Wednesday, August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக....


அறைக்குள் மிகவும் பாதுகாப்பாக அமர்ந்து வினவு போன்ற சமூக தளங்களைப் படித்து விட்டு,அநியாயங்களுக்கு எதிராக பின்னூட்டங்கள் போடக் கூட பயந்து, முன் எச்சரிக்கையாக யாரோ எடுத்த திரைப்படங்களில் மொக்கையாகக் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் என் போன்ற ஆட்கள் மத்தியில் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் புரிகிறார் என்றால், உமாசங்கர் தான் உண்மையான கதாநாயகன்.

உமாசங்கரை அசால்ட்டாகத் தூக்கி எறியலாம் என்று நினைத்த அரசாங்கம் கூட, அவருடைய நெஞ்சுரத்தையும், அவருக்கு இருக்கும் ஆதரவையும் பார்த்து விட்டு “நாங்கள் ஒன்றும் பெரிய நடவடிக்கைகள் எடுக்க வில்லை. வெறும் தற்காலிகப் பணிநீக்கம் தான்” என்று இறங்கி வந்து அறிக்கை விட்டிருப்பதே அவருக்குக் கிடைத்த வெற்றி தான்.

தமிழகம் ஓரளவிற்கு முன்னேறியிருப்பதற்கான பல காரணங்களில் ஒன்று என்னைப் பொறுத்த வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஆட்சி மாற்றமும் தான்.அப்போது தான் இந்த அரசாங்கம் செய்த தவறுகளை அடுத்த அரசாங்கம் செய்ய ஓரளவிற்காவது பயப்படும்.

எண்ணற்ற இலவசத் திட்டங்களை அளித்திருந்தாலும் மின்வெட்டு, தொழிற்சுணக்கம், விலைவாசியேற்றம் என்று மக்களை எதிர்க்கட்சியை நோக்கித்தான் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது ஆளும் திமுக அரசு .கோவை, திருச்சி என எதிர்க்கட்சிக்குக் கூடும் கூட்ட்மே இதற்கு சாட்சி.

இன்னும் உமாசங்கர் போன்ற நேர்மையான, நெஞ்சுரமிக்க அதிகாரிகளைக் காவு வாங்கி எதிர்க்கட்சியை நோக்கி மக்களை வேகமாகத் தள்ளிவிடும் போக்கைக் கைவிட்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்

செல்வம்

Monday, July 26, 2010

கவிஞர் மகுடேஸ்வரனுடன் சந்திப்பு

”வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை”

எங்கு வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம் மேற்சொன்ன கவிதையை. இந்தக் கவிதையின் பின்புலத்தைக் கவிஞரின் வாயாலேயே கேட்கக் கூடிய பெரும்பாக்கியம் நேற்று எங்களுக்குக் கிடைத்தது.

திருப்பூர் வலைப்பதிவர் குழுமமாகிய ”சேர்தளம்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கவிஞர் மகுடேஸ்வரனுடன் திருப்பூர் பதிவர்கள் நேற்று உரையாடினோம்.

இது உண்மையில் ஓர் உரையாடல் அல்ல... அனுபவம்.... அந்த அனுபவத்திலிருந்து சில துளிகள் :

1. கவிஞரின் தமிழ்ப்பற்றுக்குக் காரணம் அவர்தம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர். அந்த தமிழாசிரியர் வகுப்பறையில் எப்படிப் பாடம் எடுப்பார் என்பதை பள்ளிக்கூட சிறுவனின் குதூகலத்தோடு பகிர்ந்தார். இன்றும் தமிழை வாழவைக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் தமிழாசிரியர்கள் தாம்.ஆனால் அவர்கள் (அனைவரும் அல்ல) கணித / அறிவியல் ஆசிரியர்களின் டியூசன் பற்றிய பொறாமையில் இருப்பது, நம் மொழியை செம்மொழி மாநாடு நடத்திக் காக்க வேண்டிய (!) நிலைக்குத் தள்ளியுள்ளது. (இதே ஆசிரியரிடம் படித்த மற்றொரு மாணவர் நம் பதிவர் முரளிகுமார் பத்மநாபன்)

2. கவிஞர் எழுதிய கவிதைகள் 90 களில் கணையாழியில் வெளிவந்தது, முதல் தொகுப்பிற்கு சுஜாதாவிடம் முன்னுரை பெற்றது, அதற்குக் கிடைத்த பாலச்சந்தரின் பாராட்டு போன்றவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.

