Friday, February 29, 2008

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினால் கெட்டுவிடுவோமா?என்ன கொடுமை சார் இது...

சுஜாதாவின் நினைவாக சுஜாதா...என்ற இடுகையை இட்டிருந்தேன்.அதில் சுஜாதாரசிகன் என்ற பெயரில் ஒரு நண்பர் வந்து "மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினை முழுவதும் சொல்லி, இது தான் இலக்கியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.அவ‌ருக்கு சொல்ல‌ விரும்புவ‌து ஒன்றே ஒன்றுதான்.

தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா!!

சுஜாதா மட்டும் அந்த‌ மாதிரி எழுதியிருக்காவிட்டால் நான் ந‌ல்ல‌ பைய‌னாக‌ இருந்திருப்பேன் என்ப‌து வ‌டிவேலு காமெடியை விட‌ சிற‌ந்த‌து.

அவர் எழுதியிருந்தாலும்,எழுதியிராவிட்டாலும் நாம் இப்ப‌டியேதான் இருந்திருப்போம் என்ப‌து தான் நித‌ர்ச‌ன‌ம்.

சுஜாதா என்ற‌ வார்த்தையைக் கூட‌ கேள்விப் ப‌டாத‌ ந‌ம் கிராம‌த்து ம‌க்க‌ளின் பாலிய‌ல் க‌தைக‌ளை கி.ரா அவ‌ர்க‌ள் தொகுத்து த‌ந்திருக்கிறார்.(நாட்டுப்புற‌ பாலிய‌ல் க‌தைக‌ள்).ப‌டித்துப் பாருங்க‌ள்.

நாம் வாழ்க்கை முழுவ‌தும் ந‌ல்லவ‌ராக‌ இருப்ப‌த‌ற்கு ஒரே ஒரு வ‌ழிதான் உள்ள‌து.பிற‌ந்த‌வுட‌னே ஒரு அறைக்குள் சென்று க‌த‌வை மூடிக் கொண்டு இற‌ந்த‌ பிற‌கு தான் வ‌ர‌வேண்டும்.

ந‌ம் வாழ்க்கையில் ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளும் கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளும் ச‌ரி பாதி க‌ல‌ந்து தான் இருக்கும்.தேர்வு ந‌ம் கையில் தான் உள்ள‌து.

மெக்ஸிகோ ச‌ல‌வைக்காரியையும் தாண்டி, பிராம‌ண ஆத‌ர‌வையும் தாண்டி,எழுத்து வியாபார‌த்தையும் தாண்டி அவ‌ருடைய‌ எழுத்து ந‌ம் அனைவ‌ரையும் பாதித்து உள்ள‌து என்ப‌தே உண்மை.

குறிப்பு:

இந்த‌ இடுகைக்கு "தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா"என்ற‌ பெய‌ர் தான் வைக்க‌லாம் என்று இருந்தேன்.எதுக்கு வ‌ம்பு?யாரும் வ‌ந்து ப‌டிக்க‌மாட்டார்க‌ள் என்று தான் பெய‌ர் மாற்றி வைத்தேன்.
(இதே விச‌ய‌த்தைத் தான் அவ‌ரும் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பின்ப‌ற்றினார்.:-))

Thursday, February 28, 2008

சுஜாதா....மீள்பதிவு

சுஜாதா தமிழில் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது.நல்ல இலக்கியம் என்பதை வானமாகக் கொண்டு எழுத்தாளர்களைப் படிகளாகக் கருதினால் சுஜாதா என்ற படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு நிச்சயமாக செல்ல முடியாது.

உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்‍‍‍‍-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சத்யம் தியேட்டருக்கு morning-show பார்க்கச் சென்று விடுவான்.அவன் ராஜேஸ்குமாரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.பலரும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.

என்ன சிலர் சூழ்நிலை காரணமாகவோ, தீவிரமின்மை காரணமாகவோ, அந்த படிகளிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.

அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கவே இயலாது என்பது என் கருத்து.

1)சிறுகதைகள்‍ - குதிரை யில் காணப்படும் அங்கதம், மாஞ்சு வில் காண்ப்படும் Narration, சில வித்தியாசங்களில் காணப்படும் முடிவு

2)நாவல்கள் - பூக்குட்டி, அன்று உன் அருகில், என் இனிய இயந்திரா போன்றவை.

3)கட்டுரைகள் - 70 வயது நிறைவுக் கட்டுரை, வயது வந்தவர்களுக்கு மட்டும், ஆப்பிரேசன் கட்டுரை, அனுபவக் கட்டுரைகள்(குறிப்பாக அவர் பாட்டி,அப்பா,மனைவி பற்றி எழுதியவை)

4)இது போக அவர் நல்ல இலக்கியங்களையும் அறிமுகப் படுத்த தவறியதே இல்லை.நா.முத்துக்குமார், மகுடேஸ்வரன்,மனுஷ்யபுத்திரன் போன்றோரெல்லாம் அவரால் பிரபலப்படுத்தப்பட்டவர்கள் தான்.

5)விஞ்ஞான வரிசையில் "ஏன் எதற்கு எப்படி", "கடவுள் இருக்கிறாரா", "வீட்டுக்குள்ளே ஒரு உலகம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதைஎல்லாம் விட‌ ஸீரீர‌ங்க‌த்து தேவ‌தைக‌ள் (ப‌குதி 1) அவ‌ருடைய‌ ப‌டைப்பின் உச்ச‌ம் என்று கூட‌ சொல்ல‌லாம்.

மற்றோர் பிடித்த அம்சம் அவர் விமர்சனங்கள் காரணமாக எழுத்துத் துறையை விட்டு விலகியது இல்லை.

