Tuesday, June 17, 2008

தசாவதாரம் -‍ கடலையூர் கிராமத்தில் இருந்து விமர்சனம்.

என்ன அண்ணாச்சி தசாவதாரம் படம் பாத்தீயளா??? எப்படி இருக்கு?

"பாத்தம்வே என்னத்த சொல்ல"???

அண்ணாச்சி....என்ன ஆளவந்தான் பார்ட் டூ மாதிரி ஆயிடுச்சா???

சே..சே அப்படி இல்லவே ....படம் பரவாயில்லவே....என்ன சில இடத்துல தான் மனசொப்பல..

விவரமா சொல்லுங்க அண்ணாச்சி.....

நீயே சொல்லும்வே.... நாம தமிழ் படத்துக்குதான போயிருக்கொம்...ஆனா இங்கன பாதி பேரு என்ன பேசுரானே புரியல....

அதுக்குத்தான் கீழே எழுதுராங்கலாம்ல...

என்னல நீயும் ஆக்கங்கெட்ட கூவ கணக்க பேசுத....நாம என்ன மாநில மொழி திரைப்படத்துக்கால போயிருக்கோம்....கீழ எழுத்துக் கூட்டிப் படிக்க....

சரி விடுங்க அண்ணாச்சி...மேல சொல்லுங்க....

நானும் இந்த ஊருல 40 வருசமா இருக்கம்ல.ஆனா இங்கன இருக்கிற எட்டயபுரத்துக்கே வழி தெரியாது.ஆனா எங்கனையோ இருந்து வந்த வெள்ளக்காரன் வில்லன் பய மெட்ராஸ், செங்கல்பட்டுனு சந்து சந்தா ஹீரோவைத் துரத்துராம்வே....

என்ன அண்ணாச்சி நீங்களும் லாஜிக் எல்லாம் பாத்துக்கிட்டு......

எல கேக்குரவன் கேனையனா இருந்தா......

இருந்தா.....

விடுல அதுக்கு மேலே அவுகளே நிரப்பிக்கிடுவாகா....

அப்புறம் ஒப்பனை பத்தி சொல்லலியே அண்ணாச்சி....

அதுல சும்மா சொல்லக்கூடாதுவே....நல்லா பண்ணியிருகாக...ஆனா பல மேக்கப்பு இந்தியன் தாத்தா மாதிரியும், சண்முகி மாமி மாதிரியும் இருக்குறத தவித்துருக்கலாம்வே....அதே மாதிரி தேவையே இல்லாத மேக்கப்புகளும் படத்துல இருக்குதுவே....

அண்ணாச்சி என்ன சும்மா நொள்ளை சொல்லிக்கிட்டே இருக்கீங்க....படத்துல நல்லதே இல்லையா....

என்னவே இப்படி பேத்தனமா கேட்டுப்புட்ட.படத்துல வார தொழில்நுட்பம் எல்லாம் தமிழ்சினிமாவ அடுத்தக் கட்டத்துக்கு கூட்டிட்டு போவுதுவே....உதாரணமா கேமரா.நம்ம ரவிவர்மன் தம்பி இருக்குல்ல அது ஏதொ ஸ்பீல்பெர்க் படம் எடுத்த மாதிரில எடுத்துருக்கு....

என்ன இவ்வளவு உழைப்பையும், நல்ல கதைக்கு, நல்ல படத்துக்கு கொட்டியிருந்தா எல்லாத்துக்கும் சந்தோஷம் தானவே....அதான் துக்கமா கிடக்கு.ஆனா படத்த பாக்காம மட்டும் இருந்துராதல....பாரு என்ன‌!!!!

பின்குறிப்பு :அடுத்த பதிவு ... தசாவதாரத்தில் அரசியல்

Sunday, June 15, 2008

தசாவதாரம் ‍- திரை விமர்சனம்

உலகையே அழிக்கக் கூடிய ஒரு பயோ‍ வெப்பன் தீவிரவாதிகளின் கையில் கிடைக்க விடாமல் செய்யும் நாயகனின் முயற்சி என்ற ஜேம்ஸ்பாண்டு / ஜாக்கிசான் வகைப்படக் கதைதான்.

