Friday, December 16, 2011

Why this Kolaveri di ? - நமக்கு சொல்வது என்ன ???



Kolaveri Di...ஒரு அறிமுகம் :

இன்றைய தேதியில் கொலவெறி பாடலை யூத் தமிழர்களிடம் அறிமுகம் செய்வது என்பது அவர்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வெளிவரப்போகும் 3 படத்தில் தனுஷ் கொலைவெறியோடு பாடிய பாடல் இன்று சமூக வளைத்தளங்களின் உதவியாலும் ஊடகங்களின் ஊதிப் பெருக்கும் தன்மையாலும் அநியாயத்திற்கு ஹிட்டடித்து உள்ளது.

இதே அளவிற்கு முல்லைப்பெரியார் பற்றியும், கூடங்குளம் பற்றியும் அதே யூத் தமிழர்களுக்கு தெரியுமா என்று கேட்டால் நம்மை கிழட்டு தமிழர்கள் பட்டியலில் சேர்த்து விடும் வாய்ப்பு உள்ளதால் எஸ்கேப்...

கொலைவெறி ஏன் நமக்கு பிடித்தது????

திரைப்படங்களை ஓட வைக்க உதவும் முக்கிய விதிகளில் ஒன்று “ரசிகர்கள் தங்களை கதாநாயகர்களாக உருவகம் செய்து கொள்ளுமாறு கதை அமைப்பது”, தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இருந்தே இதே விதியைக் கடைபிடித்துத் தான் வெற்றியடந்து வருகிறார். தன்னைப் போலவே உள்ள ஒரு கதாநாயகன் திரையில் தான் செய்வதையே அல்லது செய்ய விரும்புவதை செய்வது கண்டு ரசிகர்கள் கிளர்ச்சியடைவது தான் இவ்வகைப்படங்களின் வெற்றி.

காப்பாற்றப்படும் ஆணாதிக்க சிந்தனை :

”நான் ஒரு பெண்ணைக் காதலிப்பேன். அவளுடனான காதல் தோல்வியில் முடிந்தால் சரக்கடித்து விட்டு அவளைத் திட்டுவேன்” என்பது தான் பாடலின் ஒன்லைன். இதே இப்பாடலில் ஒரு பெண் காதலில் தோற்று அவளும் சரக்கடித்து விட்டு ஒரு ஆணைத் திட்டியிருந்தால் இப்பாடல் இதே அளவு வெற்றியடைந்திருக்குமா???

மறுபடியும் படத்தில் ரேவதி நிழல்கள் ரவி மீதான கோபத்தில் மது அருந்துவதை அதிர்ச்சியோடு பார்த்தவர்கள் தாம் நாம். <இக்காட்சி வேறு வகையில் தவறு என்றாலும்>

டாஸ்மாக் வாழ்க :

மது இன்று பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், மகிழ்ச்சியைக் கொண்டாடவும் எப்படி இரண்டு முரண் பட்ட விடயங்களுக்கு வடிகாலாக இருக்கிறது என்பது புரியவில்லை. ஏற்கனவே மது விற்பனை 20000 கோடியைத் தொடப்போகும் தமிழ்நாட்டில் தற்போது வரும் படங்களில் மதுவும் ஒரு கதாபாத்திரமாகவே கிட்டத்தட்ட அத்துனை திரைப்படங்களிலும் உலா வருகிறது. தான் செய்யும் தவறுகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது மனம் அதைக் கொண்டாடவே செய்யும்.

அரைகுறை ஆங்கிலம் :

ஆங்கிலத்தில் பேசுவது தான் உயர்வு என்று அனைவருமே நம்ப ஆரம்பித்து விட்ட காலம் இது. முறையான மொழிப் பழக்கம் இல்லாவிட்டால் ஒரு மொழியில் புலமை பெற முடியாது என்பது ஆதார விதி. நமக்கு முறையான மொழிப்பழக்கம் இல்லாத காரணத்தால் தான் ஆங்கிலத்தைப் பேசவும் முடியாமல், விடவும் முடியாமல் தடுமாற்றத்தோடே வாழ்ந்து வருகிறோம். இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. அந்த தடுமாற்றத்திற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் கொலவெறி....

நாட்டுப்புற இசையின் நீர்த்த வடிவம் :

காலங்காலமாக நம்மை மகிழ்வித்து வந்த நாட்டுப்புற இசையை அழித்து விட்டு...அதே இசையை மேற்கத்திய கருவிகளில் கேட்டு புளகாங்கிதம் அடைகிறோம்.