எதை எழுதினாலும் அதை சுவாரஸ்யமாக எழுதும் திறமை அவருக்கு வாய்த்து உள்ளது.சுஜாதா இல்லாத அந்த வெற்று இடத்தில் வேறு யாரை Replace செய்ய முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவர் நினைவுகளோடு.....

Wednesday, February 27, 2008

போய் வாருங்கள் சுஜாதா....

நீங்கள் ரோபோ படத்திற்கு இன்னும் இளமையாய் வசனம் எழுதுவீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தோம்.

க‌ற்ற‌தும்..பெற்ற‌தும் தொட‌ர் அறிவிப்பு இந்த‌ வார‌மாவ‌து வ‌ந்து விடாதா???என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

ச‌த்திய‌மாய் இதை நாங்க‌ள் எதிர்பார்க்க‌வில்லை.

எங்க‌ளையெல்லாம் வாசிக்க‌ வைத்து, சிரிக்க‌ வைத்து, சிந்திக்க‌ வைத்த உங்க‌ள் எழுத்துக‌ளுக்கு நெஞ்சார்ந்த‌ ந‌ன்றிக‌ள்...

உங்க‌ள் ஆத்மா சாந்திய‌டைய‌ட்டும்.உங்க‌ள் நினைவுக‌ள் எங்க‌ள் நெஞ்சில் எப்போதும் இருக்கும்.

THANK YOU VERY MUCH OUR DEAR SUJATHA....

Tuesday, February 26, 2008

காதலிப்பவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்களா???

என்ன நிசமாலுமே லவ் பண்றியா?...போடா லூசு(காதல் திரைப்படம்)

நிசமாத்தான் சொல்றீயா??(கற்றது தமிழ்)

நான் அழகா இருக்கேனா???(கண்ணாடில பாத்தாலே தெரியுமே!!)

என்னை ஏமாத்திற‌ மாட்டியே???(இது ஒட்டுக் கேட்ட‌து)

இன்னும் ஆயிர‌ம் ஹார்மோன்த‌ன‌மான கேள்விக‌ள் இருந்தாலும் பின்வ‌ரும் முக்கிய‌மான‌ கேள்விக‌ளை சாய்ஸில் விட்டு விடுகிறார்க‌ள் என்றே நினைக்கிறேன்.

1)உன் எதிர்கால‌ க‌ன‌வு என்ன?(என் ச‌ம்ப‌ள‌ம் 6500 ரூபாய்தான்.)

2)க‌ல்யாண‌த்திற்கு அப்புற‌மா உங்க‌ அப்பா அம்மாவையும்,எங்க‌ அப்பா அம்மாவையும் நாடு க‌ட‌த்திர‌லாமா?இல்ல‌ இங்க‌யே இருந்து தொலைக்க‌ட்டுமா?

3)க‌ல்யாண‌த்திற்கு அப்புறமா கொஞ்ச நாட்களிலேயே என‌க்கு டி.வில‌ கிரிக்கெட்,உன‌க்கு டி.வி ல‌ சீரிய‌ல் ஓ.கே வா?

4)இனிமே வரப்போற 40 வருசத்துக்கும் இதே மூஞ்சிதான்.பரவாயில்லையா?(இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்...என்ன பண்றது விதி)

பின்குறிப்பு:

Annexure 1

எனக்கு இந்த அனுபவம் இல்லை.காரணம் என் கல்லூரிப் பருவத்தின் ஒரு தலைக்காதலைத் திரைப்படமாக எடுத்தால் அது அவ்வாண்டின் சிறந்த நகைச்சுவைப் படமாக அமையும்.அதன் ஒன்லைன் இதான்...

"என் வாழ்க்கை எனும் சினிமாவில் அவளை நான் ஹீரோயினாகப் பார்க்க அவள் என்னைக் காமெடியனாகப் பார்த்தாள்.:-((

Annexure 2

Phone-in நிகழ்ச்சியில்..
நான்:மேடம் என்னை யாரும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்க...

டெலிபோன் பெண்:அப்படியா?நீங்க எப்படி இருப்பீங்க சொல்லுங்க...

நான்:ரஜினி மாதிரி

டெ.பெ:ஸ்டைலாவா??

நான்:இல்ல கருப்பா....S.P.B மாதிரி...

டெ.பெ:நல்லா பாடுவீங்களா???

நான்:இல்ல குண்டா இருப்பேன்.அப்புறம் நம்ம S.J சூர்யா மாதிரி...

டெ.பெ:அய்யய்யோ....Better Luck Next ஜென்மம்!!!!

Monday, February 18, 2008

அஞ்சாதே ‍- திரைவிமர்சனம்

அலுவலகத்தில் ஆணி பிடுங்குவதற்காக பாண்டிச்சேரி அனுப்பியிருந்தார்கள்.ஆணியெல்லாம் பிடுங்கி முடித்தபின்பு நைட்சோ - ‍அஞ்சாதே.

சத்யா,கிருபா என இரு நண்பர்கள்.இருவரின் அப்பாக்களும் காவல்துறையில் பணிபுரிகிறார்கள்.கிருபா போலீஸ் ஆகியே தீருவது என்ற வெறியோடு பயிற்சி எடுக்கிறான்.சத்யாவோ போலீஸில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஸ்டீரீட் தாதாவாகச் சுற்றுகிறான்.

சத்யாவின் பொறுப்பின்மையை சுட்டிக்காட்ட எப்போதும் கிருபாவுடன் ஒப்பிடுகிறார் சத்யாவின் அப்பா.இந்நிலையில் சிறுமிகளை பணத்திற்காகவும்,பலாத்காரத்திற்காகவும் கடத்திக் கொண்டு போகும் தயா கும்பலின் என்ட்ரி.

