Tuesday, October 30, 2007

பாமரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்...

ஐயா வணக்கங்க,

தலைப்பப் பாத்த உடனே,இதென்னடா திருநெல்வேலிக்கே அல்வாவா?? அப்படினு தோணும்.இருந்தாலும் மனசில பட்டதை சொல்ல கடிதத்த விட சிறந்த ஊடகம் வேற இல்லனு தோணுது.

உங்கள எனக்கு ரொம்பப் புடிக்குங்க.ஏன்னா, கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒன்னு சொல்றாங்களே!!.அது இன்னும் இருக்கான்னு சந்தேகம் வரும் போது உங்க எழுத்துகளப் படிச்சாப் போதுமுங்க.படார்னு சந்தேகம் தீந்துடும்.

அப்புறம் உங்க நடை.அதாங்க எழுத்து நடை.சூப்பர் போங்க.உங்கள எழுத்துலக கவுண்டமணினே கூப்பிடலாம்.அவ்வளவு நக்கல்,அவ்வள்வு எள்ளல்.

எல்லாத்துக்கும் மேல உங்க தைரியம்.VIP கள எல்லோரும் இவரு நல்லவரு,தங்கமானவரு,தங்கமான தங்கமானவருனு மட்டும் சொல்லிட்டு இருக்கிற இந்த நாள்ல நீங்க குத்தங்களையும் சொல்றீங்க பாருங்க.simply great ங்க‌.

உங்க மேலயும் எனக்கு கொஞ்சம் விமர்சனங்கள் உண்டுங்க.பாருங்க நீங்க மணிரத்திண‌த்தப்
பத்தி, அவரு அஞ்சலி படத்துல E.T படத்தில இருந்து தட்டுனத மட்டும் சொல்றீங்க.ஆனா அந்தப் படத்தில 1 1/2 வயசு குழந்தைய ஏதோ ஃபுல் கதையையும் உள் வாங்கி நடிச்ச மாதிரி அந்தப் பிள்ளய நடிக்க வச்சிருப்பாரே, அத சொல்ல மாட்டேங்கிறீங்க.கெட்டத மட்டும் சொன்ன, நல்லத மட்டும் சொல்ற அவங்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்.

எல்லாத்தையும் படிக்கிறீங்க, கிழிக்கிறீங்க.ஆன பாருங்க குமுதத்தில எழுத்திலேயே பாடி காட்றாங்க.

ஒங்க கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்கிறேன்.திரையுலக தருமிக்கு கடிதம் எழுதும் போது நல்லது,கெட்டது ரெண்டையும் எழுதுங்க.இல்லையினா தருமியோட ஃபேமஸ் டயலாக் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியதுங்க.

எங்கள் தலைவர் கவுண்டமணியோட நக்கல் எல்லோருக்கும் பிடிக்குங்க.ஆனா அவரோட தனி நபர் தாக்குதல் தான் யாருக்கும் பிடிக்காது.இது உங்ளுக்கு தெரியாதது இல்ல.ஏன்னா உங்களுக்கும் தலைவரைப் பிடிக்கும்னு சொல்லி இருக்கீங்க.

நன்றிகளுடன்.

Sunday, October 28, 2007

சுஜாதா மீது ஏன் இந்த கோபம்????

No one is ideal here including myself.எந்த ஒரு மனிதனும் 100% positive character ஆக இருந்து விட முடியாது.ப்ளசும்,மைனசும் கலந்துதான் இருக்க முடியும்.

1965 ல் எழுத ஆரம்பித்து சுமார் 42 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் சுஜாதா மீது எனக்கும் சில விமர்சனம் உண்டு.முதலில் அதைப் பார்க்கலாம்.

1) ஏராளமான, எலுமிச்சங்காய் அளவுள்ள போன்ற வர்ணணைகள், ஸ்பூன்லிங் ஜோக்ஸ் போன்ற பாலியல் வக்கிர எழுத்துக்கள்.

