடம் தஞ்சம் அடைகிறார்கள்.ஆடு மேய்க்கும் தொழிலை மேற்கொள்கிறார்கள்.

சில ஆண்டுகள் கழித்து கடைசி பிள்ளையை ஏதேச்சையாக பார்க்கும் மாதவர் பிள்ளை நிலை கண்டு வெதும்பி திரும்பி ஊருக்கே செல்ல முடிவு எடுக்கிறார்கள்.தீடீரென பாம்பால் தீண்டப் பட்டு வேலாயி இறந்துவிட ஊருக்குப் போகும் முடிவைக் கை விடுகிறார் மாதவர்.

நாசரும் உடல் நலிவுற்று பெங்களூரு சென்று விட,பிறகு நாசரின் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்டு ஊருக்கே செல்கிறார்.அங்கு பிள்ளைகள் நிலை கண்டு மனம் வெறுத்து உயிர் விடுகிறார் மாதவர்.

சத்தியமா இதாங்க கதை.

பஸ் டிக்கெட்டிற்கு முழு பணம் இல்லாமல் பண்ருட்டி பஸ்ஸில் ஏறும் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்துவிடுகிறார் சத்தியராஜ்.திருடு போன பலாப்பழங்களைக் கண்டு பிடிப்பது, கால் மேல் கால் போட்டுத் தூங்குவது, கத்தும் குருவி என்னவென்று சரியாகச் சொல்வது, என மாதவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.விருதை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடித்தாரோ என்னவோ பல இடங்களில் இயல்பு மிஸ்ஸிங்.பத்திரக்கோட்டை சிலாங்கும் அங்கங்கே மிஸ்ஸிங்.

அர்ச்சனா எப்போதும் அழத் தயாராகவே உள்ளார்.முருகனையும், வாழுமுனி ஆண்டவனையும் அடிக்கடி கூப்பிட்டு நம்மைக் கடுப்பேற்றுகிறார்.

சிவசங்கர், ராமலிங்கமாக வருபவர், ராமலிங்கத்தின் காதலியாக வரும் பெண், அழகியில் "ஒளியிலே தெறிவது" பாட்டிற்கு வருவாரே அவர், அனைவரும் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான தேர்வுகள்.

படத்தில் குறிப்பிடத் தகுந்த மற்றோர் அம்சம் எடிட்டிங். B.லெனின் விளையாடியுள்ளார்.காமிராவும் அழகாக உள்ளது. இசை சுமார்.பல பாடல்கள் எங்கோ கேட்டது போன்ற உணர்வு.

குறைகளே இல்லையா?? இருக்கிறது.அது இல்லாமல் எப்படி.

சத்தியராஜ்,அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக சொல்லப்பட்டு இருப்பது
சரியான சப்பை.குடும்ப வன்முறை ஜாஸ்தி.யாராவது யாரையாவது அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

படம் முழுக்க சோகம்.மனிதனின் சோகங்களைப் பதிவு செய்வது தான் நல்ல படம் என்ற கருத்தை எப்போது தான் மாற்றுவார்களோ?? தெரியவில்லை.

இதிலும் 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் காதலிக்கிறது.லிப் கிஸ் கொடுக்கிறது.எல்லாமும் செய்கிறது.ஸ்கூல் பசங்களைக் கொஞ்சம் படிக்க விடுங்கப்பா ப்ளீஸ்.

படம் ரொம்ப நீளம்.அந்த ஊர் ஸ்லாங் பாதி பேத்துக்கு வரவில்லை.இருந்தாலும் மதுரை,நெல்லை, தேனி கிராமங்களையே பார்த்து வந்த நமக்கு பத்திரக்கோட்டை சற்று புதிது தான்.

கடைசி கிளைமாக்ஸ் ஒரு நல்ல‌ சிறுகதை.வாழ்த்துக்கள் தங்கர்.

பரிந்துரை ‍- பார்க்கலாம்(எல்லாரும் அல்ல)

பின்குறிப்பு:(தியேட்ட‌ரில் ந‌ட‌ந்த‌து)

1)இந்த‌ப் ப‌ட‌ம் வேணாம்,வேணாம்னு சொன்னேன் கேட்டியா?? (இர‌ண்டு டீனேஜ்க‌ள்)

2)இவ்வ‌ள‌வு டிக்கெட் வாங்கி வ‌ச்சிருக்கு,ஒர்த்த‌னும் வ‌ர‌ மாட்டேங்கிரானுங்க‌ளே(பிளாக் டிக்கெட் விற்ப‌வ‌ர்)