Wednesday, July 9, 2008

கதம்பசாதம்-சுப்ரமணியபுரம்,இப்படிக்கு ரோஸ்,புதுப் பண்பலை

சுப்ரமணியபுரம்:

அடிச்சுப் பிடிச்சு விமர்சனம் எழுதலாம்னு பாத்தா தலைகள் எல்லாம் ஏற்கனவே எழுதிட்டதால, ஒரு விமர்சன சுருக்கம்.

ஏற‌த்தாழ‌ அனைவ‌ருமே அறிமுக‌ம்.இருந்தாலும் ப‌டத்தைப் போர் அடிக்காம‌ல் எடுத்துள்ளார்க‌ள்.எல்லோரும் போற்றும் "ராசாத்தி ச‌வுண்டு ச‌ர்வீஸ்", க‌ழுத்தைக் க‌ற‌ க‌ற‌வென‌ அறுக்கும் வ‌ன்முறை இவைகளைத் த‌விர்த்துவிட்டுப் பார்த்தால் உல‌க‌த் தர‌ம் என்று எல்லாம் ப‌ய‌முறுத்தாம‌ல் ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை த‌ந்துள்ளார்க‌ள்.

ம‌துரை....வாக்கிங் நேர‌க் கொலை போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் ல‌க்கிலுக் த‌ன் விம‌ர்ச‌ன‌த்தில் த‌விர்த்த‌து ஏன்??? என்பது மில்லிய‌ன் யூரோ கேள்வி.

.............................................................................

"இப்ப‌டிக்கு ரோஸ்" அதிக‌ம் எதிர்பார்க்க‌ப்ப‌ட்டு என்னை ஏமாற்றிய‌ ஒரு நிக‌ழ்ச்சி.உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்வ‌து போல் தோன்றும்.(உ.ம்.. அவ‌ர் தூக்கு போட்ட‌ போது உங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்துச்சு????).உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்யும் ஒரு ப‌ழைய‌ தொழில் ம‌ட்டும் அனைவ‌ராலும் எதிர்க்க‌ப்ப‌டுவ‌து ஏன் என்று தெரிய‌வில்லை????.

அதில் க‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் பில்லிசூன்ய‌ம், மாந்ரீக‌ம் ப‌ற்றிய‌ ஒரு அறிமுக‌ம் கொடுத்தார்க‌ள்.நன்கு க‌வ‌னித்துப் பார்த்தால் பில்லிசூன்ய‌ம் செய்யும் ஜெய‌ராம‌ன் கையில் அனைத்து விர‌ல்க‌ளிலும் மோதிர‌ம் போட்டுள்ளார்.விக்ர‌வாண்டி ரவிச்ச‌ந்திர‌னும், சாஸ்திரிக‌ளும் கூட‌ செல்வ‌செழிப்போடுதான் உள்ளார்க‌ள்.பாம‌ர‌ன் சொன்ன‌து போல் "த‌மிழ்நாட்டிற்கு எந்த‌ சாமியும் தேவையில்லை...ஈ.வெ.ராம‌சாமியைத் த‌விர‌".
BTW பாமரன் குமுதத்தில் எழுதுவதில்லையே ஏன்...ஒருவேளை ஞாநிகளுக்கு மட்டுமே தெரியுமோ???

...............................................................................

சென்னையில் முத்தூட் நிறுவத்தினர் Chennai - Live என்ற பண்பலையை ஆரம்பித்துள்ளார்கள்.இதன் துவக்க நிகழ்ச்சி செவ்வாய் அன்று தாஜில் நடந்தது.இதன் சிறப்பம்சம் சென்னையின் முதல் Talk FM என்று சொன்னார்கள்.நிறைய விவாத நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும் என்று சொன்னார்கள்.வரவேற்போம்....

Tuesday, June 17, 2008

தசாவதாரம் -‍ கடலையூர் கிராமத்தில் இருந்து விமர்சனம்.

என்ன அண்ணாச்சி தசாவதாரம் படம் பாத்தீயளா??? எப்படி இருக்கு?

"பாத்தம்வே என்னத்த சொல்ல"???

அண்ணாச்சி....என்ன ஆளவந்தான் பார்ட் டூ மாதிரி ஆயிடுச்சா???