2) அயோத்தியா மண்டபம், "ஏழைப் பிராமண பையன் இட ஒதுக்கீடு காரணமாக 95% வாங்குவதற்க்குப் போராடி,போராடி ஓய்ந்து போனான்‍‍-அனிதாவின் காதல்கள்" போன்ற நுண்ணிய சாதீய எழுத்துக்கள் போன்றவற்றின் மீதெல்லாம் என்க்கும் விமர்சனங்கள் உண்டு.

இதையெல்லாம் தாண்டி அவர் தமிழில் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது.நல்ல இலக்கியம் என்பதை வானமாகக் கொண்டு எழுத்தாளர்களைப் படிகளாகக் கருதினால் சுஜாதா என்ற படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு நிச்சயமாக செல்ல முடியாது.

உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்‍‍‍‍-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சத்யம் தியேட்டருக்கு morning-show பார்க்கச் சென்று விடுவான்.அவன் ராஜேஸ்குமாரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.பலரும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.

என்ன சிலர் சூழ்நிலை காரணமாகவோ, தீவிரமின்மை காரணமாகவோ, அந்த படிகளிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.

நாம் எல்லோருக்கும் ஹீரோ ஆக வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது.அதற்கு வலிமையான வில்லன் ஒருவர் தேவைப்படுகிறார். அவரைத் தாக்க பிராமணீய எதிர்ப்பு, எழுத்து வியாபாரம் போன்ற ஆயுததைப் பயன் படுத்திக் கொள்கிறோம் அவ்வளவுதான்.

இப்படி வைத்துக் கொள்வோம்.1965 ல் அவர் எழுத வருகிறார்.எழுத வந்தவுடன் புதுமைப்பித்தன் சரியில்லை, ல.ச.ரா சரியில்லை, தி.ஜா சரியில்லை என்று மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் இன்நேரம் அவரை மறந்து போய் இருப்போம்.

அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கவே இயலாது என்பது என் கருத்து.

1)சிறுகதைகள்‍ - குதிரை யில் காணப்படும் அங்கதம், மாஞ்சு வில் காண்ப்படும் Narration, சில வித்தியாசங்களில் காணப்படும் முடிவு

2)நாவல்கள் - பூக்குட்டி, அன்று உன் அருகில், என் இனிய இயந்திரா போன்றவை.

3)கட்டுரைகள் - 70 வயது நிறைவுக் கட்டுரை, வயது வந்தவர்களுக்கு மட்டும், ஆப்பிரேசன் கட்டுரை, அனுபவக் கட்டுரைகள்(குறிப்பாக அவர் பாட்டி,அப்பா,மனைவி பற்றி எழுதியவை)

4)‍ இது போக அவர் நல்ல இலக்கியங்களையும் அறிமுகப் படுத்த தவறியதே இல்லை.நா.முத்துக்குமார், மகுடேஸ்வரன், போன்றோரெல்லாம் அவரால் பிரபலப்படுத்தப்பட்டவர்கள் தான்.

5)விஞ்ஞான வரிசையில் "ஏன் எதற்கு எப்படி", "கடவுள் இருக்கிறாரா", "வீட்டுக்குள்ளே ஒரு உலகம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதைஎல்லாம் விட‌ ஸீரீர‌ங்க‌த்து தேவ‌தைக‌ள் (ப‌குதி 1) அவ‌ருடைய‌ ப‌டைப்பின் உச்ச‌ம் என்று கூட‌ சொல்ல‌லாம்.

மற்றோர் பிடித்த அம்சம் அவர் விமர்சனங்கள் காரணமாக எழுத்துத் துறையை விட்டு விலகியதும் இல்லை.நம் பதிவுலத்தோடு இதை நாம் ஒப்பீடு செய்யலாம்.