கிருபாவின் தங்கை குளிப்பதை தயா பார்ப்பதைப் பார்த்து டென்சனாகும் சத்யா கோவில் திருவிழாவின் போது தயாவைப் போட்டு பின்னியெடுக்கிறான்.இதைப் பார்த்த சத்யாவின் அப்பா அனைவர் முன்னிலையிலும் "நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்டா" என்று சத்யாவை அவமானப் படுத்த கோபமடைந்த சத்யா அவன் மாமா மூலமாக குறுக்கு வழியில் போலீஸில் சேர்கிறான்.

முறையான‌ பயிற்சி எடுத்துவ‌ரும் கிருபாவிற்கு போலீஸ் வேலை கிடைக்காம‌ல் போக, இத‌ற்குக் கார‌ண‌ம் குறுக்கு வ‌ழியில் வேலை வாங்கிய‌ ச‌த்யாதான் என்று அவ‌ன் மீது கோப‌ம் கொள்கிறான்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் போலீஸ் லைப் ஸ்டைலாலும், கிருபாவின் விரக்தி நிலையைப் பார்த்தும் சத்யா வருந்துகிறான்.

சத்யாவின் மீதான கிருபாவின் கோபத்தை தயா தன் சிறுமிகளைக் கடத்தும் தொழிலுக்குப் பயன்படுத்திகொள்கிறான்.கிருபாவும் பணத்தேவை,விரக்தி மற்றும் சத்யா மீதுள்ள கோபம் இவற்றால் தயாவுடன் சேர்கிறான்.

இந்த கும்பலைப் பிடிக்க பொன்வண்ணண் தலைமையில் ஒரு டீம் ஏற்பாடு செய்யப் படுகிறது.சத்யாவும் அந்த டீமில் ஒரு ஆளாக போடப்படுகிறான்.

தயா கும்பலைப் எப்படிப் பிடித்தார்கள்?அனைவரின் முடிவு என்ன என்பது தான் கிளைமேக்ஸ்...

சத்யாவாக நரேன்.சத்யாவாகவே மாறியிருக்கிறார்.ஆரம்பத்தில் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு அலம்பல் பண்ணுவது,போலீஸ் ஆன பின்பு அவர்கள் லைப்ஸ்டையிலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது,நண்பனும் தயா கும்பலோடு சேர்ந்து விட்டான் என்று வருத்தப் படுவது என்று பல இடங்களில் பின்னியிருக்கிறார்.ஆனால் ஆங்காங்கே ச‌ற்றே ஓவ‌ராக்ட்.

கிருபாவாக‌ அமீர்.த‌ன் லுங்கியை க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ பெண் அணிந்திருப்ப‌தைப் பார்த்த‌வுட‌ன் த‌லையில் அடித்துக் கொள்வ‌து, போலீஸ் ஆக‌ முடியாத‌ விர‌க்தி, என்று இவ‌ரும் மிர‌ட்டியிருக்கிறார்.

த‌யாவாக‌ பிர‌ச‌ன்னா.காக்க..காக்க‌ ஜீவ‌னையும்,வேட்டையாடு..விளையாடு இளாவையும் ஞாப‌க‌ப்ப‌டுத்தும் க‌தாபாத்திர‌ம்.ஆனால் த‌ன் ந‌டிப்பாலும்,மேன‌ரிச‌ங்க‌ளாலும்,அந்த சாயலே தெரியாமல் வித்தியாசப்ப‌டுத்திக் காட்டியிருக்கிறார்.

ஹலோ அங்கிள்!எப்படி இருக்கீங்க என்ற ஒற்றை வரியை மட்டும் டயலாக்காகப் (சென்னை 600028) பேசிய விஜயலக்ஷ்மி இதில் குறிப்பிடத்தகுந்த பாத்திரத்தை செய்துள்ளார்.ஹீரோவுடன் டூயட் பாடாமல் சமீபத்தில் நடித்த ஒரே ஒரு ஹீரோயின் இவராகத்தான் இருப்பார்.(திரிசா,அசின் கவனிக்க)

இன்னும் M.S.பாஸ்கர்,பொன்வன்னன், பாண்டியராஜன்,லிவிங்ஸ்டன்,குருவி என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பவர் என அனைவரும் கச்சிதமான பாத்திரப்படைப்புகள்.

படத்தின் உண்மையான ஹீரோ மிஷ்கின் தான்.தேர்வு செய்த கதையில் ஆகட்டும்,அதற்கு அவர் அமைத்த திரைக்கதை ஆகட்டும், படமாக்கியவிதமாகட்டும் மிஷ்கின் கலக்கியுள்ளார்.படத்தில் நிறைய புதுமைகள்.

1) கைக‌ளையும்,கால்க‌ளையும் ம‌ட்டும் நடிக்க‌ வைத்து சீன் மூடைக் கொண்டுவ‌ரும் காட்சிக‌ள் நிறைய‌ உள்ள‌து.

2) வான‌த்தில் காட்ட‌ப்ப‌டும் அரைநிலா,கிருபா சேற்றில் விழுவ‌து, கிருபாவின் த‌ங்கை அவ‌னை அடிக்க‌டி கைவில‌ங்கால் க‌ட்டிப்போடுவ‌து என்று நிறைய‌ காட்சிக‌ள் பொய‌ட்டிக் ஆக‌ உள்ள‌து.

ம‌கேஷின் ஒளிப்ப‌திவு.அதை விட‌ ப‌ட‌த்தின் லைட்டிங்.ஒவ்வோர் மூடிற்கும் ஒரு லைட்டிங் என‌ அச‌த்தியுள்ளார்.

ப‌ட‌த்தில் இர‌ண்டே இர‌ண்டு பாட‌ல்க‌ள் தான்.சேர்த்து வைத்து பிண்ணணி இசையில் மிர‌ட்டிவிட்டார்க‌ள்.