சே..சே அப்படி இல்லவே ....படம் பரவாயில்லவே....என்ன சில இடத்துல தான் மனசொப்பல..

விவரமா சொல்லுங்க அண்ணாச்சி.....

நீயே சொல்லும்வே.... நாம தமிழ் படத்துக்குதான போயிருக்கொம்...ஆனா இங்கன பாதி பேரு என்ன பேசுரானே புரியல....

அதுக்குத்தான் கீழே எழுதுராங்கலாம்ல...

என்னல நீயும் ஆக்கங்கெட்ட கூவ கணக்க பேசுத....நாம என்ன மாநில மொழி திரைப்படத்துக்கால போயிருக்கோம்....கீழ எழுத்துக் கூட்டிப் படிக்க....

சரி விடுங்க அண்ணாச்சி...மேல சொல்லுங்க....

நானும் இந்த ஊருல 40 வருசமா இருக்கம்ல.ஆனா இங்கன இருக்கிற எட்டயபுரத்துக்கே வழி தெரியாது.ஆனா எங்கனையோ இருந்து வந்த வெள்ளக்காரன் வில்லன் பய மெட்ராஸ், செங்கல்பட்டுனு சந்து சந்தா ஹீரோவைத் துரத்துராம்வே....

என்ன அண்ணாச்சி நீங்களும் லாஜிக் எல்லாம் பாத்துக்கிட்டு......

எல கேக்குரவன் கேனையனா இருந்தா......

இருந்தா.....

விடுல அதுக்கு மேலே அவுகளே நிரப்பிக்கிடுவாகா....

அப்புறம் ஒப்பனை பத்தி சொல்லலியே அண்ணாச்சி....

அதுல சும்மா சொல்லக்கூடாதுவே....நல்லா பண்ணியிருகாக...ஆனா பல மேக்கப்பு இந்தியன் தாத்தா மாதிரியும், சண்முகி மாமி மாதிரியும் இருக்குறத தவித்துருக்கலாம்வே....அதே மாதிரி தேவையே இல்லாத மேக்கப்புகளும் படத்துல இருக்குதுவே....

அண்ணாச்சி என்ன சும்மா நொள்ளை சொல்லிக்கிட்டே இருக்கீங்க....படத்துல நல்லதே இல்லையா....

என்னவே இப்படி பேத்தனமா கேட்டுப்புட்ட.படத்துல வார தொழில்நுட்பம் எல்லாம் தமிழ்சினிமாவ அடுத்தக் கட்டத்துக்கு கூட்டிட்டு போவுதுவே....உதாரணமா கேமரா.நம்ம ரவிவர்மன் தம்பி இருக்குல்ல அது ஏதொ ஸ்பீல்பெர்க் படம் எடுத்த மாதிரில எடுத்துருக்கு....

என்ன இவ்வளவு உழைப்பையும், நல்ல கதைக்கு, நல்ல படத்துக்கு கொட்டியிருந்தா எல்லாத்துக்கும் சந்தோஷம் தானவே....அதான் துக்கமா கிடக்கு.ஆனா படத்த பாக்காம மட்டும் இருந்துராதல....பாரு என்ன‌!!!!

பின்குறிப்பு :அடுத்த பதிவு ... தசாவதாரத்தில் அரசியல்

Sunday, June 15, 2008

தசாவதாரம் ‍- திரை விமர்சனம்

உலகையே அழிக்கக் கூடிய ஒரு பயோ‍ வெப்பன் தீவிரவாதிகளின் கையில் கிடைக்க விடாமல் செய்யும் நாயகனின் முயற்சி என்ற ஜேம்ஸ்பாண்டு / ஜாக்கிசான் வகைப்படக் கதைதான்.

(கமல் சார் நீங்க மட்டும் தான் இங்கீலீசு படம் பாப்பீங்களா?? நாங்களும் பாப்போம்ல ‍ உ.ம் நம்பி பாத்திரம் ஓம் நமோ நாராயாணாய நமக என்று சொல்வது மெல்கிப்சன் "சுதந்திரம்" என்று கத்துவதைத் தேவையில்லாமல் நினைவூட்டுகிறது.)

இதை அப்படியே எடுத்தால் மும்பை எக்ஸ்பிரெஸ் / ஆளவந்தான் போன்ற வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துவிடும் என்பதால் பத்து அவதாரங்கள்,நிறைய அரசியல் என்று ஜிம்மிக்ஸ் காட்டியுள்ளார்.

