Monday, July 26, 2010

கவிஞர் மகுடேஸ்வரனுடன் சந்திப்பு

”வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை”

எங்கு வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம் மேற்சொன்ன கவிதையை. இந்தக் கவிதையின் பின்புலத்தைக் கவிஞரின் வாயாலேயே கேட்கக் கூடிய பெரும்பாக்கியம் நேற்று எங்களுக்குக் கிடைத்தது.

திருப்பூர் வலைப்பதிவர் குழுமமாகிய ”சேர்தளம்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கவிஞர் மகுடேஸ்வரனுடன் திருப்பூர் பதிவர்கள் நேற்று உரையாடினோம்.

இது உண்மையில் ஓர் உரையாடல் அல்ல... அனுபவம்.... அந்த அனுபவத்திலிருந்து சில துளிகள் :

1. கவிஞரின் தமிழ்ப்பற்றுக்குக் காரணம் அவர்தம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர். அந்த தமிழாசிரியர் வகுப்பறையில் எப்படிப் பாடம் எடுப்பார் என்பதை பள்ளிக்கூட சிறுவனின் குதூகலத்தோடு பகிர்ந்தார். இன்றும் தமிழை வாழவைக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் தமிழாசிரியர்கள் தாம்.ஆனால் அவர்கள் (அனைவரும் அல்ல) கணித / அறிவியல் ஆசிரியர்களின் டியூசன் பற்றிய பொறாமையில் இருப்பது, நம் மொழியை செம்மொழி மாநாடு நடத்திக் காக்க வேண்டிய (!) நிலைக்குத் தள்ளியுள்ளது. (இதே ஆசிரியரிடம் படித்த மற்றொரு மாணவர் நம் பதிவர் முரளிகுமார் பத்மநாபன்)

2. கவிஞர் எழுதிய கவிதைகள் 90 களில் கணையாழியில் வெளிவந்தது, முதல் தொகுப்பிற்கு சுஜாதாவிடம் முன்னுரை பெற்றது, அதற்குக் கிடைத்த பாலச்சந்தரின் பாராட்டு போன்றவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.

3. கவிஞரின் சினிமாதொழில் குறித்தான எண்ணங்கள் மிகவும் யதார்த்தமானதாக, எளிதானதாக,இயல்பானதாக,கூர்ந்து நோக்கத் தக்க வகையில் இருந்த்து. யாருக்காவது சினிமாவில் நுழையும் எண்ணம் இருந்தால்,சிரமம் பார்க்காமல் கவிஞருடன் உரையாடிவிட்டுப் பின் செல்லவும்.

4. இது போக போனஸாக கோவையில் இருந்து வந்திருந்த திரு.செல்வேந்திரன் உடனான இலக்கிய உரையாடல்களும், பரிசல்காரனின் அவ்வப்போதைய டைமிங் கமெண்ட்டுகளும் சந்திப்பிற்கு இனிமை சேர்த்தது.

5. கவிஞருக்கு கிடைத்த இந்தியா டுடே பரிசான சன்னி - இரு சக்கர வாகனத்தை சென்னையில் இருந்து திருப்பூருக்கு ஓட்டிக் கொண்டு வந்த கதையைச் சிரிக்க சிரிக்கச் சொன்னார்.

6. இன்னும் ஜெயமோகன், சாரு, உலகமயமாக்கல், விவசாயம், திருப்பூர் தொழில், அரசியல் பார்வை என பலதரப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன.

உரையாடலில் கலந்து கொண்ட நண்பர்கள் :

வெயிலான், பரிசல்காரன், செல்வேந்திரன்,சிவகுமார் (வானகமே இளவெயிலே), சக்திவேல், பூந்தளிர் சாமிநாதன், முரளிகுமார் பத்மநாபன், செந்தில்நாதன், திருநாவுக்கரசு, ராமன், ரவிக்குமார் (குறும்பட இயக்குநர்) மற்றும் அவரது நண்பர், சொல்லரசன், ஆதவா, சௌந்தர் (வலைத்தள வாசகர்).

”சேர்தளம்” அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.

Saturday, July 17, 2010

எந்திரன் - நாங்க ரெடி?நீங்க ரெடியா?

முதலில் ஒரு கொசுவத்தி....

