Thursday, November 5, 2009

எனக்கு கல்யாணம் .......எனக்கு கல்யாணம்

அப்பாவும், அம்மாவும் திடீரென்று பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு கடந்த ஜனவரி மாதம் திடு திப்பென்று வந்தார்கள்.

"உனக்கு பொண்ணு பாக்கலாம்னு இருக்கோம்....நீ என்ன சொல்ற‌"

"இப்பவே என்ன அவசரம் ? இன்னும் 2 வருஷம் போட்டுமே". (இப்பவே வயது 35 மாதிரி தெரியுது. இன்னும் 2 வருஷம் போனா கிழிஞ்சுறும்)

"அதெல்லாம் எங்களுக்கு எப்ப பண்ணனும்னு தெரியும். ஆனா நாங்க பேச வந்தது வேற..." என்று இழுத்தார்கள்.

நேற்று நீயா...நானா ரேஞ்சுக்கு காதல் திருமணத்தைப் பற்றிப் பேசிய விளைவுதான் அது என்பது புரிய எனக்கு சற்று நேரமானது.

"நானெல்லாம் எந்தப் பொண்ணையும் லவ் பண்ணல‌. (பொண்ணுங்கள்லாம் ரொம்பத் தெளிவா இருக்காங்க). நீங்களே பாருங்க".

அப்போது ஆரம்பித்தது. அப்பாவும் அம்மாவும் ஓவர்டைம் வேலை எல்லாம் பார்த்தார்கள்.

"பையன் நல்லாத்தான் இருக்காரு...ஆனா குண்டா இருக்காரு"

"பையன் இஞ்ஜினியரிங்னு சொன்னாங்க....ஆனா ஏதோ தலகாணி கம்பெனில வேலை செய்றாறு.... நான் படிச்சது டெக்ஸ்டைல்ங்க"

"பையனுக்கு என்ன வருமானம் வரும்?............. பூ இவ்வளவுதானா ஏப்பா நீ பேசாம பாரின் கீரின் ட்ரை பண்லாம்ல.

"பையனுக்கு ஆயல்யம் நட்சத்திரமா? ஐயையோ !!!!!!!!!!!!! பெண்ணின் அம்மா அலறிய போது கோபம் வந்தது. தன் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில்தான் அலறினார்கள் என்று தெரிய வந்த போது சிரிப்பு வந்தது.

"ஏம்பா அவன் போட்டாவையும், ஃபுல் டீடைல்ஸையும் முதல்ல அனுப்புங்க. பாத்துட்டு புடிச்சிருந்தா மட்டும் அவன வந்து பாக்கச் சொல்லுங்க. சும்மா இப்படி வந்து ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கே கோபம் வந்திடும்" தம்பி அப்பாவை அரட்டினான்.

இவ்வளவையும் மீறி கோவில்பட்டியில் ஒரு கோவிலில் வைத்து பார்க்கப்பட்ட கெளரி என்னைப் பார்த்து பிடிச்சுருக்கு என்று சொல்லியவாறே 5 ஸ்டார் சாக்லேட்டை நீட்டியது இன்று திருமணம் வரை வந்துள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் (கோவில்பட்டி அருகில்) எனக்குத் திருமணம் நடக்க உள்ளது. அது மட்டுமின்றி நவம்பர் 29 ஆம் தேதி சேலத்தில் ரிசப்ஷனும் நடக்க உள்ளது. இரு நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து எங்களை வாழ்த்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பத்திரிக்கை இணைக்கப் பட்டுள்ளது.அனைவரும் வருக.

என்றென்றும் அன்புடன்

செல்வம்





Saturday, May 30, 2009

ஏஞ்சல்ஸ் அண்ட் டீமென்ஸ்

ஆனந்த தாண்டவம், சர்வம், சிவபுரம் என்று வாராவாரம் ஏதோ கோவிலுக்கு நேர்ந்து விட்டாற் போல் பலிகடா ஆகிக்கொண்டே வந்ததற்கு சற்றே ஆறுதலாக அமைந்தது ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ்.

ஏற்கனவே "தி டாவின்ஸி கோட்" படத்தை 3 முறை தமிழில் பார்த்தும் முழுதாகப் புரியாவிட்டாலும் :-(‍‍ அந்தப் படம் தந்த பிரமிப்பு அகலாததால் தோரணையில் இருந்து தப்பித்து இப்படத்திற்குப் போனோம்.

இதுவும் டான் பிரவுன் எழுதிய நாவல் தான்.

வாடிகன் சிட்டியில் போப் திடீரென இறந்து போவதில் ஆரம்பிக்கிறது கதை. போப்பிற்கு அடுத்த இடத்தில் உள்ள 4 பாதிரியார்களும் கடத்தப் படுகிறார்கள். இதோடு சேர்த்து உலகத்தின் ஆரம்ப உயிர்த்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கிடைத்த சக்தி வாய்ந்த வஸ்துவும் (ஆண்டிமெட்டர்) காணாமல் போகிறது.இவ்விரண்டையும்
செய்தது இலுமினாட்டி என்ற வாடிகன் சர்ச்சிற்கு எதிரான இயக்கத்தினர்தாம் என்பதும், அவர்கள் நோக்கம் வாடிகன் சர்ச் பாதிரியார்களையும் வாடிகன் நகரையும் அழிப்பது தான் என்பதும் தெரிய வருகிறது.