பன்னாட்டு நிறுவனத்தின் பணம் :

பாடலை வெளியிட்டுள்ள சோனி மியூஸிக்கின் ஒரு கோடி ரூபாய் முதலீடு இந்தப் பாடலின் வெற்றிக்கு பின் உள்ளது. < இத் தகவல் த.மு.எ.க.ச மேடையில் கேட்டது>. இதை விட திறமையான கலைகள், கலைஞர்கள் வெளிவராமலே மடிந்து விடும் கொடுமையை ராஜீமுருகனின் விகடன் தொடரில் படித்திருப்பீர்கள். எனவே பணம் இருந்தால் குடித்து விட்டு உளருவதைக் கூட வெற்றியடைய வைக்க முடியும் என்பது தான் இப்பாடல் நமக்கு சொல்லும் செய்தி....

கொலவெறி யின் வெற்றியின் வெற்றிக்குப் பின்னால் நம் சமூகத்தின் தோல்விதான் கண்ணுக்குத் தெரிகிறது.

போராளி திரைப்படமும்...சாதீயக் குறியீடுகளும்



அன்புள்ள சமுத்திரகனிக்கு,

உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குநராக ஆனீர்கள். படம் தோல்வி...பின்பு சசிக்குமாருடன் இணைந்து சுப்ரமணியபுரம் படத்தில் சித்தப்பா கதாபாத்திரத்தில் வந்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தீர்கள்.

அதன் பின்பு நீங்கள் இயக்கிய நாடோடிகள் அதிரி..புதிரி வெற்றி. சசியின் ஈசன் படத்திலும் காவல் துறை அதிகாரியாக நடித்தீர்கள். இன்று போராளி ஒரு நல்ல வெற்றி படம்...இது தான் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்த வரலாறு.

எளிமையான கதை, அதற்கேற்ற அழகான திரைக்கதை, பக்க பலமாக நகைச்சுவை, சசி-கதிர்-தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி, இயல்பான நடிகர்கள் இவை தான் உங்கள் படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைய காரணங்கள் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். போராளி திரைப்படத்தில் மனநிலை குன்றியவர்களின் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள்.

எல்லாவற்றையும் விட காதல் - நட்பு கலவை உங்களுக்கு மிக அழகாக வருகிறது. ரசிகர்களைத் திருப்தி படுத்தும் வசனங்கள் ஆகப் பெரிய எழுத்தாளர்களுக்குக் கூட கை வராத கலை. ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களுக்குக் கைதட்டல் வாங்குவது என்பது சாதாரண விடயம் கிடையாது.

இது வரை நலம்....

இவ்வளவு இருந்தும் ஏன் சாதியத்தைத் தூக்கிக் கொண்டே அலைகிறீர்கள் என்பது தான் புரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் தவறாமல் இடம் பெரும் முத்துராமலிங்கம் குறித்தான வசனங்கள்....இதை விட அதிகம் ஆபத்தானது போராளி படத்தில் அண்ணாச்சியின் சாதியைக் குறிக்க காமராஜர் படத்தையும், கிடை போடுவோர் சாதியைக் குறிக்க அம்பேத்கர் படத்தையும் காட்டியது. ஒரு வேளை தெரியாமல் தான் பிரேமில் கொண்டு வந்து விட்டீர்களோ என்று எண்ணினால் .... “உன் பின்னாடி ஒரு சாதின்னா..என் பின்னாடி ஒரு சாதி” என்று அண்ணாச்சி பேசுவதாக ஒரு வசனம், கிடை போடும் பெரியவர் சசியின் பெரியப்பா குறித்து வியந்து பேசும் வசனங்கள் என மிகத் தெளிவாகத் தான் திணித்துள்ளீர்கள்.

காமராசரை நாடாராகவும், வ.உ.சி யை பிள்ளைமாராகவும், அண்ணாவை செங்குந்தராகவும், அவ்வளவு என் தியாகராஜ பாகவதரை விஸ்வகர்மாவாகவும் தூக்கிக் கொண்டு அலையும் சமூகம் இது.

உங்களைப் போன்ற திரை மொழி மிகச் சிறப்பாக கைவரும் இயக்குநர்கள் மக்களை அதில் இருந்து வெளியே இழுக்கா விட்டாலும் பரவாயில்லை..மீண்டும் உள்ளேயே தள்ளாமலாவது இருங்கள்.

சசிக்குமார் இலங்கைக்கு இந்த படத்தை வியாபாரம் செய்ய மாட்டோம் என்று சொன்ன போது ஏற்பட்ட மதிப்பு..இது போன்ற காரணங்களால் ஒரு மாற்று குறைகிறது என்பதே உண்மை.

அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ இன்றைய தமிழ் சமூகத்தில் சமத்துவம் நிலவும் இடங்களில் ஒன்றாக திரையரங்கங்கள் உள்ளன. உங்கள் மேலான திறமையால் அதன் கதையையும் முடித்து விடாதீர்கள்.

தேவர் மகன் போல அவ்வளவு விசம் இல்லாவிட்டாலும்..போராளி போன்ற ஒரு நல்ல படத்தில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம் விசம்தானே....