Monday, September 29, 2008

ராமன் தேடிய சீதை - ‍ ஆணாதிக்கப்படமா???

நேற்று மாலை உதயம் திரையரங்கை அடைந்த போது மணி மாலை 6.45. "படம் இன்னும் போடல என்று 6.30 காட்சி டிக்கெட்டை அவர் என் கையில் திணித்த போது தொடங்கியது ஏமாற்றம்...

நான் தியேட்டரில் உள்ள அனைவரிடமும் திட்டு வாங்கி என் இருக்கையை அடைந்த போது பசுபதி எபிசோடு ஓடிக்கொண்டிருந்தது.

பசுபதி பார்வையற்றவர் கதாபாத்திரத்திற்குச் செய்த அப்சர்வேசனை ரேடியோ ஜாக்கி பாத்திரத்துக்கும் செய்திருக்கலாம். நம் ரேடியோ ஜாக்கிகள் எவ்வளவோ பரவாயில்லை.சரியான மொக்கை.கஜாலாவா இது? கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்.

ஏற்கனவே உழவன் படத்தில் பிரபு, நாட்டாமை படத்தில் கவுண்டமணி, போன்றோர் செய்த தனக்கு பெண் கிடைக்காமல் ஏங்கும் நாயகன் பாத்திரம் தான்.சேரன் எத்தனை படம் நடித்தாலும் இப்படியே தான் நடிப்பார் போலிருக்கிறது. ஒரு சின்ன முன்னேற்றம்....ம்ஹீம்... நல்லவேளை கையில் புத்தகத்தை வைத்து கொண்டு ஹீரோயினை "என்னடா?? ஏண்டா?? " என்று வசனம் பேசவில்லை.அதுவரை தப்பித்தோம்.

பத்திரிக்கைகளில் மற்றோர் ஆட்டோகிராப் என்று போட்டிருந்த போதே தெரிந்துவிட்டது. இதுவும் ஒரு ஆணாதிக்கப் படமாகத்தான் இருக்கப்போகிறது என்று. ஆட்டோகிராப் ஒரு தெளிவான ஆணாதிக்கப்படம். யோசித்துப் பாருங்கள்.... ஒரு ஹீரோயினுக்கு முன்பே இரண்டு காதலர்கள் + ஒரு நண்பர் இருந்து அவள் நான்காவது ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் மூன்று பேரும் வந்து பெருமூச்சு விடும் ஒரு உச்சக்கட்ட காட்சியைத் தமிழ்சினிமாவில் கற்பனை செய்து பார்க்க முடியுமா??. வடிவேலு மருதமலையில் இக்கதையை நகைச்சுவை என்ற பெயரில் பயன்படுத்தியிருப்பார்.

தொடைகளுக்கிடையே ஒழுக்கத்தைப் புதைத்து வைத்துள்ள நம் கலாச்சாரத்தில் ஒரு பெண் இரண்டு ஆண்களோடு மாலை மாற்றி வந்த போஸ்டரைப் பார்த்துவிட்டே எம்பி எம்பிக் குதித்தார்கள். ஆனால் ஆட்டோகிராப் உலகத்திரைப்படமாம்???.

இப்படத்திலும் கதாநாயகன் பார்க்கும் பெண்கள் எல்லாம் இவனை வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் இவனை வேண்டாம் என்று சொன்ன பெண் மிகவும் கேவலமான வாழ்க்கை வாழ்வது போல் காட்டி, "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று ஏக்கத்தோடு கேட்கும் காட்சியில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்???

படத்தில் ஓட ஓட காமெடி கூடிக்கொண்டே வருகிறது. படத்தில் சேரன் என்னவோ மிக சீரியஸாகத்தான் நடித்துள்ளார். ஆனால் தியேட்டரில் தான் சிரிக்கிறார்கள். இவ்வளவு சீரியஸான காமெடியை இதுவரைப் பார்த்ததில்லை.

படத்தில் குறிப்பிடத்தகுந்த பாத்திரம் மணிவண்ணன். வித்யாசாகரின் இசையும் ஆங்காங்கே நன்றாகத்தான் உள்ளது.

நிதின்சத்யா எபிசோடு. திருடப் போன இடத்தில் பெண் அழகாக இருந்தால் காதல் வந்துவிடமா??. காதல் வருவதற்கான நல்ல‌ காரணங்களை நம் இயக்குநர்களே இதை விட நிறைய யோசித்து விட்டார்கள் பாஸு...

இயக்குநர் தன் பெயரை மட்டும் படத்திற்கு படம் வித்தியாசமாக வைத்துக் கொண்டால் (ஜெகன், ஜெகந்நாத்) போதாது. இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க வேண்டும்.

கடைசியாக ஒரு பின்குறிப்பு:

நம் ரசிகர்கள் பாவம். இந்த பரவாயில்லாத படத்தையெல்லாம் மிகச் சிறந்த படம் என்று சொல்லும் அளவிற்கு 2008 ல் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.இதற்கு ஒரே தீர்வு அரசாங்கமே படத்தைப் பார்த்து விட்டு இப்போது "காதலில்விழுந்தேன்" படத்தைச் செய்வது போல் தியேட்டர்களில் திரையிடா வண்ணம் பார்த்துக்கொள்வதுதான்.

சன்டி.வியில் என்னா ஒரு புரட்சி. எல்லா தலைவர்களும் கடும் கண்டணங்களைத் தெரிவிக்கிறார்கள்.எதிர்காலம் சற்று பயமாகத்தான் உள்ளது.:-(