எதை எழுதினாளும் அதை சுவாரஸ்யமாக எழுதும் திறமை அவருக்கு வாய்த்து உள்ளது.சுஜாதா இல்லாத அந்த வெற்று இடத்தில் வேறு யாரை Replace செய்ய முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஆரோக்கியமான விவாதங்களை எதிர் பார்த்து....

மா.செல்வம்

Friday, October 26, 2007

சன் டி.வி க்குக் கை நடுங்குகிறதா?????

அப்பொதெல்லாம் எங்கள் வீட்டில் டி.வி கிடையாது."பஞ்சு,பட்டு,பீதாம்பரம்", "ஒளியும் ஒலியும்", "சித்ரஹாரில் வரும் ஒரே ஒரு தமிழ்ப் பாட்டு", ஞாயிறு படம் இதை எல்லாம் பார்க்க வேண்டுமானால் தெருக் கடைசியில் உள்ள வீட்டிற்குத்தான் போக வேண்டும்.அவர்கள் வீட்டின் பெயரே டி.வி.காரர் வீடுதான்.அவர்களும் எங்களை விடாமல் துரத்துவார்கள்.நாங்களும் சளைக்காமல் அவர்கள் சன்னல் வழியே எட்டிப் பார்ப்போம்.அவர்கள் சன்னலையும் சாத்திய பிறகுதான் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் சன்னல் சாத்தவில்லை என்பதை அறிந்து அங்கு ஓடுவோம்.

அப்பாவும் இதென்ன‌டா வ‌ம்பாப் போச்சே என்று த‌வ‌ணை முறையில் ஒரு Black and White டி.வி. ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். டி.வி வந்ததில் இருந்து நான் தான் Antenna Operator.டி.வி யை ஆண்டெனாவுடன் connect செய்து விட்டு On செய்தால் விதவிதமாக புள்ளிகள் மட்டும் தெரிந்தது.படம் வரவில்லை.என் தம்பி ஏதோ ஒன்று சொல்லி அம்மாவிடம் அடி வாங்கினான்.பிறகு எலக்டீரிசியனைக் கூப்பிட்டு வந்து காட்டினால் அவர் தென்னை மரம் அருகே இருப்பதால் Antenna உயரம் பத்த வில்லை என்றார்.2 தென்னை மர உயர Antenna வைத்த பிறகுதான் டி.வி யில் புள்ளிகள் மறைந்து சச்சு தெரிந்தார்.ஆம் முதலில் நங்கள் பார்த்த பாடல் "ரோஜா மலரே ராஜகுமாரி" தான்.

90 க‌ளின் ஆர‌ம்ப‌ங்க‌ளில் cable t.v பழக்கத்தில் வந்து ஒரு நாளைக்கு 3 படங்கள் போட்டார்கள். எங்கள் வீட்டில் Cable connection கொடுக்காததால் மீண்டும் டி.வி.காரர் வீட்டு சன்னலை முற்றுகை இட்டோம்.அப்போது தான் சன் டி.வி. தனது ஒளிபரப்பு சேவையை தொடங்கியது.

இடையில் ஒரு நாள் நான் Antennaவை அங்கிட்டும், இங்கிட்டும் திருப்பி திருட்டுக் கேபிளில் பாசமலர் படம் தெரிந்த போது ஜான் பெயர்டு அடைந்த சந்தோசத்தை அடைந்தோம்.

பாச‌ம‌ல‌ர் ப‌ற்றி பேசிப் பேசியே அப்பாவை cable t.v connection கொடுக்க சம்மதிக்க வைத்தோம்.