3. கவிஞரின் சினிமாதொழில் குறித்தான எண்ணங்கள் மிகவும் யதார்த்தமானதாக, எளிதானதாக,இயல்பானதாக,கூர்ந்து நோக்கத் தக்க வகையில் இருந்த்து. யாருக்காவது சினிமாவில் நுழையும் எண்ணம் இருந்தால்,சிரமம் பார்க்காமல் கவிஞருடன் உரையாடிவிட்டுப் பின் செல்லவும்.

4. இது போக போனஸாக கோவையில் இருந்து வந்திருந்த திரு.செல்வேந்திரன் உடனான இலக்கிய உரையாடல்களும், பரிசல்காரனின் அவ்வப்போதைய டைமிங் கமெண்ட்டுகளும் சந்திப்பிற்கு இனிமை சேர்த்தது.

5. கவிஞருக்கு கிடைத்த இந்தியா டுடே பரிசான சன்னி - இரு சக்கர வாகனத்தை சென்னையில் இருந்து திருப்பூருக்கு ஓட்டிக் கொண்டு வந்த கதையைச் சிரிக்க சிரிக்கச் சொன்னார்.

6. இன்னும் ஜெயமோகன், சாரு, உலகமயமாக்கல், விவசாயம், திருப்பூர் தொழில், அரசியல் பார்வை என பலதரப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன.

உரையாடலில் கலந்து கொண்ட நண்பர்கள் :

வெயிலான், பரிசல்காரன், செல்வேந்திரன்,சிவகுமார் (வானகமே இளவெயிலே), சக்திவேல், பூந்தளிர் சாமிநாதன், முரளிகுமார் பத்மநாபன், செந்தில்நாதன், திருநாவுக்கரசு, ராமன், ரவிக்குமார் (குறும்பட இயக்குநர்) மற்றும் அவரது நண்பர், சொல்லரசன், ஆதவா, சௌந்தர் (வலைத்தள வாசகர்).

”சேர்தளம்” அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.

Saturday, July 17, 2010

எந்திரன் - நாங்க ரெடி?நீங்க ரெடியா?

முதலில் ஒரு கொசுவத்தி....

விளம்பரங்கள் :

2007 சூன் மாதம் ”சிவாஜி” திரைக்கு வந்தது. அதற்கு முன்பே அந்தத் திரைப்படத்திற்குத்தான் எத்துணை வழிகளில் விளம்பரங்கள்.
படத்தின் முன்னோட்டம் CNN-IBN இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அத்துணை வட இந்திய மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சிகளும் சிவாஜியைப் பற்றியே பேசின.சன் மட்டும் அடக்கி வாசித்ததாக ஞாபகம்.
பிரிண்ட் மீடியாவும் நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா? என்று சிவாஜியை மக்களிடம் கொண்டு சேர்த்தன.ஆனந்தவிகடன் சிவாஜிக்கென்றே வாராவாரம் தனிப் பக்கத்தை ஒதுக்கிக் கொடுத்தது.
வலையுலகில் கூட “சிவாஜி” படத்தைப் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதாவிட்டால் எங்கே கூகுள் நம் பிளாக்கரைத் தடை செய்து விடுமோ என்ற பயம் நிலவியது போல் தெரிந்தது.
ஆக மக்கள் மனதில் சிவாஜியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது.

விலை :

எங்கே சிவாஜி படத்தைப் பார்க்கவில்லை என்றால் நம்மையும் உள்ளே வைத்து விடுவார்களோ என்று பயந்து, முன்பதிவு ஆரம்பித்த நாளில் வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் காலை 5.00 மணிஅளவில் பல் கூட விலக்காமல் சுமார் 30 வது ஆளாக வரிசையில் நின்றேன். கஷ்டப்பட்டு டிக்கெட்டை வாங்கலாம் என்று பார்த்தால் அடுத்த செவ்வாய் கிழமைக்குத்தான் டிக்கெட் உள்ளது என்றார்கள். நானும் சரி “நமக்கு இன்னும் பயிற்சி போதவில்லையோ?” என்று நினைத்து செவ்வாய்க்கிழமை டிக்கெட்டை வாங்கினேன்.
ஆனால் அன்று மாலை நண்பர்களிடமிருந்து போன்,”அதே திரையரங்கில் ரிலீஸ் அன்றே இரவுக்காட்சி டிக்கெட் 300.00 ரூபாய். வாங்கியாச்சு. வந்துரு” என்று.