இந்நிலையில் பேராசிரியர் லாங்டனின் உதவியை நாடுகிறது போலீஸ். லேங்டனும், போலீஸும் சேர்ந்து பாதிரியார்களிக் காப்பாற்றினார்களா? வாடிகன் சிட்டி காப்பாற்றப்பட்டதா? உண்மையிலேயே இதைச் செய்தது இலுமினாட்டி
அமைப்பினர் தானா? என்ற கேள்விகளுக்கு எல்லாம ஆத்திகம் / நாத்திகம் / விஞ்ஞானம் எல்லாம் கலந்து கட்டி பரபரவென்று விடை சொல்லியிருக்கிறார்கள் படத்தில்.

லேங்டனாக டாம் ஹேங்க்ஸ். ஹீரோ என்றால் ஆய் ஊய் என்று கத்தி காதைப் பஞ்சராக்குவது / பஞ்ச் டயலாக் பேசுவது
மினிமம் 3 ஹீரோயின்கள் உடன் நடிப்பது போன்ற மிகச் சிறந்த விஷயங்களையெல்லாம் செய்யாமல் அமைதியாக, அறிவுப் பூர்வமாக, அழகாக நடித்து நம் ஹீரோக்களையெல்லாம் கேலி செய்துள்ளார்.

ரோன் ஹாவர்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஞ்ஞானமா ? ஆத்திகமா என்ற கேள்வி வரும் போதெல்லாம் மனுசன் புகுந்து விளையாடியுள்ளார். கடவுள் பற்றிய கருத்துக்கள் வரும் போதெல்லாம் பெரியார் புத்தகம் படிப்பது போல் இருந்தது.

வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் எல்லாமே நன்றாக உள்ளது.

தி டாவின்ஸி கோட் ‍ தொடர்ச்சி என்பதற்காக அப்படியே அதே பார்முலாவையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா?
அதை விட இந்தப் படம் கொஞ்சம் இலுவை அதிகம். தாக்கம் குறைவு.

நம் நாட்டில் உள்ள‌ மதங்களில் கூட எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளது. அதை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சொல்ல முடியும். ஆனால் நமக்கு கிடைத்த பாக்கியமோ " ராஜாதிராஜா / சர்வம் என்ற அளவில் தான் உள்ளது.

Saturday, April 11, 2009

ஆனந்த தாண்டவம் - ‍ சுஜாதாவிற்கு அவமரியாதை

ஏற்கனவே பிரியா, கரையெல்லாம்செண்பகப்பூ, விக்ரம் என்றெல்லாம் எடுத்து சுஜாதாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட தமிழ்சினிமா இன்று ஆனந்த தாண்டவம் எடுத்து நம்முடைய வயிற்றெரிச்சலையும் சேர்த்துக் கொட்டிக் கொண்டுள்ளது.

படத்தின் கதை தெரிய வேண்டுமானால் தயவு செய்து சிரமம் பார்க்காமல் "பிரிவோம் சந்திப்போம்" நாவலைப் படித்து விடுங்கள். ஏனெனில் படத்தைப் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ரஜினியாலேயே கணேஷ் கதாபாத்திரத்தை நடிக்க முடியாமல் பில்லா / ரங்கா ரேஞ்சிற்கு நடித்திருந்த‌ போது....பாவம் சித்தார்த் மட்டும் ரகு பாத்திரத்தை நடித்து விட முடியுமா என்ன? ஆனால் அவர் எதற்காக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு
நடித்தார் என்று நேற்று இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் விடை கிடைக்கவில்லை. நடிப்பா ? அப்படின்னா என்னப்பா ? எதுனா ரேசன் கடைல கலைஞர் படம் போட்டுக் கொடுக்கிறாங்களா என்று கேட்டுள்ளார்.

மதுமிதாவாக தமன்னா. கரையெல்லால் செண்பகப்பூ படத்தில் பொன்னியாக வந்து சிரிப்ரியா வந்து எப்படி கொடுமைப் படுத்தினாரோ அதைவிட ஜாஸ்தியாக கொடுமைப் படுத்தியிருக்கிறார் தமன்னா.

ரத்னாவாக ருக்மணி. ரகுவின் காதலைக் காதலித்து ரகுவையே கைப்பிடிக்கும் பாத்திரம்.

சார்லி, கிட்டி, கிருஷ்னா என்று நிறைய பேர் இருந்தும் யாரும் நம்மைக் காப்பாற்றவில்லை.