BTW "கண்ணதாசன் காரைக்குடி...என்ற பார் பாடலுக்கு ஏன் பாண்டியில் அவ்வளவு விசில்..எனக்குப் புரியவேயில்லை..யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ...

கடைசிக்காட்சியில் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு ஹீரோவும்,வில்லனும் சண்டை போடுவது போன்ற அபத்தக் காட்சிகளும் உண்டு.ஆனால் அதெல்லாம் மிகவும் குறைவே.வ‌ன்முறை ஜாஸ்தி.16 வ‌ய‌து சிறுமிக‌ள் என்ற‌ வ‌க்கிர‌ உணர்வைத்த‌விர்த்திருக்கலாம்.

மற்ற‌ப‌டி மிக‌ச் சிற‌ந்த‌ ஒரு த‌மிழ்த்திரைப்ப‌ட‌ம்.


பின்குறிப்பு:

இந்த‌ப் ப‌ட‌ம் ம‌ட்டும் ஓடாவிட்டால் காளைக‌ளும்,ப‌ழ‌னிக‌ளும் உங்க‌ளைத்(க‌ன‌வில்) துர‌த்தும் என்று அன்போடு எச்ச‌ரிக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்.

Sunday, February 17, 2008

ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது?

"பூஜா - சிங்களத்துக்காரி

ஆரியா - மலையாளத்தான். ஜம்ஷத்துண்ணு பேரு

கோணங்கி - தேவமாரு."


மேலே கூறிய அறிய தகவல்கள் அனைத்தும் நம் எழுத்துலக டைனசோரான திரு.ஜெயமோஹன் அவர்களின் (அதிகமில்லை ஜென்டில்மேன்...)2 பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட தகவல்கள்.

இர‌ண்டு ப‌திவுக‌ளில் இருந்து 3 பேர்க‌ளின் சமூக‌த்தை அறிய‌ முடிகிற‌து என்றால்,அவ‌ருடைய‌ ல‌ட்ச‌க்க‌ணக்கான‌ க‌ட்டுரைக‌ளைப் ப‌டித்தால் 10 கோடி த‌மிழ‌ர்க‌ளின் ச‌மூக‌த்தையும் அறிந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன்.

"சாதி இரண்டொழிய வேறில்லை"...."யாவருங் கேளீர்"...என்றெல்லாம் சொல்லிக் கொடுத்த நம் தமிழ் மொழியை 1 இஞ்ச் மேலே உயர்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை,எட்டிக் கீழே தள்ளாமல் இருந்தால் போதும்.

தெரிந்தோ,தெரியாமலோ நீங்கள் இந்த சமுதாயத்தின் icon ஆக உள்ளீர்கள்.உங்களைப் படித்து உங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தாலும் இருப்பார்கள்.அவர்களுக்காகவாது நீங்கள் எழுதுகின்ற‌ விஷயங்களை நீங்களே ஒருமுறை படித்து விட்டு அச்சு/வலையில் ஏற்றுங்கள்.

Friday, February 15, 2008

நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!!

"எல்லாவற்றையும் பகடி செய்வது சிதைந்த மனது" என்று அய்யனார் அவர்களின் பதிவில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஆம் அப்படிப் பார்த்தால் அந்த சிதைந்த மனது எனக்கும் உண்டு.

நான் கொஞ்சம் பருமனாக இருப்பேன்.(கொஞ்சம் என்பது பொய்).என்னுடைய கல்லூரிப்பருவத்தில் இதனால் நம்மை யாரும் ஓட்டுவார்களோ என்ற தாழ்வுமனப்பான்மையில் நான் எல்லோரையும் ஓட்ட ஆரம்பித்தேன் நகைச்சுவை என்ற பெயரில்.அத‌ற்கு எல்லோரும் சிரிப்பார்க‌ள்.நான் யாரை ஓட்டுகிறோனோ அவ‌ரைத்த‌விர‌.

நாள‌டைவில் எப்ப‌டி எல்லோரையும் ஓட்டுவ‌து என்று வித்தை (!)ப‌ழ‌க்க‌மான‌து.அதிலும் பெண்கள் அருகில் இருந்தால் இரு மடங்கு சக்தி வந்துவிடும்.இத‌னால் என‌க்கு எல்லோரும் ந‌ண்ப‌ர்க‌ள் ஆனார்க‌ள்.ஆனால் நெருக்கமாக ஒருவர் கூட‌ இல்லை என்ற‌ நிலை உருவான‌து.அவ‌னைத்த‌விர‌.

என்னிட‌ம் பேசிக்கொண்டிருந்தால் 10 நிமிட‌ங்க‌ள் பொழுது போகும் என்ற‌ நிலைமையில் தான் என்னிட‌ம் எல்லோரும் ப‌ழ‌கினார்க‌ள்.

இது குறித்து நான் அவனிடம் வருத்தப்படும் போதெல்லாம், "இதற்கெல்லாம் காரணம் நீயே தான்...ஒருவர் நம்மைப் பற்றி தப்பு சொன்னால் அவரைக் குறை சொல்லலாம்..ஆனால் எல்லோரும் நம்மைப் பற்றிக் குறை சொன்னால் நாம் தான் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்"என்று சொல்வான்.

அப்புறம் என்னைப்பற்றி சுயபரிசோதனை செய்து பார்த்ததில் என் தவறுகள் புரிய ஆரம்பித்தது.ஆனால் என்ன கல்லூரிப் பருவம் முடிந்துவிட்டது.

அங்கதம் குறித்து என் அனுபவத்தில் அறிந்து கொண்டவை:

1)நாம் ஒருவரைக் கிண்டல் செய்யத் துவங்கும் போது அவர்களை விட நம்மை உயர்வாக நினைத்துக் கொள்கிறோம்.