இதில் சில நண்பர்கள் பெருமையாக ”நாங்கள் 1000.00 ரூபாய் கொடுத்து சிவாஜி டிக்கெட் வாங்கினோம்,எங்களுக்கு எதாவது அவார்டு தருவார்களா?” என்ற தொனியில் கடுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.

நாம் அனைவரும் 300.00 / 500.00 / 1000.00 என்று டிக்கெட் வாங்கி ரஜினிகாந்த் கருப்புப் பணத்தை ஒழிப்பதைப் பார்த்ததைக் ”கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டில்” சேர்த்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை.

கொசுவத்தி முடிந்தது..

இனி...

எந்திரன் பாடல்கள் ஜீலை 31 ரிலீஸ். படம் ஆகஸ்டு 3 வது வாரம் ரிலீஸ். படத்தினை மார்க்கெட் செய்யப் போவது சன் டி.வி.3000 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். இப்பவே எந்திரன் காய்ச்சல் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிகிறது.பேசாமல் எந்திரன் கேப்சனை பின்வருமாறு போடலாம் -

”கொள்ளையடிக்க நாங்க ரெடி...நீங்க ரெடியா?”

மினி கொள்ளை:

டாக்டர் விஜய் அவர்களின் வேலாயுதம் படத்துவக்க விழா டி-சர்ட் விலை 999.00 ரூபாயாம். திருப்பூரில் நல்லா செஞ்சாலே ஒரு டி-சர்ட்டின் தயாரிப்பு செலவு 200.00க்கு மேலே போகாது. ஒரு வேளை தங்கத்துல செஞ்சாங்களோ என்னவோ?

இதையெல்லாம் மீடியாவும் பெரிதுபடுத்தாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் சினிமாவிலேயே நீடித்தால் நா.கதிர்வேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும், அரசியலுக்கு வரலாமா என்று யோசித்தால் ப.திருமாவேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும் போட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.

குறிப்பு:

தொடர்ந்து ஆனந்த விகடனையே குற்றம் சொல்லக் காரணம், அது நமக்குப் பிடித்தாற்போல் மாறாதா? என்ற ஆசையினால் தான்.

Monday, June 21, 2010

ராவணன் - படத்தின் அரசியல்

மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ள ராவணன் திரைப்படத்தின் இசை,ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,கலை, படமாக்கப்பட்டிருக்கும் இடம் போன்றவைகள் பற்றியும், கதை....(மல்லிச்சூ...அப்படி ஒன்றே விளம்பரத்தில் காணப்பட வில்லை)திரைக்கதை, வசனம் போன்றவைகள் பற்றியும் நிறைய வந்துவிட்டதால் அதன் அரசியல் குறித்து மட்டும் இங்கு பார்ப்போம்.

மணிரத்னம் மௌனராகம், அஞ்சலி, தளபதி, நாயகன், அலைபாயுதே என்று எடுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தேசிய நீரோட்டத்தில் கலந்து இந்திய / உலக சந்தைகளுக்காகவும் சேர்த்து எடுக்கப்பட்ட ரோஜா, குரு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் அரசியல் தான் உற்று நோக்கத்தக்கது.

ரோஜா படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், இந்துவைக் கதாநாயகனாகவும் காட்டி மதசார்பின்மையைப்(!) போதிக்கத் துவங்கியதில் இருந்து தொடர்கிறது மணியின் அரசியல்.

குரு படத்தில் அம்பானியைக் கதாநாயகனாக்கி நம்முன் உலவவிட்டதற்கு சம்பளம் பிக் பிட்சர்ஸின் ராவணன்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”அமுதா” வயதொத்த குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து காட்சி அமைத்து நம்மிடையே சமாதானம் குறித்த வகுப்பும் எடுத்திருப்பார்.

ராவணன் திரைப்படத்தில், ராவணனைக் கதாநாயகனாக்கி, ராமனை வில்லனாக்கி, எம்.ஆர் ராதா, ஆர்.எஸ் மனோகருக்குப் பின்பு புரட்சிகலைஞராகி இருப்பார் நம் மணிரத்னம் என்று பார்த்தால்....