முதலில் கமலின் உழைப்பு."வந்தோமா...இரண்டு பஞ்ச் டயலாக் பேசுனோமா...4 பாட்டுப் பாடுனமா என்று இல்லாமல் (சத்தியமா குருவி பத்தி சொல்லலீங்கோ)என்று இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே உழைத்துள்ளார்.லக்கிலுக் சொன்னது போல் தேவையில்லாத அவதாரங்களையும் எடுத்துள்ளார்.உ.ம் நெட்டைப் பாத்திரம்.

கமலைப் பார்த்து பார்த்து கடைசியில் பக்கத்து சீட்டில் உட்காந்திருப்பவர் கூட கமல் தானோ என்ற சந்தேகம் வருகிறது.இருந்தாலும் மனதில் நிற்கும் பாத்திரங்கள்...

1) பூவராகவன்
2) போலீஸ் அதிகாரி ‍(தெலுங்கு பேசுப‌வ‌ர்.)
3) வில்ல‌ன் க‌ம‌ல் ‍ (மேக்க‌ப் த‌விர்த்து)
4) நம்பி பாத்திரம்

அசின் நன்றாக செய்துள்ளார்.இருந்தாலும் மோசமான பாத்திரப் படைப்பு.எனக்கு விஜய் டி.வி நீயா...நானாவில் பேசிய "குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்காகப் புண்ணியம் செய்த பெண்" தான் நினைவுக்கு வந்தார்.க‌டைசி சீனில் த‌மிழ்சினிமாவின் இல‌க்க‌ண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ கம‌ல் மீது காத‌லும் வ‌ந்து விடுகிற‌து.

எல்லா சீனிலும் கமலே வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைந்து விடுகிறது.இதை கமல் எப்போது நிறுத்துவாரோ...தெரியவில்லை.இந்த படத்தில் அப்படி வந்து போனவர்களுள் முக்கியமானவர்கள்....கபிலன்,நாகேஷ்,கே.ஆர்.விஜயா,மல்லிகா ஷெராவத் போன்றோர்.

படத்தின் குறிப்பிடத் தகுந்த அம்சங்கள் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், எடிட்டிங், சில மேக்கப்கள் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தான்.அசத்தியுள்ளார்கள்....

ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்கள் சில இடங்களில் சுஜாதாவையும், சில இடங்களில் கிரேசி மோஹ‌னையும் நினைவூட்டுகிற‌து.எதுக்கு வ‌ம்பு என்று க‌ம‌ல் த‌ன் பெய‌ரைப் போட்டுக் கொண்டாரோ???(என்ன‌ கொடுமை சார் இது?)

ஹிமேஷ் இசையில் உலகநாயகனே பாடலும், கல்லை மட்டும் பார்த்தால் பாடலும் ஓ.கே.

கே.எஸ் ரவிக்குமார் தன்னால் ஹாலிவுட் ரேஞ்சிற்கு மசாலா படங்கள் :-(( எடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

உலகத்தரம் என்ற வியாதியின் காரணமாக ஹாலிவுட் கதையையே அடித்திருப்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இது தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சியைப் பார்க்க விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்திற்குள் தாராளமாக நுழையலாம்.எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி...

பின்குறிப்பு :

அடுத்த பதிவு...கடலையூர் என்ற கிராமத்து ர‌சிக‌ர் பார்வையில் இருந்து தசாவதாரம் விமர்சனம்...

என்ன‌ ப‌ன்ற‌து...இந்த‌ வார‌ம் த‌சாவதார‌ம் வாரம்னு ஆகிப்போச்சுல‌..அது ம‌ட்டுமில்லாம‌ல் சிவாஜி ப‌ட‌த்திற்கு வ‌ந்த‌தை விட‌ த‌சாவதார‌ம் ப‌ட‌த்திற்கு அதிக‌ப் ப‌திவுக‌ள் கொண்டு வ‌ற்ற‌துன்னு குல‌ தெய்வ‌ம் கோயில்ல‌ வ‌ச்சு ச‌த்திய‌ம் வேற‌ ப‌ண்ணியிருக்கோம்...

Monday, June 2, 2008

சந்தோஷ் சுப்ரமணியமும், தமிழ் சினிமாவும்....