சுஜாதா வசனம் மட்டும் எழுதிய படங்களிலேயே இதை விட சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். சுஜாதாவின் இக்கதையைத் தேர்வு செய்ததே சரியான சொதப்பல். நாவலின் எந்த பாத்திரத்தின் குணநலன்களும் நம்மை பாதிக்காத நிலையில் சுஜாதா தன் எழுத்தின் மூலம் மட்டுமே நம்மைப் பாதிப்படைய செய்யும் திறமை படைத்தவர். அதைக் காட்சிப்படுத்தும் போது வேறு எப்படி இருக்கும்? இபப்படித்தான் இருக்கும். அதிலும் மதுமிதாவின் குழந்தைத்தனத்தைக் காட்டுகிறேன் என்று சித்தார்த்தின் காதில் வந்து ஓ என்று கத்திய போதுநமக்கும் ஓ என்று அழ வேண்டும் என்பது போல் தோன்றியது.

ஜி.வி.பிரகாஷ் இப்படியே இசை அமைத்துக் கொண்டு போனால் இவர் இசைக்காகவே படம் ஓடாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இயக்குநர் காந்திகிருஷ்னா இப்படம் எடுத்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடம் நம்பிக்கை விதையைத் தூவியுள்ளார். (இப்படியெல்லாம் எடுக்கிறாங்க...இதைவிட நல்லா நாம எடுக்கமாட்டோமா? )

மற்றபடி சுஜாதாவின் கதையை எடுத்தவர்களையும், இனி எடுக்கப்போகிறவர்களயும், அதையும் விடாமல் பார்க்கப் போகும் நம்மையும்

"பசித்த புலி தின்னட்டும்"

Thursday, April 9, 2009

திருப்பூரும்..கம்யூனிசமும்... பின்னே நானும்

திருப்பூர்..... எனக்குச் செவிட்டில் அடித்து தொழில் சொல்லிக் கொடுத்த ஊர். அடி என்றால் சாதாரண அடி இல்லை. இனி இந்த திவ்ய தேசத்தின் பக்கமே வரக்கூடாது என்று மனதில் சொல்லிக்கொண்டு (அழுது கொண்டு) சேலம் நோக்கிப் பெட்டியைக் கட்டினேன்.

அப்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் மெர்ச்சன்டைசராகப் பணியாற்றிவந்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு வேலையில்லாத வேலை. அதாவது நாமாக எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. ஆனால் எது நடந்தாலும் / நடக்காவிட்டாலும் நாம் தான் பொறுப்பு. துணி வரவில்லையென்றாலும்...துணைபொருட்கள் (அசெசரீஸ்) வரவில்லையென்றாலும்....உற்பத்தி வரவில்லையென்றாலும்....தரம் வரவில்லை என்றாலும்...எது வரவில்லை என்றாலும் நாம் தான் பொறுப்பு.

உடம்பு சரியில்லை என்றாலும் கூட "சரி ஊசி போட்டுட்டு வந்துடுவல்ல" என்று மனசாட்சியே இல்லாமல் கேட்பார்கள்.
ஒரு நாளைக்குக் கட்டாயமாக 13 மணி நேர வேலை. சில நாட்களில் (மாதத்திற்கு 25 நாட்கள் மட்டும் ) 17 மணி நேர வேலை.
ஞாயிறன்றும் விடுமுறை கிடையாது. கேட்டால் ஏம்ப்பா எதாவது விஷேசமா? என்று கேட்பார்கள். மீறிக் கேட்டாலும் "நானெல்லாம் என் கல்யாணத்திற்கே அரை நாள் தான் லீவு போட்டேன்" என்று கதையெல்லாம் வைத்திருப்பார்கள்.

ஒரே ஆறுதல் திரைப்படங்கள் தாம். அப்போது வெறித்தனமாகப் பார்த்த மது / மரணமனிதன் / கஜேந்திரா / ஆதி / மெர்க்குரிப்பூக்கள் போன்ற காவியங்களும் அதற்கு நண்பர்களோடு அடித்த கமெண்ட்டுகளும் மறக்க முடியாதவை.

அதிலும் மெர்க்குரிப்பூக்கள் படத்தை ஜோதி திரையரங்கில் (இது திருப்பூர் ஜோதி ) பார்க்க ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் என்னோடு வந்த முத்து, "அண்ணே போலாம்னே" என்றான். டேய் இன்னும் என்ன சொல்லவராங்கன்னே தெரியல்ல அதுக்குள்ள போலாங்கிறீயே என்று கேட்டதற்கு, "ஆங் மண்ண சொல்ல வாராங்க...எந்திருய்யான்னா???? இம்முறை அவனிடம் மரியாதை குறைந்திருந்தது. சரி இதுக்கு மேல உட்காந்தா அசிங்க அசிங்கமா திட்டுவான் என்பதால் அவனோடு கிளம்பினேன். தியேட்டரில் எங்களை வெளியே விடவில்லை." இடைவேளை வரை வண்டியை எடுக்கக் கூடாது, உள்ளே போங்கள்" என்று மேலாளர் சொன்னதற்கு , நீங்க மட்டும் ஜாலியா வெளிய இருப்பீங்க...நாங்க மட்டும் கஷ்டப்பட்டு உள்ள இருக்கணுமா...வாங்க எல்லோரும் இங்கனயே உட்காரலாம் என்று எதிர் வாதம் புரிந்தோம்.