(கமல் சார் நீங்க மட்டும் தான் இங்கீலீசு படம் பாப்பீங்களா?? நாங்களும் பாப்போம்ல ‍ உ.ம் நம்பி பாத்திரம் ஓம் நமோ நாராயாணாய நமக என்று சொல்வது மெல்கிப்சன் "சுதந்திரம்" என்று கத்துவதைத் தேவையில்லாமல் நினைவூட்டுகிறது.)

இதை அப்படியே எடுத்தால் மும்பை எக்ஸ்பிரெஸ் / ஆளவந்தான் போன்ற வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துவிடும் என்பதால் பத்து அவதாரங்கள்,நிறைய அரசியல் என்று ஜிம்மிக்ஸ் காட்டியுள்ளார்.

முதலில் கமலின் உழைப்பு."வந்தோமா...இரண்டு பஞ்ச் டயலாக் பேசுனோமா...4 பாட்டுப் பாடுனமா என்று இல்லாமல் (சத்தியமா குருவி பத்தி சொல்லலீங்கோ)என்று இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே உழைத்துள்ளார்.லக்கிலுக் சொன்னது போல் தேவையில்லாத அவதாரங்களையும் எடுத்துள்ளார்.உ.ம் நெட்டைப் பாத்திரம்.

கமலைப் பார்த்து பார்த்து கடைசியில் பக்கத்து சீட்டில் உட்காந்திருப்பவர் கூட கமல் தானோ என்ற சந்தேகம் வருகிறது.இருந்தாலும் மனதில் நிற்கும் பாத்திரங்கள்...

1) பூவராகவன்
2) போலீஸ் அதிகாரி ‍(தெலுங்கு பேசுப‌வ‌ர்.)
3) வில்ல‌ன் க‌ம‌ல் ‍ (மேக்க‌ப் த‌விர்த்து)
4) நம்பி பாத்திரம்

அசின் நன்றாக செய்துள்ளார்.இருந்தாலும் மோசமான பாத்திரப் படைப்பு.எனக்கு விஜய் டி.வி நீயா...நானாவில் பேசிய "குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்காகப் புண்ணியம் செய்த பெண்" தான் நினைவுக்கு வந்தார்.க‌டைசி சீனில் த‌மிழ்சினிமாவின் இல‌க்க‌ண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ கம‌ல் மீது காத‌லும் வ‌ந்து விடுகிற‌து.

எல்லா சீனிலும் கமலே வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைந்து விடுகிறது.இதை கமல் எப்போது நிறுத்துவாரோ...தெரியவில்லை.இந்த படத்தில் அப்படி வந்து போனவர்களுள் முக்கியமானவர்கள்....கபிலன்,நாகேஷ்,கே.ஆர்.விஜயா,மல்லிகா ஷெராவத் போன்றோர்.

படத்தின் குறிப்பிடத் தகுந்த அம்சங்கள் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், எடிட்டிங், சில மேக்கப்கள் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தான்.அசத்தியுள்ளார்கள்....

ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்கள் சில இடங்களில் சுஜாதாவையும், சில இடங்களில் கிரேசி மோஹ‌னையும் நினைவூட்டுகிற‌து.எதுக்கு வ‌ம்பு என்று க‌ம‌ல் த‌ன் பெய‌ரைப் போட்டுக் கொண்டாரோ???(என்ன‌ கொடுமை சார் இது?)

ஹிமேஷ் இசையில் உலகநாயகனே பாடலும், கல்லை மட்டும் பார்த்தால் பாடலும் ஓ.கே.

கே.எஸ் ரவிக்குமார் தன்னால் ஹாலிவுட் ரேஞ்சிற்கு மசாலா படங்கள் :-(( எடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

உலகத்தரம் என்ற வியாதியின் காரணமாக ஹாலிவுட் கதையையே அடித்திருப்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இது தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சியைப் பார்க்க விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்திற்குள் தாராளமாக நுழையலாம்.எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி...

பின்குறிப்பு :

அடுத்த பதிவு...கடலையூர் என்ற கிராமத்து ர‌சிக‌ர் பார்வையில் இருந்து தசாவதாரம் விமர்சனம்...