நேற்று உயிரைப் பணயம் வைத்தாவது சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்து விடுவது என்று முடிவு கட்டினேன்.ஒவ்வொரு திரையரங்காக பார்த்து கடைசியில் உதயம் வந்து சேர்ந்தேன்.

சந்தோஷ் சுப்ரமணியம் டிக்கெட் இருக்கா என்று கேட்டதற்கு ஒருவர்.."வேணும்னா குருவி இருக்கு பாக்குறியா? என்றார்.தியேட்டர் என்றும் பாராமல் அவர் காலில் விழுந்து திடுத்திடுவென ஓடி ரோஹிணி வந்து சேர்ந்தேன்.50 நாட்களைக் கடந்த பின்னும் ஏறத்தாழ முழு திரையரங்கும் நிரம்பி இருந்தது.

படம் பற்றி பல பதிவுகள் வந்துவிட்டதால் மீண்டும் அதையே சொல்லி மொக்கைப் போட விரும்பவில்லை.படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி கேரம்போர்டு விளையாடும் காட்சி தான்.

தந்தைக்கும், மகனுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மிக அழகாக சொல்லியிடுக்கிறார்கள்.

இந்த‌ப்ப‌ட‌மும் திரைய‌ர‌ங்கில் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக்கொண்டு தான் இருக்கிற‌து.ஆபாச‌ம் இல்லை...வ‌ன்முறை இல்லை... ப‌ஞ்ச் ட‌ய‌லாக்குக‌ள் இல்லை...பறந்து போய் ரயிலைப் பிடிக்க வில்லை...பின் எப்படி ???மக்களுக்கு மறை கழண்டு விட்டதா??? ஏதோ பீம்சிங் காலத்து படம் மாதிரி இருக்கு..இது எப்படி ஓடுது??? என்று கோட‌ம்பாக்க‌த்துக்கார‌ர்க‌ள் ரூம் போட்டு ம‌ண்டையைப் பிடித்துக் கொண்டிருப்ப‌தாக‌க் கேள்வி...

ம‌க்க‌ள் பார்க்கிறார்க‌ள்...நாங்க‌ள் கொடுக்கிறோம் என்ற கேனைத்தனமான வாத‌ம் இனி எடுப‌டாதோ என்ற பீதி எழுந்துள்ளது.

ஞாநி இயக்குநர் அமீருடனான விவாதத்தில் ஒரு மிகச் சிறந்த கருத்தைச் சொன்னார்."ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல எண்ணங்களும்,வக்கிர எண்ணங்களும் சரிபாதியாக உள்ளது.மொழி போன்ற படங்கள் நல்ல எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன...பருத்திவீரன் போன்ற படங்கள் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன" என்றார்.

மற்றொரு விஷயம்,வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது என்பது எளிதான வேலை.நல்ல விஷயங்களுக்கு தீனி போடுவது தான் கடினமான வேலை.ஒவ்வொரு ஆண்டும் 100 படங்கள் வந்தாக வேண்டிய நிலையில் எல்லாப் படங்களும் நல்ல எண்ணங்களுக்குத் தீனி போடும் வகையில் எடுப்பது என்பது பணவீக்கத்தைக் குறைப்பதை விட கடினமான வேலை.

ஆனா இப்படி காப்பி அடிச்சாவது அப்பப்ப நல்ல எண்ணங்களுக்கும் தீனி போடுங்கப்பா...

Sunday, May 4, 2008

தரணி - விஜய் அடுத்து இணையும் "குண்டு" (கற்பனைக்)கதை ரெடி...

"சார் அடுத்த படத்துக்கு கதை ரெடி" என்ற தரணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகப் பார்க்கிறார் விஜய்.

"ண்ணா இந்தப் படத்துக்கே வயத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு உட்காந்திருக்கோம்.அதுக்குள்ள அடுத்த படமா???ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு..."

"சார் இது வேற மாதிரி இருக்கும்.கேளுங்க..."

"விஜய் தலையை இடதும், வலதுமாக ஆட்டி ம் என்கிறார்.தரணி, சம்மதம் கொடுத்துவிட்டார் என்று நினைத்து கதையை ஆரம்பிக்கிறார்".

"படத்த ஓப்பன் பண்ணவுடனேயே ஒரு பிரச்சினையைக் காட்டுறோம் சார்..."