திருப்பூரில் அந்த நேரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களை மறக்கவே முடியாது....

"கையில் தீக்கதிர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு தன் பணியாளரைத் தே..பையா என்று திட்டிய முதலாளி"

" நானெல்லாம் சாகிறதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வாழ்ந்திகிட்டு இருக்கேங்க..என்று சொன்ன தொழிலில் நஷ்டமடைந்தவர்"

" ஓட்டுப் போட ஆசையாய் சேலத்திற்குக் கிளம்பிய போது நீயெல்லாம் ஓட்டு போட்டு என்னத்த ஆகப்போகுது பேசாம வேலையப் பாரு என்று சொன்ன என் சீனியர்"

ஆனால் அண்ணா பல்கலையில் நான் படித்த தொழில்கல்வியை விட எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்தது திருப்பூர் தான் என்பதையும்,அதன் காரணமாகத்தான் நான் இப்போதும் பணியில் உள்ளேன் என்பதையும் மறுக்கவே முடியாது.

கால ராட்டினம் சுழன்று மீண்டும் திருப்பூரில் நான்.

"நள்ளிரவு வரை வேலை...ஞாயிறன்றும் வேலை....குழந்தைத் தொழிலாளர்கள்....மிகக்குறைவான ஊதியம்....ஆண்டை அடிமை மனோபாவம் கம்யூனிசம் திருப்பூரில் என்ன செய்தது இதுவரை என்று என் அறிவுக்கு எட்டிய வரை தெரியவில்லை. தி.மு.க வந்த பின்பு இப்போது தான் நல்ல சாலைகளாவது வந்துள்ளது. இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் திருப்பூருக்கு நான் / நீ என்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால்......

Tuesday, March 17, 2009

விஜய்யின் கோபமும், நம்முடைய கோபமின்மையும்

டாக்டர் விஜயை நாம் ஓட்டாவிட்டாலும் அவரே அழகியதமிழ்மகன், குருவி, வில்லு என்று தன்னைத் தானே ஓட்டிக் கொள்ளும் சர்வ வல்லமை படைத்தவர். விஜய் மீது எப்போதும் வராத எரிச்சல் (வில்லு பார்த்தாலும் கூட வேட்டைக்காரனுக்குத் தயாராகவே உள்ளோம்) சமீபத்தில் அவர் கோககோலா
விளம்பரத்தில் எல்லோரையும் கூல் செய்ய கோககோலாவைத் தரும் விளம்பரத்தைப் பார்த்ததில் இருந்து ஏற்பட்டது.

முதன்முதலில் அவர் கோககோலா விளம்பரத்தில் ஆடிய போது அவர் படத்தின் ஓப்பனிங் சாங் "அச்சம் என்பது மடமையடா" இல்லை. அவர் கொடியும் காட்டப்படவில்லை. அவர் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வில்லை. ஆனால் இப்போது ....சற்று பயமாகத்தான் உள்ளது.

விஜய் எப்படியும் புதியஜனநாயகம், வினவு போன்ற கட்டுரைகளைப் படிக்கப் போவதில்லை. படித்தாலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதும் இல்லை. விழிப்புணர்வு போன்ற கருமம் எல்லாம் வந்து விட்டால் இப்படி "பிரஸ்மீட்டில் காட்டுக் கத்தல் கத்த முடியாதே!"

கோககோலா நிறுவனம் அந்த பிரஸ்மீட்டில் தன் குளிர்பானத்தைக் கொடுத்து டாக்டரைக் குளிர்வித்திருக்கலாம்.

நாம் இதற்கெல்லாம் கோபமின்மையை வெளிப்படுத்தும் வரை, அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்.

மற்றொரு பயம் நம் மீடியாவைப் பார்த்து. விஜயைப் போற்றி புகழும் வேலையை செய்துவரும் ஜனநாயகத்தின்
தூண் இந்த மாதிரி விசயங்களில் கப்சிப்....

வாழ்வு குறித்த பயங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது........

Saturday, February 7, 2009

நான் கடவுள்

இப்படி (?) ஒரு படம் எடுக்க பாலாவால் மட்டும் தான் முடியும்.

"அஹம்பிரம்மாஸ்மி" என்று கத்திக்கொண்டு படம் நெடுக கஞ்சா இழுக்கும் ஒரு நாயகன், பார்வையற்ற பிச்சைக்காரியாக வரும் நாயகி(முக்கியமாக எல்லா படத்திலும் வரும் காதல் என்ற வஸ்துவே இருவருக்கும் இடையே இல்லை),குழந்தைகளையும்,ஊனமுற்றவர்களையும் மூலதனமாகப் போட்டு பிச்சைத்தொழில் நடத்தும் தொழிலதிப வில்லன் (இது மட்டும் ஏற்கனவே "வில்லன்" படத்தில் வந்தது)பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பது தவிர்த்த அவர்கள் வாழ்க்கை என்று யாருமே எடுக்காத யாருமே எடுக்க முடியாத ஒரு களத்தை ரணகளமாகக் (உண்மையிலேயே நேற்று திரையரங்கில் குழந்தை ஒன்று கதறிக்கொண்டிருந்தது)
கையாண்டிருக்கிறார்.