2)நம்முடைய கிண்டலுக்கு அடுத்தவர்கள் சிரிக்கும் போது நம் கண்கள் மேலே செருக ஆரம்பிக்கும்.உலகத்திலேயே நமக்கு கீழ் தான் எல்லோரும் என்ற நினைப்பு உருவாகும்.

3)உண்மை புரியும் போது நம் கூட நெருக்கமாக யாரும் இருக்க மாட்டார்கள்.

4)ஊரையே கிண்டல் செய்யும் விவேக் வகை நகைச்சுவைகளை விட தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் வடிவேல் வகை நகைச்சுவைதான் சிறந்தது.

இன்று ஜெயமோஹனும் அங்கதம் என்ற பெயரில் நான் செய்ததைத்தான் செய்துவருகிறார்.எனக்காவது என் தவறுகளை சுட்டிக்காட்ட அவன் இருந்தான்.ஆனால் அவருக்கு....அவருக்குத்தான் தெரியும்.

ஆக நான் ஒன்றும் ஜெயமோஹன் அளவிற்கு உயர்ந்துவிடவில்லை.அவர் தான் என் அளவிற்கு தாழ்ந்துள்ளார்.

கடைசியாக ஜெயமோஹனிடம் ஒரு கேள்வி

எழுத்துலக டைனசோரான நீங்கள் வசனம் எழுதித் தள்ளிய,தமிழ்நாட்டிலேயே 1000 நாட்கள் ஓடி சாதனை செய்த "கஸ்தூரிமான்"என்ற திரைக்காவியத்தை விட பழைய படங்கள் எதில் குறைந்து விட்டது?
(இதுவும் அங்க‌த‌ம் தான்)

Tuesday, February 12, 2008

ராஜ்தாக்கரேவும்,கலைஞரும் ஒன்றா? - என்ன கொடுமை சார் இது?

//மலேசிய தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுக்கலாம்; நான் மராட்டியர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா என நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்//

அடி கொடுப்பவர்களும், அடி வாங்குபவர்களும் ஒன்று என்று கண்டுபிடித்து சொன்ன ராஜ்தாக்கரே இன்று முதல் "இந்தியாவின் ஒரே விஞ்ஞானி"என்று அன்போடு அழைக்கப்படுவார்.(courtesy - புலிகேசி)

மலேசியாவில் தமிழர்கள் அடிவாங்கியதற்காக கலைஞர் குரல் கொடுத்தாரேயன்றி,மலேசியர்களை அடித்துவிட்டு குரல் கொடுக்கவில்லை.

ம‌ற்ற‌ மாநில‌ம‌க்க‌ளை அடித்து துரத்தும் ப‌ழ‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் கிடையாது.அவ‌ர்க‌ளுக்கு என்று ஒரு த‌னி ஏரியாவைக் கொடுத்து (ச‌வுக்கார்பேட்)அவ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கிறார்க‌ளா என்று ம‌ட்டும் அவ்வ‌ப்போது பார்த்து வ‌ருவோம்.(சைட் அடிக்கிற‌துக்கு என்னா பில்ட‌ப்பு..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..)

மொழிப்போராட்ட‌த்தோடு இதை போட்டுக் குழ‌ப்பிக் கொள்ளும் ஆப‌த்து இருப்ப‌தால் முன்னெச்ச‌ரிக்கையாக‌ இப்போதே சில‌ விள‌க்க‌ங்க‌ள்...

1)வ‌ட‌ நாட்டுக்கார‌ர்க‌ளின் மொழியைத்தான் வேண்டாம் என்று சொன்னோமே த‌விர‌ வ‌ட‌நாட்டு ஆட்கள் இங்கு வ‌ருவ‌தை வேண்டாம் என்று சொன்ன‌தில்லை.

2)"நான் உங்க‌ள் ஊரில் வியாபார‌ம் செய்ய‌ வேண்டும்..ஒழுங்காக‌ எங்க‌ள் மொழியைப் ப‌டியுங்க‌ள்"என்ப‌து போங்கு ஆட்ட‌ம் என்ப‌தால் தான் ஹிந்தியை வேண்டாம் என்று சொன்னோம்.

3)"ஹிந்தி வேண்டாம் என்று சொன்ன‌தால் தான் எங்க‌ளுக்கு என்று த‌னி ச‌ந்தை உள்ள‌து.தனித் திரைப்ப‌ட‌ங்க‌ள்,தொலைக்காட்சிக‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,தொழில்நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ள‌து.

எனவே எங்களை வைத்து ஒன்றும் காமெடி...கீமெடி பண்ணவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பின்குறிப்பு:

"என்ன‌ கொடுமை சார் இது?" என்ற‌ த‌லைப்பில் இனி அடிக்க‌டி இது போன்ற‌ சீரிய‌ஸ் விசய‌ங்க‌ள் சிரிய‌ஸாக‌ அல‌ச‌ப்ப‌டும் என்ப‌தை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, February 11, 2008

A.R.ரஹ்மான்‍ இது நியாயமா??.. LIVE CONCERT ஒரு பார்வை

சனிக்கிழமை பக்கத்து வீட்டு பையன் ஓடோடி வந்தான்."அண்ணா என்கிட்ட live concert க்கு 2 டிக்கெட் இருக்கு.உங்க‌கிட்ட வண்டி இருக்கு.உங்க வண்டில போலாம்னு சொன்னீங்கன்னா உங்களைக் கூட்டிட்டு போறேன்" என்றான்.ஒரு நிமிடம் பொல்லாதவன் தனுஷ் போல் உணர்ந்தேன்."சண்முகம் உட்றா வண்டிய"ன்னு(நாட்டாமை) சொல்லிக்கிட்டு என் சூரப்புலியைக் கிளப்பினேன்.(தெரியாதவர்களுக்கு சூரப்புலி என்பது ஹீமேனின் வாகனம்)...(டேய் நீ வச்சிருக்கிற‌ xl super க்கு இது கொஞ்சம் ஓவர்டா என்று என் தம்பி சவுண்டு விட்டான்)