"அது என்ன பிரச்சினை????"

"அது ஒரு பிரச்சினையே இல்லை சார்."

"இப்பத்தான் பிரச்சினைன்னு சொன்னீங்க..."

"அத சொல்லல சார்.பிரச்சினை ஒரு மாட்டேர இல்ல.ஏன்னா இன்ட்டர்வெல்க்கு 30 நிமிஷம் கழிச்சுத்தான் நீங்க பிரச்சினைக்கு உள்ளேயே போறீங்க..."

"அதுவரைக்கும்....."

"இப்படியெல்லாம் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுட்டு இருந்தீங்கன்ன பரதன்ட்ட சொல்லி இன்னொரு படத்துக்கு பூஜை போட சொல்லிருவேன்..."

"என்னது பரதனா???...அண்ணா நீங்க சொல்லுங்கன்னா..."

"படத்தோட பேரு குண்டு...இதுல நீங்க ஒரு கோலிக் குண்டு சாம்பியன்.இரண்டாவது சீன்ல பயங்கரமா ஒரு கோலிக்குண்டு மேட்சு நடக்குது..அதுல நீங்க ஜெயிக்கிறீங்க..."

விஜய்..மனதிற்குள்(ஏதோ IPL match ரேஞ்சுக்குப் பேசுறாரே)

"நீங்க ஜெயிச்சி கப் வாங்குறீங்க...ஸ்கீரன்ல உங்கள ப்ரீஸ் பண்ணி கதை,திரைக்கதை,இயக்கம் தரணின்னு போடுறோம்."

"ஆங்...இதுல மட்டும் தெளிவா இருங்க.."

"என்ன‌து???"

அண்ணா நீங்க‌ க‌தைய மேல‌ சொல்லுங்க‌ன்னா...

"விஜ‌ய் You are insulting me...அதான் சொல்லி முடிச்சிட்டேனே..."

"என்னது சொல்லி முடிச்சுட்டீங்களா?????"

"ஆமா..."

"இது 15 நிமிஷத்துக்குத்தான ஓடும்.மீதி 2 மணி நேரத்துக்கு..."

"வித்யாசாகர்ட்ட சொல்லி 6 பாட்டு வாங்கிட்டேன்.அப்புறம் காமெடிக்கு விவேக் கிட்ட சொல்லி பெருச்சாளி, வச்சுக்கிட்டு இருக்கிறது அப்படி இப்படின்னு ஏதாவது அசிங்கமா பேசச் சொல்லி சமாளிச்சுக்கலாம்..."

"அப்ப ஹீரோயினு..."

"விஜய் நீஙக 2 படம் என் கூட பண்ணியும் என் frequency க்கு வரல.திரிசா தான் ஹீரோயின்.அத அமெரிக்காவுல இருந்து நீங்க இழுத்துக்கிட்டு ஓடி வ‌றீங்க..."

"என்ன‌து அமெரிக்காவுல‌ இருந்தா???"

"ஆமா ம‌துரை முடிச்சாச்சு, ம‌லேசியா முடிச்சாச்சு...அடுத்து அமெரிக்கா தானே..."

"கிழிஞ்ச‌து..."

"அப்புற‌ம் ஒரு முக்கிய‌மான‌ விச‌ய‌ம்.உங்க‌ளோட‌ இன்ட்ரோ சாங்குக்கு மாள‌விகா கிடையாது.ந‌மீதா தான்."

"ஏன் ???"

"ஏன்னா இந்த‌ப் ப‌ட‌த்துலேயே ஏன் மாள‌விகாவுக்குப் ப‌திலா ந‌மீதாவ‌ போட‌ல‌ன்னு ஒருத்த‌ர் த‌க‌வ‌ல் அறியும் சட்ட‌த்தின் கீழ் கேள்வி கேட்டிருக்கிறார்."

விஜ‌ய் ம‌ய‌ங்கி விழுகிறார்.

க‌ட்டாய‌ பின்குறிப்பு..

இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது இல்லை.

உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??

உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்த‌வுடன் அவர் கேட்ட முதல் கேள்வி..

"த‌ம்பி எங்க‌ வேலைபார்க்கிறான்???"

"Wipro வுல"

"சம்பளம் எவ்வளவு வரும்???"

"17000 வரும்."