விளம்பரங்கள் :

2007 சூன் மாதம் ”சிவாஜி” திரைக்கு வந்தது. அதற்கு முன்பே அந்தத் திரைப்படத்திற்குத்தான் எத்துணை வழிகளில் விளம்பரங்கள்.
படத்தின் முன்னோட்டம் CNN-IBN இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அத்துணை வட இந்திய மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சிகளும் சிவாஜியைப் பற்றியே பேசின.சன் மட்டும் அடக்கி வாசித்ததாக ஞாபகம்.
பிரிண்ட் மீடியாவும் நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா? என்று சிவாஜியை மக்களிடம் கொண்டு சேர்த்தன.ஆனந்தவிகடன் சிவாஜிக்கென்றே வாராவாரம் தனிப் பக்கத்தை ஒதுக்கிக் கொடுத்தது.
வலையுலகில் கூட “சிவாஜி” படத்தைப் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதாவிட்டால் எங்கே கூகுள் நம் பிளாக்கரைத் தடை செய்து விடுமோ என்ற பயம் நிலவியது போல் தெரிந்தது.
ஆக மக்கள் மனதில் சிவாஜியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது.

விலை :

எங்கே சிவாஜி படத்தைப் பார்க்கவில்லை என்றால் நம்மையும் உள்ளே வைத்து விடுவார்களோ என்று பயந்து, முன்பதிவு ஆரம்பித்த நாளில் வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் காலை 5.00 மணிஅளவில் பல் கூட விலக்காமல் சுமார் 30 வது ஆளாக வரிசையில் நின்றேன். கஷ்டப்பட்டு டிக்கெட்டை வாங்கலாம் என்று பார்த்தால் அடுத்த செவ்வாய் கிழமைக்குத்தான் டிக்கெட் உள்ளது என்றார்கள். நானும் சரி “நமக்கு இன்னும் பயிற்சி போதவில்லையோ?” என்று நினைத்து செவ்வாய்க்கிழமை டிக்கெட்டை வாங்கினேன்.
ஆனால் அன்று மாலை நண்பர்களிடமிருந்து போன்,”அதே திரையரங்கில் ரிலீஸ் அன்றே இரவுக்காட்சி டிக்கெட் 300.00 ரூபாய். வாங்கியாச்சு. வந்துரு” என்று.

இதில் சில நண்பர்கள் பெருமையாக ”நாங்கள் 1000.00 ரூபாய் கொடுத்து சிவாஜி டிக்கெட் வாங்கினோம்,எங்களுக்கு எதாவது அவார்டு தருவார்களா?” என்ற தொனியில் கடுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.

நாம் அனைவரும் 300.00 / 500.00 / 1000.00 என்று டிக்கெட் வாங்கி ரஜினிகாந்த் கருப்புப் பணத்தை ஒழிப்பதைப் பார்த்ததைக் ”கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டில்” சேர்த்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை.

கொசுவத்தி முடிந்தது..

இனி...

எந்திரன் பாடல்கள் ஜீலை 31 ரிலீஸ். படம் ஆகஸ்டு 3 வது வாரம் ரிலீஸ். படத்தினை மார்க்கெட் செய்யப் போவது சன் டி.வி.3000 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். இப்பவே எந்திரன் காய்ச்சல் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிகிறது.பேசாமல் எந்திரன் கேப்சனை பின்வருமாறு போடலாம் -

”கொள்ளையடிக்க நாங்க ரெடி...நீங்க ரெடியா?”

மினி கொள்ளை:

டாக்டர் விஜய் அவர்களின் வேலாயுதம் படத்துவக்க விழா டி-சர்ட் விலை 999.00 ரூபாயாம். திருப்பூரில் நல்லா செஞ்சாலே ஒரு டி-சர்ட்டின் தயாரிப்பு செலவு 200.00க்கு மேலே போகாது. ஒரு வேளை தங்கத்துல செஞ்சாங்களோ என்னவோ?

இதையெல்லாம் மீடியாவும் பெரிதுபடுத்தாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் சினிமாவிலேயே நீடித்தால் நா.கதிர்வேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும், அரசியலுக்கு வரலாமா என்று யோசித்தால் ப.திருமாவேலனை வைத்து ஒரு கவர் ஸ்டோரியும் போட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.

குறிப்பு:

தொடர்ந்து ஆனந்த விகடனையே குற்றம் சொல்லக் காரணம், அது நமக்குப் பிடித்தாற்போல் மாறாதா? என்ற ஆசையினால் தான்.