Friday, December 7, 2012

துப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்...


துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மை சமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழக முதல்வரின் தலையீட்டாலும் சுமார் 15 நிமிடங்கள் காட்சிகளை வெட்டி விட்டனர் என்பது பத்திரிக்கை வாயிலாக நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.

இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விடயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.

பெண்கள் குடிப்பது குறித்தான‌ முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

2 ல‌ட்ச‌ம் ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் ஒருவ‌ர் அழ‌கில்லாத‌வ‌ர்(அவ‌ர்க‌ள் பார்வையில்)என்றாலும் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌லாம் என்ற‌ தோழியின் அறிவுரையை ஏற்று, அழ‌கும் ச‌ம்பாதிக்கும் திற‌மையும் உள்ள‌ விஜையை விட்டு விட‌க் கூடாது என்று ஆட்டோ பிடித்து வ‌ருகிறார் கதாநாயகி. இதை விட‌ இழிவான‌ காத‌ல் காட்சியை ச‌மீப‌த்தில் எந்த‌ திரைப்ப‌ட‌த்திலும் பார்த்த‌தில்லை.

ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்க‌ளை ம‌ட்டும் அழ‌கிக‌ளாக‌ மாற்றி, ஆண்க‌ளைக் காப்பாற்றும் ச‌மூக‌ம் ந‌ம் ச‌மூக‌ம். இந்த‌ ப‌ட‌த்தில் இன்னும் ஒரு ப‌டி மேலே போய் "மேட்டர்" என்ற‌ வார்த்தையை வெகுஜ‌ன‌ப் ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். மேலை நாடுக‌ளில் பிராஸ்ட்டிடியூட் என்ற‌ வார்த்தையை ஆங்கில‌த்தில் இருந்து எடுத்து விட்ட‌ இந்த‌ சூழ‌லில் தாம் மேட்ட‌ர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.

ப‌ட‌த்தில் வில்ல‌னின் அண்ண‌ன் சுட‌ப்ப‌ட்டு இற‌ந்து போக‌, அதை டிவியில் பார்த்துக் கூச்ச‌லிடும் குழ‌ந்தையை அந்த‌ வீட்டு பெண் எந்த‌ ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இத‌ற்கு மேலும் இந்த‌ காட்சியில் விவ‌ரிக்க‌ ஒன்றுமில்லை.

"ப‌ட‌த்தின் வெற்றி ம‌ட்டும் தான் முக்கிய‌ம்..அத‌ற்காக‌ நாங்க‌ள் எதையும் செய்வோம், எப்ப‌டி வேண்டுமானாலும்‌ காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இய‌க்குந‌ர்க‌ளுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் ந‌ம் போன்ற‌ ர‌சிக‌ர்க‌ளும் ம‌லிந்து விட்ட‌ சூழ‌லில் மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ அத்துனை விட‌ய‌ங்க‌ளும் வீண் தானோ என்று தோன்றுவ‌தையும் ம‌றுப்ப‌திற்கில்லை.