சன் டி.வி அப்போது பல புதுமைகளால் ஈர்த்தது."சுரேஷ் சக்ரவர்தியின் டிக்,டிக்,டிக் கேம் சோ,பதி சபாபதி","ஜேம்ஸ் வசந்தனின் வார்த்தை விளையாட்டு","ரபி பெர்னாட்டின் நேருக்கு நேர்","டி.கே.வி ராஜனின் சினிமா குவிஸ்", "சாமியர்களின் சண்டை","வீரப்பனின் பேட்டி","இந்திய தொலைக்காச்சிகளில் முதன் முறையாக அவர்கள் போட்ட படங்கள்", "பயணிகள் ரயில்", "இந்த வாரம்... என்று கிளப்பிய ஆர்வம்", "Functionsஇன் Live coverage", "தூரன் கந்தசாமியின் குரல், "ஜென்மம் திகில் நாடகம்", "மெகா சீரியல்கள் அறிமுகம்" என்று அனைத்தும் நினைவில் நிற்பவை.

ஆனால் இன்று அவர்கள் சுய பரிசோதணை செய்து கொள்ள வேண்டும்.வெறும் சீரியல்களையும், படங்களையும் மட்டும் நம்பக் கூடாது.சீரியல் போர் அடித்து விட்டது. படம் 28 ரூபாய்க்கு விளம்பரம் இல்லாமல் பார்க்க முடிகிறது.விஜய் டி.வி.யும் தவிர்க்க முடியாத கட்டத்தை அடைந்து உள்ளது.

நீங்கள் மஸ்தானா,மஸ்தானா பண்ணுவதர்க்குள் அவர்கள் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சிற்கு சென்று விட்டார்கள்.

எனவே கலக்க போவது யாருவை காபி அடித்து அசத்தப் போவது யாரு என்று பண்ணாமல், புதிதாக உங்கள் முத்திரையோடு Programmes கொடுத்தீர்களேயானால் நாங்கள் பார்ப்பதற்க்கு தாயராக உள்ளோம்.

குழந்தைகள்...ஜாக்கிரதை

காலையில் குளிப்பதற்காக பக்கெட், சோப், சகிதமாக குளியலறை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.பக்கத்து வீட்டுப் பாப்பா(வயது 1 1/4)குளித்து முடித்து விட்டு ஆடையில்லாமல் நின்று கொண்டிருந்தது.நான் என்னுடைய குழந்தைப் பருவத்திற்கே போய் "ஷேம்,ஷேம் பப்பி ஷேம்" என்று சொன்னேன்.

அது என்னைப் பார்த்து முறைத்து ..தா போடா என்று மூன்று எழுத்து சென்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியது.நானும் அதிர்ந்து சரி கௌதம் மேனன் படம் பார்த்து வளர்ந்த குழந்தையாய் இருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

சரி நமக்கு மட்டும் ஏன் இந்த அவமானம் என்று எண்ணிய போது,"மூஞ்சினே, மூஞ்சி சில மூஞ்சிகளைப் பார்த்தலே இப்படியெல்லாம் தோணும்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு குளிப்பதற்க்குச் சென்றேன்.

குளித்து முடித்து விட்டு வரும் போது, பக்கத்து வீட்டு தாத்தா(வயது 65) அவரும் அதே வார்த்தையை அக்குழந்தையிடம் வாங்கியிருந்தார்.எங்கள் இருவர் காதிலும் same blood

குழந்தைகள் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் தான் அது தெரியாமல் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம்.

ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

என் மீது ஊர்ந்து கொண்டிருந்த எறும்பை
நசுக்கிக் கொன்றேன்
குழந்தைகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Thursday, October 25, 2007

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்

முதலில் சிறுவர் மலரில் ஆரம்பித்தது எனது வாசிப்பானுபவம்.வாரமலரில் குறுக்கெழுத்துப் போட்டி நிரப்பி விட்டு என்னை ஒரு பெரிய மேதாவியாக நினைத்துக் கொண்டது உண்டு.பிறகு பூந்தளிர்,கோகுலம் என்று வளர்ந்து குமுதம் விகடனில் வந்து நின்றது.நான் படிக்க வந்த வயதில் குமுதம் மாலனின் ஆசிரியத்தில் "ஜெக ஜோதியாக" இருக்கும்.