ப‌ட‌த்தின் க‌தை:

ஜோசிய‌ ந‌ம்பிக்கையில் காசியில் சிறுவ‌ய‌தாக‌ இருக்கும் போது விட்ட‌ த‌ன் ம‌க‌னைத் தேடி தென் த‌மிழ‌க‌த்தில் இருந்து ஒரு பெரிய‌வ‌ர் த‌ன் ம‌க‌ளுட‌ன் வ‌ருவ‌தாக‌ப் ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கிற‌து.த‌ன் ம‌க‌னைக் காசியில் கால‌ பைர‌வ‌க் கூட்ட‌த்தைச்சேர்ந்த‌ ஒருவ‌னாக‌ப் (ஆர்யா) பார்த்து விக்கித்து போகிறார்.த‌லைமை சாமியின் உத்த‌ர‌வைப் பெற்று ஆர்யா அவருடைய சொந்த‌ ஊருக்கு வ‌ருகிறார்.ஊருக்கு வந்தாலும் தன் தாயிடமும், தங்கையிடமும் ஒட்டாமல் கால பைரவ வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.

ஊரில் பிச்சைத்தொழிலைக் கொடூர‌மாக‌வும்,கோர‌மாக‌வும் ந‌ட‌த்தி வ‌ருகிறார் ஒருவ‌ர்.அவ‌ரிட‌ம் வேறொரு கூட்ட‌த்தைச் சேர்ந்த பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் பூஜா வ‌ந்து சிக்குகிறார்.பூஜாவைப் ப‌ண‌த்திற்காக‌ ஒருவ‌ரிட‌ம் விற்க‌ முய‌லும் போது வ‌ழ‌க்க‌மான பாலாவின் க‌தாநாய‌க‌னால் வழக்கமான முறையில் அடிப‌ட்டுச் சாகிறார்.

க‌டைசியில் பூஜா என்ன‌ ஆனார் என்ப‌தே கிளைமேக்ஸ்.(கடைசியில் நாம் என்ன‌ ஆனோம் என்ப‌து ஆண்டி கிளைமேக்ஸ் :‍((

ஆர்யாவிற்கு இப்ப‌டி ஒரு பாத்திர‌ம் இனி அமையுமா? என்ப‌து ச‌ந்தேக‌மே.ஆனால் என்ன ஆர‌ம்ப‌த்தில் அள‌வுக்க‌திக‌மான‌ ஓப்ப‌னிங் கொடுத்து ப‌ட‌ம் முழுக்க‌ க‌ஞ்சா இழுக்க‌ விட்டிருக்கிறார்க‌ள்.அவ்வ‌ப்போது நானே கட‌வுள் என்று க‌த்துகிறார்.நீச‌ பாஷையில் பேசாம‌ல் தேவ‌பாசையில் அடிக்க‌டி பேசுவ‌தால் மொழிபெய‌ர்க்க‌ சித‌ம்ப‌ர‌ம் கோயில் தீட்சித‌ர்க‌ளைக் கூட்டிக் கொண்டு போவ‌து உத்த‌ம‌ம்.ப‌ட‌த்தின் ஹீரோ இவ‌ர் என்று நினைத்தால் அது த‌வ‌று. மொத்த‌மே 10 காட்சிக‌ளில் தான் வ‌ருவார் போலிருக்கிற‌து.க‌டைசியில் வில்ல‌ன்க‌ளைக் கொல்வ‌த‌ற்காக‌ப் பட‌ம் நெடுக‌ காத்திருந்தாற் போல் ஒரு உண‌ர்வு.கெட்ட‌ப், உட‌ற்மொழி அனைத்தும் ஓ.கே

அடுத்துப் பூஜா...ந‌ம் த‌மிழ்சினிமாவில் இப்ப‌டிப் ப‌ட்ட‌ பாத்திர‌ங்க‌ளையும் ந‌டிப்ப‌த‌ற்குக் :கொஞ்ச்ம்..கொஞ்ச்ம்" ஆளிருப்ப‌து ஆறுத‌ல் அளிக்கிற‌து.என்ன‌ மிக‌ச்சிற‌ந்த‌ பாட‌கி என்று இவ‌ரைச் சொல்லிவிட்டு ப‌ழைய ஒரிஜினல் பாட‌ல்க‌ளுக்கு வாய‌சைக்க‌ விட்டுக் காமெடி ப‌ண்ணிவிட்டார்க‌ள்.பூஜா பாடிய‌ முறையிலேயே பாடினால் நான் கூட‌ க‌ண்ணே...க‌லைமானே பாட்டை ந‌ல்ல‌ப‌டியாக பாடுவேன்.ஆர்யாவிற்கு அட்வைஸ் செய்யும் போதும், உச்ச‌க்க‌ட்ட‌ காட்சியின் போதும் ம‌ட்டும் ச‌ற்று ப‌டுத்துகிறார். ம‌ற்ற‌ப‌டி மிக‌ச் சிற‌ந்த‌,முய‌ற்சி.