"என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே சேத்தீங்க??"

"இல்ல Campus Interview....

"சரி உனக்கு எவ்வளவு வரும்??"

"எனக்குத் திக் என்றது.என் தம்பிக்கே இந்தக் கதியென்றால் துகிலியல் துறையில் பணிபுரியும் என் கதி...."

"ஒரு 9000 வரும்."

"என்னது??9000...இதெல்லாம் ஒரு வேலைன்னு பாத்துக்கிட்டு இருக்க...பேசாம வுட்டுடு".

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தேன்.

சரி..சரி ஊருக்குப் போகனும்.பஸ்ஸுக்கு காசில்லை.ஒரு 250 ரூபாய் இருந்தாக் கொடு..கல்யாண‌த்துக்கு வரும் போது தந்திர்றேன்...

குருவி‍ - திரைவிமர்சனம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரன் உதயநிதியின் ரெட்ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குருவி.

குவாரியில் வில்லன்களால் அடிமைபடுத்தப் பட்டு இருக்கும் தந்தையையும்,மற்றவர்களையும் விஜய் காப்பாற்றுவது தான் கதை.

படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் தரணி தூள் படத்தை ரீமேக் செய்துவிட்டாரோ??என்ற பயம் மனதில் எழுகிறது.திரிசாவை இழுத்துக் கொண்டு விஜய் ஓடும் காட்சிகளில் கில்லி தேவையில்லாமல் ஞாபகம் வந்து தொலைக்கிறது.(ஒரு படம் பார்த்தா பார்த்த அன்னிக்கே மறந்து போற சக்தியக் கொடு இறைவா!!!!!)

விஜய் ஒரு கமர்சியல் படத்திற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துள்ளார்.(பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்ற அறிவுரை உட்பட).விஜயை சூப்பர்(காமெடி)மேனாக மாற்றியுள்ளார்கள்.வில்லன்கள் படம் முழுக்க சுட்டும் ஒரு குண்டு கூட மேலே படவில்லை.அடுத்த முறை சுடறதுக்கு நல்லா ட்ரெயினிங் எடுங்கப்பா...(ஹி..ஹி துப்பாக்கியைச் சொன்னேன்)

திரிசா...டிட்டோ....பலபடங்களில் செய்தது தான்.

விவேக் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் க்ராஸ் ஆகும் பெண்களை அசிங்கமாக‌ப் பேசி காமெடி செய்வாரோ? அவருக்குத்தான் வெளிச்சம்.இந்தப் படத்தில் டபுள்மீனிங் தூக்கல் தான்.

வில்லன்களாக‌ சுமன், ஆசிஷ்வித்யார்த்தி போன்றோர்.வில்லன்களாக அறிமுகமாகி காமெடியன்களாக முடிந்திருக்கிறார்கள்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன.அதுவும் அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கும் மொழ..மொழன்னு பாட்டிற்கு விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.வித்யாசாக‌ர் பின்னியுள்ளார்.

ப‌ர‌த‌ன் இல்லாத‌ குறை வ‌சன‌ங்க‌ளில் தெரிகிற‌து.வெறும் பில்ட‌ப்புக‌ள் ப‌ட‌த்தின் முத‌ல் வார‌க் க‌லெக்ச‌னுக்கு ம‌ட்டுமே உத‌வும் என்ப‌தை வ‌ச‌ன‌க‌ர்த்தா உண‌ர்வார் என‌ ந‌ம்புவோம்.

கோபிநாத்தின் காமிரா ப‌ட‌த்தைப் பிர‌ம்மாண்ட‌மாக‌ காட்டியுள்ள‌து.

தரணியின் படங்களில் இருக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் படத்தில் இல்லாதது பெறும் குறை.அதிலும் இரண்டாம் பகுதி முழுவதும் சண்டைகளால் நகர்கிறது.

ச‌ங்க‌ர் எப்ப‌டி நாட்டைத் திருத்தும் க‌தைக‌ளில் சிக்கிக் கொண்டாரோ அதுபோல் த‌ர‌ணியும் இந்த‌ வ‌கைக் க‌தைக‌ளில் சிக்கிக் கொண்டாரோ என்று தோன்றுகிற‌து..


மொத்ததில் படம் பரவாயில்லை.ஆனால் கில்லி போல் இல்லை.:-((