டீன் - ஏஜ் பருவத்தில் கையில் கிடைப்பதை எல்லாம் நான் படிப்பதைப் பார்த்து விட்டு என் அம்மா எனக்கு வேண்டிக்கொள்வதர்க்கு என்று கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.
நானும் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக ராஜேஸ்குமார்,சுபா என்று வளர்ந்து வந்தேன்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் நண்பனால் பாலகுமாரன் அறிமுகப்படுத்தப்பட்டார்.அவருடைய எழுத்து முழுவதுமாக என்னை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.அவருடைய நாவல்கள் சுமார் 100ஐப் படித்து ஆஹா இவர் தான் நம் குரு என்று மனதில் வைத்துப் பூஜிப்பதற்குள் அவருக்கும்,வண்ணநிலவனுக்கும் நடந்த சண்டையைப் படித்ததில் மனதில் இருந்த பலூன் படீரென வெடித்தது(இருந்தாலும் உள்ளம் கவர்ந்த கள்வன், இரும்புக்குதிரைகள்,தாயுமானவன் போன்றவை இன்றும் நினைவில் உள்ளது).

விகடனால் பல எழுத்தாளர்கள் அறிமுகம் கிடைத்தது.சுஜாதா, எஸ்.ராமகிருஷ்னன், க.சீ.சிவக்குமார், போன்றோரின் படைப்புகளைப் படிக்க நேரிட்டது.
அதிலும் சுஜாதா தன் எழுத்து எனும் மந்திரக்கோலால் வசியம் செய்ய ஆரம்பித்தார்.அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் இவற்றோடு எனது பெரும் பொழுது போனது.

கல்கியின் பொன்னியின் செல்வன், புதுமைப்பித்தனின் சிறுகதைகள், எஸ்.ரா வின் துணைஎழுத்து, போன்றவை என் மனதைப் பெரிதும் கவர்ந்தவை.

இன்னும் நிறையப் படிக்க ஆசை.படிப்போம்,கிழிப்போம்.

Wednesday, October 24, 2007

எனது பெயர் குழப்பங்கள்

உங்களில் யாருக்காவது alies போட்டு பெயர் ரிஜிஸ்டெர் செய்யப்பட்டு உள்ளதா? உங்கள் சான்றிதழ்களை சரிபார்க்கும் போது சந்தேகக்கண் கொண்டு பார்த்து உள்ளார்களா? அப்படி என்றால் தாரளாமாக வந்து எங்கள் சங்கத்தில் சேர்ந்து விடுங்கள்.
முதலில் ஒரு சின்ன ஃபிலாஷ்ஃபேக்.நான் பிறந்த உடன் என்னுடைய பாட்டி என்னைக் கூட கேட்காமல் என் அப்பாவின் பெயரையே எனக்கும் வைத்து விட்டார்கள்.அம்மா கூப்பிட முடியாது என்பதால் செல்வம் என்றும் பெயர் வைத்தார்கள்(நாங்க எல்லாம் எப்படி பேரு வாங்கி இருக்கோம் பாத்தீங்கல).பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போதும் M.Marimuthu@selvam என்றே கொடுத்து விட்டார்கள். கல்லூரியில் சேரும் போது தான் பிரச்சினையே(ஆமா பெரிய காவேரி பிரச்சினை).
அண்ணா பல்கலையில் computer application form ல் பெயர் entry செய்து கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.எப்படியோ எனது பெயரை M.Marimuthu A Selvam என்று அண்ணா பல்கலையில் register செய்து விட்டார்கள். எந்த ஆசிரியர் வந்து பாடம் எடுத்தாலும் என் பெயரை வைத்து காமெடி செய்த பிறகே பாடம் எடுக்க ஆரம்பிப்பார்கள்.நாளடைவில் அதுவே பழகிப் போனது.