வில்ல‌னாக‌ வ‌ருப‌வ‌ர்...ராம‌ராஜ‌ன் ப‌ட‌த்தில் ஒருவ‌ர் வில்ல‌னாக‌ வ‌ருவாரே அவ‌ரை நினைவூட்டுகிறார்.தென்மாவ‌ட்ட‌த்தமிழ் பேசி கொடுத்த கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

முருகன் கதாபாத்திரம் ஏற்ற கிருஷ்ணமூர்த்தி, திருநங்கை கீர்த்தனா, பிச்சைக்காரர்களாக நடித்த நடிகர்கள், தமிழ்சினிமாவின் புது இன்ஸ்பெக்டர் (இவர் இன்னும் 50 படங்களிலாவது இதே கேரக்டரி வருவார் என்று நினைக்கிறேன்)என்று எல்லோரும் நன்றாகச் செய்துள்ளார்கள்.

ஆர்தர் வில்சன் கேமராவையும், சுரேஷஅர்ஸ் எடிட்டிங்கையும் கவனித்துள்ளார்கள்.

பழைய இளையராஜவை படம் முழுக்கத்தேடினாலும் கிடைக்கவில்லை.பிண்னணி இசையாக இருந்தாலும் சரி, பாடல் இசையாக இருந்தாலும் சரி மீண்டும் அந்த இளையராஜா கிடைத்து விடமாட்டாரா என்று நம்மை ஏங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்."பிச்சைப்பாத்திரம்.." பாடல் மட்டும் டிபிக்கல் நவ இளையராஜ ஸ்டைல்.

ஜெயமோகன் நிறைய இடங்களில் (பூஜா அட்வைஸ் செய்வது,பூஜாவின் உச்சக்கட்ட காட்சி வசனம்) மொக்கையாக எழுதியிருந்தாலும்...(மலையாளத்தான்.../ஜட்ஜாக வருபவர்)என்று ஆங்காங்கே ஊசி குத்தும் வேலையை மட்டும் விடவில்லை.ஆங்காங்கே தெளிக்கப்பட்ட நகைச்சுவை வசனங்கள் மட்டுமே ஆறுதல் (அதிலும் ஜெயமோகனின் நகைச்சுவை சற்று பயப்படக்கூடியதே எம்ஜியார்...சிவாஜி குறித்து இவர் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைக்கு உலகமே வேறு மாதிரியாகச் சிரித்தது)

ந‌ம்மை மொத்த‌மாக‌ப் போட்டு எடுத்த‌து பாலா தான். ஒவ்வொரு காட்சியையும் ர‌சிக‌ர்க‌ளுக்கு அதிர்ச்சியை உண்டாக்க‌வேண்டும் என்ற‌ நோக்க‌த்தோடே எடுத்திருப்பது / ப‌ட‌த்தில் எந்த‌வொரு அழ‌கிய‌ல் உண‌ர்ச்சியும் இல்லாத‌து / நிறைய‌ த‌ப்பாக‌ச் சொல்லிக்கொடுப்ப‌து (உச்ச‌க்க‌ட்ட‌ காட்சி ஒரு உதார‌ண‌ம்) / இவ‌ர் வியாபார‌ம் ப‌ண்ண‌வோ அல்ல‌து க‌லைச்சேவை செய்ய‌வோ ந‌ம் உண‌ர்ச்சிக‌ளை உப‌யோகிப்ப‌து / சேர்க்கை ச‌ரியில்லாத‌து / திரைக்க‌தையில் தொட‌ர்ச்சியின்மை / திரும்ப‌த்திரும்ப அவர் படத்தில் இருந்தே எடுக்க‌ப்ப‌டும் காட்சிக‌ள் (எஸ்.ஏ.ராஜ்குமார் மாதிரி ஆகிவிடுவார் போலிருக்கிற‌து)இன்னும் நிறைய‌...

பாலா த‌மிழ்சினிமாவை நேசிக்கும்,சுவாசிக்கும், திற‌மைமிகுந்த‌ ஒரு க‌ட‌வுள்.ஆனால் இப்போது அக்க‌ட‌வுள் சாப‌ம் கொடுத்துவிட்ட‌து. வ‌ர‌த்திற்காக‌க் காத்திருபோம்.

நான் க‌ட‌வுள் ப‌ற்றிய‌ முற்றிலும் நெக‌ட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ம்...நாளை

Saturday, January 31, 2009

நாகேஷ்

எதிர்நீச்சல்...

தாம‌ரைநெஞ்ச‌ம்...

திருவிளையாட‌ல்...

க‌லாட்டாக‌ல்யாண‌ம்...

தேன்ம‌ழை...

சோப்புசீப்புக‌ண்ணாடி...

பாமாவிஜ‌ய‌ம்...

மேஜ‌ர்ச‌ந்திரகாந்த்...

நினைவில்நின்ற‌வ‌ள்...

தில்லான‌ மோக‌னாம்பாள்...