ராவணன் நல்லவனாகவே இருந்தாலும், அவன் அடுத்தவன் மனைவியைப் பார்த்தவுடன், அவள் சற்று வெள்ளையாக இருந்தவுடன் அவள் மீது காதல் வயப்படும் பலவீனன் என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதைக் காட்டிய அளவிற்கு,ராவணன் நியாயமான விடயங்களுக்குத் தான் போராடுகிறான் என்பதை அழுத்தமாகக் காட்ட மணிக்கு தெரியாது என்றால் அதை நம்பத் தயாரில்லை.வெறும் மேட்டுக்குடி என்ற வார்த்தையை மட்டும் வைத்து ஒரு புரட்சியாளன் கதையை சொல்ல முடியும் என்று மணி நம்பியிருப்பதையும் நம்மால் நம்ப முடியவில்லை.

ராமன் என்னதான் மனைவி மீது சந்தேகப்பட்டாலும், அது ராவணனைப் பிடிக்க மேற்கொள்ளும் ராஜ தந்திரம் என்பதையும் மிக அழுத்தமாகக் காட்டியுள்ளார்.

அது மட்டுமில்லாமல், ராமபிரான் (கடவுள்) மீது வைக்கப்படும் விமர்சனமான மனைவியைச் சந்தேகப்படல் என்ற விடயத்தைக் கூட “சீதையும் மையல் கொள்வாள்” என்று மைல்டாகக் காட்டி ராம பக்தர்களையும் சந்தோசப்படுத்தியுள்ளார்.

இந்தியில் இந்த அரசியல்களுக்காகவும், தமிழில் மணிரத்னம் என்ற அறிவு ஜீவி பிராண்டிற்காகவும் நாம் கொடுக்கப்போகும் விலை சுமார் 120 முதல் 250 ஓவாக்கள்...

வாழ்க தமிழ்சினிமா..........

Monday, June 14, 2010

செம்மொழி மாநாடு - ஏன் புறக்கணிக்கக் கூடாது ?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் சூன் 23 தொடங்கி சூன் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதில் கணிணித் தமிழ் சார்பில் அமைக்கப்படும் அரங்கில் கலந்து கொள்ளலாம் என்று என் பெயரினைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கச் சொல்லி சில நண்பர்கள் மின்னஞ்சல்களிலும், வலைப்பதிவுகளிலும் கோரிக்கை விடுத்து விவாதம் செய்து வருகின்றனர்.

வலையுலகம் சார்பில் ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று என் பார்வையிலிருந்து எழுதுகிறேன்.

தமிழ் வலையுலகம் ஆரம்பிக்கப்பட்டு 6 முதல் 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்னும் இது பரவலாகப் பலரைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. சில நாட்களுக்கு முன் ”பிரபல”
என்ற வார்த்தை குறித்த சர்ச்சை வெளியான போது மூத்த வலைப்பதிவாளர் ஒருவர் கூறியிருந்த கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது. “இந்த தமிழ் வலையுலகில் மொத்தம் 4000 பேர் தேறினாலே பெரிய விடயம்”.

ஆம்...அது உண்மைதான் என்பது “பிரபல” பதிவுகளுக்கு வரும் ஹிட்சுகளை வைத்துச் சொல்லிவிடலாம்.

இன்றைய தமிழ் ஊடகங்களின் நிலையையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகச் சிறந்தது என்று சொல்லப்படும் ஊடகம் கூட தமிழகத்தின் செல்லக்குரல் அல்கா அஜித்தா? இல்லை ரோஷனா? என்று மக்களைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டுவரும் இச்சூழலில் மக்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஊடகம் இந்த வலையுலகம்.

அடுத்த பத்தாண்டுகளில் இணையம் இன்னும் பரவலாக்கப்பட்டு வீடு தோறும் இருக்கப் போகும் சூழ்நிலையில், மக்களுக்கு இப்போதே வலையுலகம் குறித்த அறிமுகம் அவசியம்.

தி.மு.க அரசு நடத்தப் போகும் இந்த மாநாடு போன்றதொரு மாநாட்டை வேறெந்த வகையிலும் நாம் (பதிவர்கள்) நடத்தி விட முடியாது.