YMCA போனவுடன் முதல் நுழைவுவாயிலில் நுழைந்தோம்.பதறிப் போன security "சார்..இது VIPங்க வர்ற வழி.நீங்க 4 வது வாசல் வழியா போங்க" என்றார்.(அங்கிருந்து பார்த்த போது A.R.ரஹ்மான் ஒரு புள்ளி போலத்தான் தெரிந்தார்.:-((

MARG என்ற கட்டுமான நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாதலால் முதலில் அவர்கள் நிறுவனத்தைப் பற்றி சிறிது நேரம் பேசினார்கள்.

A.Rரஹ்மான் மேடைக்கு வந்த போது அந்த மைதானமே அதிர்ந்தது.வாணவேடிக்கைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது.A.R.ரஹ்மான் ஹிந்தி பாடலைப் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

(எனக்கு "துமாரா நாம் கியா ஹை?" தவிர வேறு எதுவும் ஹிந்தியில் தெரியாது என்பதால் தமிழ்ப் பாடல்கள் பற்றி மட்டும் இங்கே...)

ஹ‌ரிஹ‌ர‌ன்,சித்ரா,சின்ம‌யி,ஷ்ரேயாகோச‌ல்,பிளேஸ்,போன்ற‌ பாட‌க‌ர்க‌ள் வ‌ந்திருந்தார்க‌ள்.(இன்னும் சில‌ பேர் பெய‌ர் தெரிய‌வில்லை..ஹி..ஹி..)

ஹரிஹ‌ர‌ன் ரோஜா பாட‌லில் இருந்து துவ‌ங்கினார்.வாய்ஸும்,இசையும் பொருந்தாம‌ல் ஏதோ சூப்ப‌ர் சிங்க‌ர் ஜூனிய‌ர் ஆடிஷ‌ன் ர‌வுண்டு பார்ப்ப‌து போல் இருந்த‌து.

A.R.ரஹ்மான் பாடிய‌ அத்த‌னை பாட‌ல்க‌ளும் அருமையாக‌ இருந்த‌து."அதிர‌டிக்காரன் மச்சான்..." (சிவாஜி)பாட‌ல் A.R.ரஹ்மானின் அதிர‌டி..

சித்ரா "க‌ண்ணாள‌ணே என‌து க‌ண்ணை..."(ப‌ம்பாய்)பாட‌லைப் பாடிய‌ போது ப‌ய‌ங்க‌ர‌ கிளாப்ஸ்.அவ‌ருடைய‌ குர‌லுக்கு ஒரு ஊரையே எழுதிவைக்க‌லாம்.என் பெய‌ரில் எந்த‌ ஊரும் இல்லாத‌தால் கை வ‌லிக்கும் வ‌ரை கை ம‌ட்டும் த‌ட்டினேன்.

பிளேஸ் "வாடா..வாடா(சிவாஜி) பாட‌லைப் பாடினார்.


"மதுரைக்கு போகாதடி...(ATM)பாடலை அந்த பாடகரே வந்து அசத்தலாகப் பாடினார்.

இது நியாயமா??..

1)"மதுரைக்கு போகாதடி.."பாட்டிற்கு கிடைத்த வரவேற்பு "தில்சேரே..." பாடலுக்கு இல்லாத போது ஏன் இவ்வளவு ஹிந்தி பாடல்கள்?

2)நீங்க‌ள் கொடுத்த‌ ஹிட் ப‌ட‌ங்க‌ள் ஏராள‌மாக‌ இருக்கும் போது ஏன் பாட‌ல் தேர்வில் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல்?(சிவாஜியில் இருந்து 3 பாட‌ல்க‌ள், ATMலிருந்து 3 பாடல்கள்,குரு ஹிந்தி படத்தில் இருந்து 3 பாடல்கள்..ஏன் உங்கள் ஹிட்டுகள் மறந்து விட்டதா?இல்லை பாடகர்கள் பற்றாக்குறையா?

3)பல பாடல்களில் குரலும்,இசையும் ஒட்டவேயில்லை.லக்ஷ்மன் ஸ்ருதி இதை விட 10 மடங்கு நன்றாகப் பண்ணுவார்கள்.பயிற்சியே எடுக்கவில்லையா?

4)கடைசியாக இங்கு வரும் வெளிநாடு/வெளிமாநில ஆட்களே "வண்க்கம்...நல்ல இர்க்கீங்களா?"என்று தமிழில் பேச ஆசைப்படும் போது மருந்துக்கு கூட ஒரு தமிழ் வார்த்தை இல்லை.. ஏன் ரஹ்மான்?

5)நீங்க‌ளே சொல்லுங்க‌ள் இது நியாய‌மா?

Saturday, February 2, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்

ஒரு சேஞ்சுக்கு படத்தின் நாயகன் நா.அழகப்பனே வந்து படத்தை விமர்சிக்கிறார்.ஓவர் டூ நா.அழகப்பன்.

வணக்கங்க.நாந்தான் நாவன்னா.அழகப்பன்.உங்க படத்த நீங்களே விமர்சனம் பண்ணுங்கன்னு நம்ம செல்வம் தம்பி கூப்டுச்சு.சரி தான் கழுதய பண்ணிட்டு போவோமுன்னு வந்தேன்.