ப‌ட்டிண‌த்தில்பூத‌ம்...

மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌ன்...

அபூர்வ‌ச‌கோத‌ர‌ர்க‌ள்...

ம‌க‌ளிர்ம‌ட்டும்...

ஐயா நீங்க‌ள் பிற‌விக்க‌லைஞ‌ன் தான். ந‌ன்றி உங்க‌ளுக்கு...வேறொன்றும் சொல்ல‌த்தோண‌வில்லை.

Wednesday, January 14, 2009

படிக்காதவன் - ‍திரைவிமர்சனம்

முதல் நாள் எடுத்த சபதத்தையும் மறந்து,"வில்லால் ஏற்பட்ட காயத்தைப் படிக்காதவனைக் கொண்டு ஆற்றலாம்" என்று எண்ணி கூச்ச நாச்சமேயில்லாமல் திரையரங்கிற்குச் சென்றுவிட்டோம்.

ப‌ட‌த்தின் முற்ப‌குதியும் ந‌ம் காய‌ங்க‌ளுக்கு ம‌ருந்து போடுவ‌து போல் தான் இருந்தது.ப‌ட‌த்தின் க‌தை பின்வ‌ருமாறு.(சொல்ற‌துக்கு கதைன்னு ஒன்னு இருக்குதே‍ நன்றி சுராஜ்)

மெத்த‌ப் ப‌டித்த‌ பெரிய‌ குடும்ப‌த்தில் ஒரே ஒரு ப‌டிக்காத‌ ஆள் த‌னுஷ்.இத‌னால் ப‌ல‌ அவ‌மானங்க‌ளுக்கு உள்ளாகும் த‌னுஷ், தான் ஒரு ப‌டித்த பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டால் தன் அவமானங்கள் குறையும் என்று ஒரு தியரியைக் கண்டுபிடித்து அதற்காக பொறியியல் படித்து வரும் தமன்னாவைக் காதலிக்கிறார்.தமன்னாவும் தனுஷைக் காதலிக்கத் துவங்கும் போது அவரது தந்தையான சுமன் ஹெலிகாப்டரில் வந்து தன் பொண்ணைக் கூட்டிச் செல்கிறார்.ஆந்திராவிற்குச் சென்று த‌ம‌ன்னாவைக் தனுஷ் எப்படி கைப்பிடிக்கிறார்? என்ப‌தே மீதிக்க‌தை.

இந்த‌க் குட்டியூண்டு கதையில், 2 பெரிய‌ ஆந்திரா ர‌வுடிகள் (சுமன்,சாயாஜி ஷிண்டே)ஒரு பெரிய‌ திருநெல்வேலி ர‌வுடி(காதல் தண்டபாணி)/அவரது மகன், ஒரு மிக‌ப்பெரிய‌ திருநெல்வேலி ர‌வுடி (அதுல் குல்கர்னி) / அவ‌ர‌து த‌ம்பி(நிதின் சத்யா), ஒரு சின்ன‌ சென்னை ர‌வுடி(விருமாண்டி படத்தில் வருவாரே அவர்), அவ‌ர்க‌ள் கேங் எல்லாம் சேர்த்து சுமார் 500 உப‌ ர‌வுடிகள்,ஒரு காமெடி ரவுடி (விவேக்)/அவரது கேங் (செல் முருகன்,போண்டாமணி) (வேறு யாராவ‌து விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்க‌வும்)த‌னுஷ் சண்டை போட்டு சமாளிப்ப‌த‌ற்குள் ந‌ம‌க்கு மூச்சு வாங்கிவிடுகிற‌து.

தனுஷ் பொல்லாதவன் படத்திற்குப் பிறகு நல்ல மெட்சூராக நடிக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.ரியாக்ஷன், வசன உச்சரிப்பு, நகைச்சுவை, டான்ஸ், பைட் என்று எல்லாமே இவருக்கு நன்றாக வருகிறது.

தமன்னா கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

ப‌ட‌த்தில் காமெடிய‌னாக‌ச் செய்திருப்ப‌து வ‌டிவேலு...ச்சே சாரி விவேக். விவேக் எம்.ஆர் ராதா, சிவாஜி இவ‌ர்க‌ளையெல்லாம் மிமிக்ரி செய்து முடித்து விட்டு இப்போது வ‌டிவேலுவைச் செய்ய‌த் தொட‌ங்கியிருக்கிறார்.ட‌ய‌லாக் டெலிவ‌ரி, பாடி மாடுலேஷ‌ன் உட்ப‌ட‌ அப்ப‌டியே டிட்டோ. ஒரே ஒரு சீனில் ஆபாச‌மாக காட்சிய‌மைத்து தான் விவேக் தான் என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தியுள்ளார்.இருந்தாலும் நிறைய‌ இட‌ங்க‌ளில் சிரிக்க வைக்கிறார்.

ப‌ட‌த்தில் ம‌ற்றொரு குறிப்பிட‌த்த‌குந்த‌ கதாபாத்திர‌ம் த‌னுஷின் தந்தையாக‌ வ‌ரும் பிரதாப் போத்த‌ன்.ம‌னித‌ர் த‌னுஷைப் பார்த்து டென்ச‌ன் ஆகி ஆகியே க‌ல‌க‌ல‌க்க‌ வைக்கிறார்.