நம் கொள்கைகளோ / இயக்கமோ / கட்சியோ / நிறுவனமோ வளர வேண்டுமென்றால் பொதுஜனத்தொடர்பு மிகவும் அவசியம். இம்மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் அத்தகைய மிகப்பெரிய பொதுஜனத் தொடர்பைப் புறக்கணிக்கிறோம். மாநாட்டிற்கு வரப்போகும் ஆட்சியாளர்கள் முதல் அடி மட்டத் தொண்டன் வரை நம் வலையுலகம் பற்றித் தெரிந்து கொள்ளட்டும்.

மாநாட்டில் பங்கு பெறுவோம். வலையுலகில் நிறைந்து கிடக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய, ஈழ, மாவோயிஸ, திராவிட, ஆன்மிக, பெண்ணிய, விமர்சன, இலக்கிய, மோதலிய, சர்ச்சைகளிய எழுத்துக்கள் அனைத்தையும் பொதுஜனத்திடமும் கொண்டு போய் சேர்ப்போம்.

Tuesday, March 16, 2010

நித்யா(னந்தா) அவார்ட்ஸ்...

இது வரை அருளாசிகள் வழங்கியது போதும்...இனி அவார்டுகள் வழங்கலாம் என்று நித்யானந்தா முடிவு செய்து குப்புறப் படுத்து யோசித்துக் கொண்டிருந்ததையும் நம் பத்திரிக்கைகள் சுட்டு விட்டன. அவையிவை.( அவார்ட் கொடுத்தாலே சுஜாதான்னு நினைப்பு...)

உலகத்திலேயே சிறந்த நடிகை:

ரஞ்சிதா (நான் சேவை தானே செஞ்சேன் என்று அப்பாவியாய்க் கேட்டதால்)

உலகத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் :

லெனின் (துல்லியமாகப் படம் பிடித்ததால்.)

உலகத்திலேயே சிறந்த பிண்ணனி இசை:

நக்கீரன் இணைய வீடியோ( நாக்டுதனா.....)

உலகத்திலேயே சிறந்த பல்டி பத்திரிக்கை:

குமுதம் (அப்போ : கதவைத் திற காற்று வரட்டும், இப்போ : சரசம்..சல்லாபம்...சாமியார்)

உலகத்திலேயே சிறந்த P.R.O

சாரு நிவேதிதா (வசனம் தேவையில்லை)

உலகத்திலேயே சிறந்த கார்ட்டூன்:

வினவு கார்ட்டூன்

உலகத்திலேயே சிறந்த துணிதுவைப்பவர்கள்:

பிளாக்கர்கள் (தொடர்ந்து கும்முவதால்)

உலகத்திலேயே சிறந்த சமாளிப்பு :

நான் அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன்.

உலகத்திலேயே சிறந்த கொடுமை:

நான் இன்னும் அந்த வீடியோவ பாக்கல

உலகத்திலேயே ரொமப நல்லவய்ங்க:

என்னோட பக்தர்கள். அவரு என்ன சொன்னாலும் நம்புறாங்க.

Thursday, March 11, 2010

ஆனந்த விகடனும்....சூப்பர் சாமியார் கட்டுரையும்

நித்யானந்த சுவாமிகளின் ஒழுக்கக் கேட்டைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு பறை அறிவித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியே தீருவோம் என்ற முடிவை சனநாயகத்தின் நான்காவது தூண்களான நக்கீரன், குமுதம் குழும இதழ்கள் எடுத்திருப்பதைப் பார்த்த ஆனந்த விகடன் குழுமமும் தன் பங்காக ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

கட்டுரையை எழுதியிருப்பது பா.திருமாவேலன். ஆனந்த விகடனில் அரசியல் , சமூக கட்டுரைகள் என்றாலே அது பெரும்பாலும் இவருடையதாகத்தான் இருக்கும்.

இவரும் வழக்கம் போல் அனைத்து சாமியார்களைப் பற்றியும் கண்டது, கேட்டது, படித்தது, அறிந்தது, அறியாதது எல்லாவற்றையும் வைத்து ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் படங்களும் போட்டாகி விட்டது.