இப்போது பாஸ்போர்ட் எடுக்க சென்ற போதும் பிரச்சினை தான்.பெயரை மாற்றி விட்டு வர சொல்லி விட்டார்கள்.எனவே பெயர் வைக்கும் போது எதற்கும் யோசித்து வையுங்கள்.இல்லை என்றால் உங்கள் பிள்ளைகளும் வந்து பதிவு போடும் ஜாக்கிரதை

முதலில் ஒரு அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் பதிவு.முதலில் என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் பிறந்தது கடலையூர் எனும் சிறு கிராமம். அப்பாவிற்கு மாற்றல் ஆகும் பணி என்பதால் வரிசையாக வைகை ஆறு,தாமிரபரணி ஆறு, பிறகு திருமணிமுத்தாறு ஆகிய ஆற்றங்கரைகளில் வசித்து வந்தோம் (ஒரு ஆசை தான்). படித்தது சென்னையில்.படித்து முடித்த பின் சென்னை "என்னைப் போடா வெண்ணை" எனறது. படித்தது டெக்ஸ்டைல்.பிறகு திருப்பூரில் 2 வருடங்கள் வேலை.இப்போது மீண்டும் சென்னையில்.

முதலில் எங்கள் ஊர் பற்றி சொல்லி விடுகிறேன்.எங்கள் ஊருக்குப் பக்கத்தில் தான் பாரதியார் ஊர்(எட்டையபுரம்).ஸாரி கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சில.பாரதி ஊருக்குப் பக்கத்து ஊர் தான் எங்கள் ஊர்.ஆனாலும் கூட எங்கள் ஊரில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் கூட இல்லாதது எங்கள் ஊரின் தனிச்சிறப்பு.கழுதை வயதாகியும் ஊரின் வாசம் இன்னும் நினைவுகளில் உள்ளது ஆச்சரியமான ஒன்று.

பள்ளிப் படிப்பு முடியும் வரை எங்கள் கல்லூரி வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் சரியான பண்டு.10 ம் வகுப்பில் மாவட்ட அளவில் 2 ஆம் இடம்.கலைஞர் கையால் பரிசு.உலகமே காலுக்குக் கீழ் என்று நினைத்தால், இல்லை.12 ம் வகுப்பில் குறைவான மதிப்பெண்.கிடைத்தது அண்ணா பல்கலையில் டெக்ஸ்டைல்.

முதல் செமஸ்டரில் அனைத்துப் பாடத்திலும் பாஸ் செய்வதற்குள் டவுசர் கிழிந்து விட்டது.(நன்றி-லக்கிலுக்)."படிக்கவா எடுத்தோம் பிறப்பு" என்று திடீர் ஞானம் வந்தததில், பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம் வந்தது.ஒரு வழியாக 8 செமஸ்டரையும் பெயிலெ ஆகாமல் படித்தது கின்னஸ் புத்தகதில் வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து கண்கள் பூத்து விட்டது.எங்கு போய் இந்த கண்டணத்தைப் பதிவு செய்வது என்று தெரியாததால் இன்று வரை செய்ய முடிய வில்லை.

பிழைப்பு தேடி மீண்டும் சென்னைக்கு வந்த போது அறிமுகமானவை தான் தமிழ்மணமும், தேன்கூடும்.நான் வந்த போது பதிவுலகமே அதிர்ந்து கொண்டிருந்தது(6 மாதங்களுக்கு முன்பு).
பிராய்டு சொல்லுவார்,மனிதனுக்கு இயல்பாக இருப்பது செக்ஸ் மற்றும் அக்ரெசன் இரன்டும் தான் என்று.வலைப்பதிவின் அக்ரெசனால் ஈர்க்கப்பட்ட நான் 6 மாதம் ஜாலியாக வேடிக்கைப் பார்த்து வந்தேன்.என்னுள் நிறைய மாற்றங்கள்.நிறைய புரிதல்கள்.நிறைய குழப்பங்கள்.இதை மேலும் வளர்க்கவே இந்த பதிவு முயற்சி. வாங்க பழகலாம்.

நன்றிகளுடன்.
மா.செல்வம்