Monday, June 21, 2010

ராவணன் - படத்தின் அரசியல்

மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ள ராவணன் திரைப்படத்தின் இசை,ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,கலை, படமாக்கப்பட்டிருக்கும் இடம் போன்றவைகள் பற்றியும், கதை....(மல்லிச்சூ...அப்படி ஒன்றே விளம்பரத்தில் காணப்பட வில்லை)திரைக்கதை, வசனம் போன்றவைகள் பற்றியும் நிறைய வந்துவிட்டதால் அதன் அரசியல் குறித்து மட்டும் இங்கு பார்ப்போம்.

மணிரத்னம் மௌனராகம், அஞ்சலி, தளபதி, நாயகன், அலைபாயுதே என்று எடுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தேசிய நீரோட்டத்தில் கலந்து இந்திய / உலக சந்தைகளுக்காகவும் சேர்த்து எடுக்கப்பட்ட ரோஜா, குரு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் அரசியல் தான் உற்று நோக்கத்தக்கது.

ரோஜா படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், இந்துவைக் கதாநாயகனாகவும் காட்டி மதசார்பின்மையைப்(!) போதிக்கத் துவங்கியதில் இருந்து தொடர்கிறது மணியின் அரசியல்.

குரு படத்தில் அம்பானியைக் கதாநாயகனாக்கி நம்முன் உலவவிட்டதற்கு சம்பளம் பிக் பிட்சர்ஸின் ராவணன்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”அமுதா” வயதொத்த குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து காட்சி அமைத்து நம்மிடையே சமாதானம் குறித்த வகுப்பும் எடுத்திருப்பார்.

ராவணன் திரைப்படத்தில், ராவணனைக் கதாநாயகனாக்கி, ராமனை வில்லனாக்கி, எம்.ஆர் ராதா, ஆர்.எஸ் மனோகருக்குப் பின்பு புரட்சிகலைஞராகி இருப்பார் நம் மணிரத்னம் என்று பார்த்தால்....

ராவணன் நல்லவனாகவே இருந்தாலும், அவன் அடுத்தவன் மனைவியைப் பார்த்தவுடன், அவள் சற்று வெள்ளையாக இருந்தவுடன் அவள் மீது காதல் வயப்படும் பலவீனன் என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதைக் காட்டிய அளவிற்கு,ராவணன் நியாயமான விடயங்களுக்குத் தான் போராடுகிறான் என்பதை அழுத்தமாகக் காட்ட மணிக்கு தெரியாது என்றால் அதை நம்பத் தயாரில்லை.வெறும் மேட்டுக்குடி என்ற வார்த்தையை மட்டும் வைத்து ஒரு புரட்சியாளன் கதையை சொல்ல முடியும் என்று மணி நம்பியிருப்பதையும் நம்மால் நம்ப முடியவில்லை.

ராமன் என்னதான் மனைவி மீது சந்தேகப்பட்டாலும், அது ராவணனைப் பிடிக்க மேற்கொள்ளும் ராஜ தந்திரம் என்பதையும் மிக அழுத்தமாகக் காட்டியுள்ளார்.

அது மட்டுமில்லாமல், ராமபிரான் (கடவுள்) மீது வைக்கப்படும் விமர்சனமான மனைவியைச் சந்தேகப்படல் என்ற விடயத்தைக் கூட “சீதையும் மையல் கொள்வாள்” என்று மைல்டாகக் காட்டி ராம பக்தர்களையும் சந்தோசப்படுத்தியுள்ளார்.

இந்தியில் இந்த அரசியல்களுக்காகவும், தமிழில் மணிரத்னம் என்ற அறிவு ஜீவி பிராண்டிற்காகவும் நாம் கொடுக்கப்போகும் விலை சுமார் 120 முதல் 250 ஓவாக்கள்...

வாழ்க தமிழ்சினிமா..........

Monday, June 14, 2010

செம்மொழி மாநாடு - ஏன் புறக்கணிக்கக் கூடாது ?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் சூன் 23 தொடங்கி சூன் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதில் கணிணித் தமிழ் சார்பில் அமைக்கப்படும் அரங்கில் கலந்து கொள்ளலாம் என்று என் பெயரினைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கச் சொல்லி சில நண்பர்கள் மின்னஞ்சல்களிலும், வலைப்பதிவுகளிலும் கோரிக்கை விடுத்து விவாதம் செய்து வருகின்றனர்.

வலையுலகம் சார்பில் ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று என் பார்வையிலிருந்து எழுதுகிறேன்.

தமிழ் வலையுலகம் ஆரம்பிக்கப்பட்டு 6 முதல் 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்னும் இது பரவலாகப் பலரைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. சில நாட்களுக்கு முன் ”பிரபல”
என்ற வார்த்தை குறித்த சர்ச்சை வெளியான போது மூத்த வலைப்பதிவாளர் ஒருவர் கூறியிருந்த கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது. “இந்த தமிழ் வலையுலகில் மொத்தம் 4000 பேர் தேறினாலே பெரிய விடயம்”.

ஆம்...அது உண்மைதான் என்பது “பிரபல” பதிவுகளுக்கு வரும் ஹிட்சுகளை வைத்துச் சொல்லிவிடலாம்.

இன்றைய தமிழ் ஊடகங்களின் நிலையையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகச் சிறந்தது என்று சொல்லப்படும் ஊடகம் கூட தமிழகத்தின் செல்லக்குரல் அல்கா அஜித்தா? இல்லை ரோஷனா? என்று மக்களைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டுவரும் இச்சூழலில் மக்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஊடகம் இந்த வலையுலகம்.

அடுத்த பத்தாண்டுகளில் இணையம் இன்னும் பரவலாக்கப்பட்டு வீடு தோறும் இருக்கப் போகும் சூழ்நிலையில், மக்களுக்கு இப்போதே வலையுலகம் குறித்த அறிமுகம் அவசியம்.

தி.மு.க அரசு நடத்தப் போகும் இந்த மாநாடு போன்றதொரு மாநாட்டை வேறெந்த வகையிலும் நாம் (பதிவர்கள்) நடத்தி விட முடியாது.

நம் கொள்கைகளோ / இயக்கமோ / கட்சியோ / நிறுவனமோ வளர வேண்டுமென்றால் பொதுஜனத்தொடர்பு மிகவும் அவசியம். இம்மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் அத்தகைய மிகப்பெரிய பொதுஜனத் தொடர்பைப் புறக்கணிக்கிறோம். மாநாட்டிற்கு வரப்போகும் ஆட்சியாளர்கள் முதல் அடி மட்டத் தொண்டன் வரை நம் வலையுலகம் பற்றித் தெரிந்து கொள்ளட்டும்.

மாநாட்டில் பங்கு பெறுவோம். வலையுலகில் நிறைந்து கிடக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய, ஈழ, மாவோயிஸ, திராவிட, ஆன்மிக, பெண்ணிய, விமர்சன, இலக்கிய, மோதலிய, சர்ச்சைகளிய எழுத்துக்கள் அனைத்தையும் பொதுஜனத்திடமும் கொண்டு போய் சேர்ப்போம்.