என்ன ஆச்சரியம்....எல்லோர் பேரும் உள்ள அந்த கட்டுரையில் ஜக்கி வாசுதேவ் பேர் மட்டும் இல்லை. எங்கே அவர் பெயர் என்று பார்த்தால் அவர் வழக்கம் போல் சுபா தயவில் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ஏன் திருமாவேலனுக்கு ஜக்கி பற்றிய தகவல்கள் மட்டும் கிடைக்கவில்லை?

குமுதமும் இப்படித்தானே நித்யானந்தனின் அருளுரைகளை வழங்கி, அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. இப்போது அவரை வைத்து வேறு பிஸினஸ் ஆரம்பித்து விட்டது தனிக்கதை.

ஏன் இப்படி.. முற்போக்கு வேடம் ஏற்றாயிற்று சரி. அதையாவது ஒழுங்காகச் செய்ய வேண்டாமா? ஜக்கி மீது எந்தப் புகாரும் வரவில்லையே என்று சொல்லலாம். (புகார்கள் ஏற்கனவே வலையுலகில் கிடைக்கின்ற‌ன) ஆனால் புகார் வந்த பிறகு மட்டும் என்ன செய்கிறீர்கள் ? குறைந்த பட்சம் ஒரு மன்னிப்பு. ம்ஹூம்...சரி இனி எந்த சாமியாரின் கட்டுரைகளையும் வெளியிட மாட்டோம் என்ற அறிவிப்பு. ம்ஹூம்..... அதை வைத்தும் வியாபாரம்.

தயவு செய்து உங்கள் தலையங்கங்கள் ஆட்சியாளர்களை நோக்கிக் கை காட்டுவதோடு மட்டுமில்லாமல் உங்களை நோக்கியும் கை காட்டட்டும்.

செய்த தவறை ஒத்துக்கொண்டு, இனி அடுத்த தவறு செய்யாமல் இருப்பதே உங்களை 15.00 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் பேருதவி.

Monday, January 11, 2010

கமலும், வைணவமும்....

கமல் கஷ்டப்பட்டுத் தன்னை நாத்திகர் என்று சொல்லி வந்தாலும் இஷ்டப்பட்டு சில விஷ(ய)ங்களைத் தன் படங்களின் மூலம் சொல்லி வந்துள்ளார்.

ஆதரவாக அவரது பின்வரும் 4 படங்களைக் காண்போம்.

காதலா..காத‌லா..
க‌ம‌ல் த‌மிழ்க்க‌ட‌வுளாம் முருக‌னின் வேட‌ம‌ணிந்து ந‌டித்த‌ காம‌டி.கம‌ல் கிருஷ்ணராக வேடமேற்று, செளந்தர்யா பாமாவாகவும்,ரம்பா ருக்மணியாகவும் நடித்திருந்தாலும் அக்காட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால் கதை விவாத‌த்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகள் நாத்திகரான கமல் முருகனை வைத்துக் காமடி செய்தால் தான் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று கமலை ஏமாற்றிவிட்டார்கள்.

அன்பே சிவம்...
இந்த கதையின் நாயகன் கம்யூனிசம் பேசும் நாத்திகனாக இருந்த போதிலும், வில்லன் "ஓம் நமோ நாராயாணாய" என்று சொல்லாமல்,"தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லும் சிவபக்தராய் அமைந்தது நாத்திகரான கமலே எதிர்பாராத விஷயம்.

பம்மல் கே சம்பந்தம்...
ராயபுரம் சிவன் போல் நடிக்கத் தெரிந்த கமல் என்ற நாத்திகருக்கு ராயபுரம் விஷ்ணு போல் நடிக்கத் தெரியாது.

தசாவதாரம்...
இப் படத்திற்கு வசனம் தேவையில்லை :-))

இது போக வால் துண்டாக "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் தீவிரவாதியாக இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்க, கணிப்பொறி மேதையாக வரும் மாணவன் இந்து மதத்தைச் சார்ந்தவனாக‌ இருப்பது கமல் ஒரு மிகத் தெளிவான "நாத்திகர்" என்பதையே காட்டுகிறது.

"இதைய‌ல்லாம் பார்க்காதீர்க‌ள்...சினிமாவை சினிமாவாக‌ப் பாருங்க‌ள்" என்று கூறும் ந‌ண்ப‌ர்க‌ளுக்குப் ப‌தில்...

"சினிமாவை சினிமாவாக‌ எடுங்க‌ள்"