படத்துல நான் ஒரு நாடக ட்ரூப் வச்சிருக்கேன்.(தியாகு,மனோபாலா தவிர மத்ததெல்லாம் நம்ம பசங்க தான்).ஓப்பனிங் சாங்க முடிச்சிட்டு வந்து பாத்தா எங்கம்மா என் சாதகத்த பாத்துட்டு பயந்து போய் கிடக்காங்க.அதுக்கு பரிகாரமா அங்கன தீடீரென முளச்ச ரம்பயோட சிலைக்கு மால போடுறேன்.

உடனே ஏற்கனவே என் நகைச்சுவையில மயங்குன (டி.வி ல வின்னர்,மருதமலை,புலிகேசி, படத்து ஜோக்ஸெல்லாம் பாத்துருக்கும் போல இருக்கு.ஏன்னா இந்தப்படத்துல நான் ஒன்னும் பெரிசா செய்யலியே) ரம்பை என்னை ஆள் வச்சு இந்திரலோகத்துக்கு தூக்கிட்டுப் போய்டுது.இருங்க..இருங்க முழுக்கதையும் சொல்றேன்.அதுக்குள்ள ஓடுனா எப்படி?

காலையில பூலோகத்துலயும்,நைட்டு மேலோகத்துலயும் இருக்கிற மாதிரி செட்டப்.அப்போ எப்ப தூங்குவ?னெல்லாம் கேட்கக் கூடாது.அழுதுடுவேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மேலோகத்துல இந்திரன் கடலை போடுறதையும், எமன் பாவம் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதையும் மாறி மாறி ஏதோ தீவுத்திடல்ல பொருட்காட்சி பாக்கிற மாதிரி பாக்குறேன்.

நடுவுல நாரதரா நாசர் அப்பப்போ வந்து போறாரு.எங்க பக்கத்து வீட்டு குழந்தை தீடீரினு செத்துப்போக,எனக்கு இந்த எமப் பய மேல வந்தது பாருங்க கோவம்...இன்டர்வெல்.

அதுக்கு அப்புறம் கதய எப்படி கொண்டு போறதுன்னு தெரியல.கழுதய கொண்டு போய்த்தான ஆகனும்னு, பூலோகத்துல காச்சுன சாராயத்த மேலோகத்துக்கு எடுத்துட்டு போய் கிங்கரப்பசங்களுக்கும்,சித்ரகுப்தனுக்கும் ஊத்திக் கொடுத்து இந்த எமப் பயல கொல்லலாம்னு பாத்தா,அந்தப் பயலுக்கு சாவே கிடையாதாம்.அந்த நன்னாரிக்கு பொறந்த நாதாறி எல்லாம் கனவுன்னு நம்பி எங்கள ஏதும் செய்யாம விட்டுடுச்சு.

சரி மக்களோட விதிய மேலோகத்துல இருந்து படிச்சிட்டு போய் பூலோகத்துல அதையெல்லாம் சொல்லி,நரகத்துல கொடுக்கிற தண்டனையையும் சொல்லி அவங்களோட பாவங்கள குறைக்கிறேன்.இதனால‌ முல்லைப் பெரியாறு பிரச்சினை வரைக்கும் தீந்துருதுன்னா பாருங்களேன்.படத்துலயே இதான் பெரிய காமெடின்னு சில நன்னாரிக சொல்லிக்கிட்டு திரியுதுங்க.இருக்கட்டும்...இருக்கட்டும்...

எமப்பயலோட வரவுல ஆட்கள் குறைய டென்சனாகிறாரு எமன்.நாரதர் வந்து என்னைப் போட்டுக் கொடுக்க கடுப்பான இந்திரனும்,எமனும் எனக்கும்,ரம்பைக்கும் சாபம் கொடுக்கிறாங்க.

கொடுமை,கொடுமைன்னு இவ்வளவு நேரம் படம் பாத்தா கிளைமேக்ஸ்ல ஒரு கொடுமை திங்கு,திங்குன்னு ஆடுச்சாங்குற கதையா நான் 90 வயசுக் கிழவனா மாறிடுறேன்.அப்புறம் என்ன ஆச்சு.கத முடிஞ்சது.உங்க கத இல்லீங்க.எங்க படத்தோட கதை.

முதல்ல படத்துல இருக்கிற நல்ல விசயங்கள பாப்போம்.முதல்ல ஞாபகம் வர்றது நம்ம தோட்டா தரணி அண்ணண் தான்.என்ன அருமையா,பிரம்மாண்டமா செட் போட்டுருக்காரு.உங்களுக்கு ஒரு தொப்பிதூக்கல்ணே(ஹேட்ஸாப்).

அப்புறம் இந்த எமப்பயலா வற்றானே.அவன் நல்லா நடிச்சிருக்கான்ப்பு.சும்மா சொல்லக்கூடாது.டயலாக் டெலிவரியும்,பாடி மாடுலேசனும் பய பின்னியிருக்கான்.அதுவும் நீங்க நல்லவரா?கெட்டவரா?ன்னு ஒருத்தன் கேட்குற சீன்ல பிச்சு உதறியிருக்கான்.

நம்ம ஒளிப்பதிவாளர் கோபிநாத்.நல்லா கலர்புல்லா படம்புடிச்சிருக்காரு அண்ணே.

அம்புட்டுதேன். இப்ப மத்த விசயங்கள பாப்போமா...(ஆஹா கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க)

படத்துல கதையும்,திரைக்கதையும் கொஞ்சம் அப்படி,இப்படி இருக்கிறதால நம்ம ஹீரோயினையும் கொஞ்சம் அப்படி,இப்படி காட்டியிருக்கோம்.ஒரு வார்த்தைல சொல்லனும்னா பில்லா நயந்தாராவுக்கு மேலா.என்ன‌ வ‌டிவேலு ப‌ட‌த்துல‌யா இப்ப‌டினு கேட்க‌க்கூடாது.வேற‌ வ‌ழியில்ல‌.