வில்லன்கள் அனைவரும் வந்து நம்மை வேறு வகையில் பயமுறுத்தியிருக்கிறார்கள்.

ம‌யில்சாமி,க‌னேஷ்,ஆர்த்தி,சுவாமிநாத‌ன் எல்லோரும் ந‌கைச்சுவைக்கு உத‌வியிருக்கிறார்க‌ள்.அதிலும் சில‌ சீன்க‌ள் லொல்லுச‌பா / சூப்ப‌ர் 10 பார்ப்ப‌து போல‌வே உள்ள‌து.

சுராஜ் "ஆங்கில / மற்ற மொழிப்ப‌ட‌ங்க‌ளை எல்லாம் காப்பி அடித்து ப‌ட‌ம் எடுக்க‌த்தேவையில்லை,ந‌ம் த‌மிழ்ப்ப‌ட‌ங்களையே புத்திசாலித்த‌ன‌மாக‌ காப்பி அடித்தாலே போதும்" என்ற‌ உண்மையைக் க‌ண்டுபிடித்துள்ளார். அதிலும் அதுல்குல்க‌ர்னியை வைத்து ர‌ன் ப‌ட‌ கிளைமேக்சையும்,பொல்லாத‌வ‌ன் பினிஷிங்கையும்,புதுப்பேட்டை காட்சியையும் வைத்தே கிளைமேக்சை முடித்த‌தில் இருந்தே இவ‌ர் திற‌மையைக் க‌ண்டுகொள்ள‌லாம்.

ம‌ற்ற‌ப‌டி ப‌டிக்காத‌வ‌ன் நம்மை சந்தோஷ‌ப்ப‌டுத்துவான்.

Tuesday, January 13, 2009

வில்லு - நமக்கே நாம் வைத்துக்கொள்ளும் ஆப்பு??????

என்ன ஆச்சு பிரபுதேவா???

தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் பழிவாங்கல் கதையை, டாக்டர் விஜய் / நயந்தாராவின் எல்லை மீறிய கவர்ச்சி / வடிவேலுவின் மொக்கைக் காமெடி / பிரகாஷ்ராஜின் காமெடியான வில்லத்தனம் / பார்த்து சலித்த சென்டிமென்ட்ஸ் / வந்துவிட‌க்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த பிளாஷ்பேக் என்று படம் பார்க்க வரும் எல்லோரையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று எத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தீர்கள் பிரபுதேவா?

புதியகீதை படத்தில் ஆறு விரல்கள் வைத்து கெட்டப் மாற்றி நடித்தபிறகு இதில் தான் கெட்டப் மாற்றியுள்ளார் (மீசையை சற்று முறுக்கிவிட்டுள்ளார்) டாக்டர் விஜய். விஜய் சண்டை போடுகிறார், பாட்டுபாடுகிறார், நயந்தாராவுடன் காதல் என்ற பெயரில் ஏதோ செய்கிறார், வடிவேலுவுடன் காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். மொத்தத்தில் தியேட்டரில் பின்ட்ராப் சைலன்ஸ். யாருக்காக இதையெல்லாம் செய்கிறார் என்று தான் தெரியவில்லை.

நயந்தாரா படம் முழுக்க கவர்ச்சி காட்டுகிறார்.அதிலும் படத்தின் ஆரம்பக்காட்சிகள்......ஒரு வேளை திரையரங்கக் கோளாரா ? என்று தெரியவில்லை. நான் பார்த்தது பரங்கிமலை ஜோதியில்.

பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் பிட்டுப் படம் போல் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும் போது வடிவேலு காட்சிகளை மிஞ்சிவிடுகிறது விஜய் -வில்லன்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

வடிவேலு இந்திரலோகம் படத்திற்குப் பிறகு இதில் தான் இவ்வளவு சீரியஸாக மொக்கைப் போட்டுள்ளார். வரவர குசேலன், வில்லு என்று பயமுறுத்திக்கொண்டே வருகிறார்.

"போக்கிரி" ஓடியது என்பதற்காக அதில் வரும் பல காட்சிகளை ஜெராக்ஸ் எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்?
உ.ம் வடிவேலு ஹிட் பாடலுக்கு ஆடும் காமெடி நடனம், இன்ட்ரோ சாங்கில் பிரபுதேவா ஆடுவது...

தேவிசிரிபிரசாத்தின் பாடல்களுக்கு விஜய் படுத்து எழுந்து , படுத்து எழுந்து நடனமாடியுள்ளார். அதுக்கு?

ரவிவர்மன் கலர் கலராக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபுதேவா இந்த "அபூர்வசகோதரர்கள்"காலத்திய கதையை இவ்வளவு ரிச்சாக எடுத்திருக்கத்தேவையில்லை.

மற்றபடி யாரும் அவசரப்பட்டு அவதிப்பட்டு துன்பப்பட்டு....................