என்ன‌ ப‌ன்ற‌து...இந்த‌ வார‌ம் த‌சாவதார‌ம் வாரம்னு ஆகிப்போச்சுல‌..அது ம‌ட்டுமில்லாம‌ல் சிவாஜி ப‌ட‌த்திற்கு வ‌ந்த‌தை விட‌ த‌சாவதார‌ம் ப‌ட‌த்திற்கு அதிக‌ப் ப‌திவுக‌ள் கொண்டு வ‌ற்ற‌துன்னு குல‌ தெய்வ‌ம் கோயில்ல‌ வ‌ச்சு ச‌த்திய‌ம் வேற‌ ப‌ண்ணியிருக்கோம்...

Monday, June 2, 2008

சந்தோஷ் சுப்ரமணியமும், தமிழ் சினிமாவும்....

நேற்று உயிரைப் பணயம் வைத்தாவது சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்து விடுவது என்று முடிவு கட்டினேன்.ஒவ்வொரு திரையரங்காக பார்த்து கடைசியில் உதயம் வந்து சேர்ந்தேன்.

சந்தோஷ் சுப்ரமணியம் டிக்கெட் இருக்கா என்று கேட்டதற்கு ஒருவர்.."வேணும்னா குருவி இருக்கு பாக்குறியா? என்றார்.தியேட்டர் என்றும் பாராமல் அவர் காலில் விழுந்து திடுத்திடுவென ஓடி ரோஹிணி வந்து சேர்ந்தேன்.50 நாட்களைக் கடந்த பின்னும் ஏறத்தாழ முழு திரையரங்கும் நிரம்பி இருந்தது.

படம் பற்றி பல பதிவுகள் வந்துவிட்டதால் மீண்டும் அதையே சொல்லி மொக்கைப் போட விரும்பவில்லை.படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி கேரம்போர்டு விளையாடும் காட்சி தான்.

தந்தைக்கும், மகனுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மிக அழகாக சொல்லியிடுக்கிறார்கள்.

இந்த‌ப்ப‌ட‌மும் திரைய‌ர‌ங்கில் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக்கொண்டு தான் இருக்கிற‌து.ஆபாச‌ம் இல்லை...வ‌ன்முறை இல்லை... ப‌ஞ்ச் ட‌ய‌லாக்குக‌ள் இல்லை...பறந்து போய் ரயிலைப் பிடிக்க வில்லை...பின் எப்படி ???மக்களுக்கு மறை கழண்டு விட்டதா??? ஏதோ பீம்சிங் காலத்து படம் மாதிரி இருக்கு..இது எப்படி ஓடுது??? என்று கோட‌ம்பாக்க‌த்துக்கார‌ர்க‌ள் ரூம் போட்டு ம‌ண்டையைப் பிடித்துக் கொண்டிருப்ப‌தாக‌க் கேள்வி...

ம‌க்க‌ள் பார்க்கிறார்க‌ள்...நாங்க‌ள் கொடுக்கிறோம் என்ற கேனைத்தனமான வாத‌ம் இனி எடுப‌டாதோ என்ற பீதி எழுந்துள்ளது.

ஞாநி இயக்குநர் அமீருடனான விவாதத்தில் ஒரு மிகச் சிறந்த கருத்தைச் சொன்னார்."ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல எண்ணங்களும்,வக்கிர எண்ணங்களும் சரிபாதியாக உள்ளது.மொழி போன்ற படங்கள் நல்ல எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன...பருத்திவீரன் போன்ற படங்கள் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன" என்றார்.

மற்றொரு விஷயம்,வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது என்பது எளிதான வேலை.நல்ல விஷயங்களுக்கு தீனி போடுவது தான் கடினமான வேலை.ஒவ்வொரு ஆண்டும் 100 படங்கள் வந்தாக வேண்டிய நிலையில் எல்லாப் படங்களும் நல்ல எண்ணங்களுக்குத் தீனி போடும் வகையில் எடுப்பது என்பது பணவீக்கத்தைக் குறைப்பதை விட கடினமான வேலை.

ஆனா இப்படி காப்பி அடிச்சாவது அப்பப்ப நல்ல எண்ணங்களுக்கும் தீனி போடுங்கப்பா...