அப்புறம் படத்துல சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர்ற மாறியெல்லாம் சீன் இல்ல.ஏதோ அங்கொன்னும்,இங்கொன்னுமா எங்கள அறியாம வந்தது தான் இருக்கு.அதனால ஓவரா எதிர்பார்த்து படத்துக்கு வராதீங்க சொல்லிப்புட்டேன்.

வசனங்கள்.நம்ம தம்பிராமையா நல்லா தமிழ்ல வசனம் எழுதுறாப்ல.ஒத்துகிடுதோம்.அதுக்காக இப்படியா தீடீர் திடீர்னு...முடியல‌...

படத்துல நானும்,அந்த எமப்பயலும்,நாரதரும் நல்லா நடிச்சிட்டதால மத்தவங்கெல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான்.

எங்கண்ணண் கவுண்டமணி எமனாகவும்,செந்திலு சித்ரகுப்தனாகவும் நடிச்ச லக்கிமேன் அளவுக்கு கூட படம் இல்லைன்னு பாத்தவங்க சொல்றாங்க.வெயிட் பண்ணி பாப்போம்
எப்ப‌டி ஓடுதுன்னு.

மொத்ததுல தமிழ்மண வாசகர்களுக்கு புரியறா மாதிரி சொல்லனும்னா ஒரு நல்ல உபத்திரவம் இல்லாத,எந்த வம்பதும்புக்கும் போகாத,மொக்கை.

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.நாங்க எப்படி படம் எடுத்தாலும் வந்து பாக்குறீங்க...நீங்க ரொம்ப நல்லவங்க...(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

சரி வர்ட்டா...அடுத்து ஒரு நல்ல படத்துல சந்திப்போம்(எடுத்தா...)

நீதி:
வருடத்திற்கு சுமார் 100 தமிழ்ப்படங்கள் வெளிவரும்.அதில் 10 தான் நல்ல படங்களாக இருக்கும்.இன்னும் 11 மாசங்கள் இருக்கிறது.காத்திருப்போம்.

Friday, February 1, 2008

ஒரு எலியின் காறித்துப்பல்....மீள்பதிவு

சரி நம் கதைக்கு வருவோம்...அதற்கு முன் ஒரு விளம்பர இடைவேளை...
--------------------------------------------------------------------------------
இந்தியப் பதிவுகளில் முதன்முறையாக....
திரைக்கு வந்து ஒரு நாளே ஆன....
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் விமர்சனம் நாளை
உங்கள் கடலையூர் பதிவில்*....

வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆ.....

சாரிபா இரண்டும் மிக்ஸ் ஆயிடுச்சு...

இதை உங்க‌ளுக்கு வ‌ழ‌ங்குப‌வ‌ர்க‌ள்.....

வ‌ழ‌க்க‌ம் போல‌ அப்பா குடுக்கிற‌ காசு தான்...

* condition apply...பட‌ம் பார்த்தால் தான்
-------------------------------------------------------------------------------------

இந்த வோல்டுலயே பிந்நவீனத்துக்கு அப்புறமா நான் அதிகம் பயப்படுவது எங்க வீட்டு எலிக்குத்தான்.இப்படித்தான் சமீபத்தில் 1965 ல் இல்லீங்க..2008 ல் தான் ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அந்த எலி வந்தது.

"ஆஹா!பகலெல்லாம் நல்லா தூங்கிட்டு நைட்டு கரெக்ட்டா டூட்டி பாக்க வந்துடுச்சுடா"என்று மனதில் நினைத்து கொண்டே படாரென எழுந்தேன்

என்ன‌? என்றார் அம்மா.

"இல்லம்மா,அந்த‌ எலிய‌ அடிக்க‌ப் போறேன்" என்றேன்.

"சும்மா ப‌டுறா..நைட்டு டைம்ல‌ போய் காமெடி ப‌ண்ணிக்கிட்டு",என்றார் என்னைப் ப‌ற்றி ஏற்க‌ன‌வே தெரிந்து வைத்திருந்த‌ என் அம்மா.

மீண்டும் எலியின் உருட்ட‌ல்.அது என்னைப் பார்த்து சிரித்த‌தோ என்ன‌வோ??

ஒரு கையில் mob யும்,ஒரு கையில் தடியையும் எடுத்துக் கொண்டு சமயலறையில் நுழைந்தேன்.(அறுக்க மாட்டாதவன் கையில்... போன்ற பழமொழியெல்லாம் ஞாபகத்திற்கு வரக் கூடாது)

எலி என்னைப் பார்த்து "வாடா வாடா வாடா உன் ப‌ல‌த்துக்கும் என் ப‌ல‌த்துக்கும் சோடி போட்டுகிடுவோமா???வாடா வாடா "என்று கூப்பிட்ட‌து போல் இருந்த‌து.

கோபம் தலைக்கேற கண்ணை மூடிக்கொண்டு (பயத்துல தான்)ஒரே அடி.இரண்டாக உடைந்தது...அம்மா வாங்கி வைத்திருந்த பொங்கல் பானை.

மீண்டும் ஒரே அடி.இந்த‌ முறை வாங்கிய‌து நான்...அம்மாவிட‌ம்.ஏண்டா பொங்க‌ளுக்கு வாங்கி வ‌ச்சிருந்த‌ பானைய‌ யாராவ‌து உடைப்பாங்க‌ளா??நாந்தான் அப்ப‌மே சொன்ன‌னே..பேசாம‌ ப‌டுன்னு..கேட்டியா???

ந‌ல்ல‌ வேளை எலி என்னைப் பார்த்து காறி துப்பிய‌தை என் அம்மா பார்க்க‌வில்லை...