Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, July 26, 2010

கவிஞர் மகுடேஸ்வரனுடன் சந்திப்பு

”வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை”

எங்கு வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம் மேற்சொன்ன கவிதையை. இந்தக் கவிதையின் பின்புலத்தைக் கவிஞரின் வாயாலேயே கேட்கக் கூடிய பெரும்பாக்கியம் நேற்று எங்களுக்குக் கிடைத்தது.

திருப்பூர் வலைப்பதிவர் குழுமமாகிய ”சேர்தளம்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கவிஞர் மகுடேஸ்வரனுடன் திருப்பூர் பதிவர்கள் நேற்று உரையாடினோம்.

இது உண்மையில் ஓர் உரையாடல் அல்ல... அனுபவம்.... அந்த அனுபவத்திலிருந்து சில துளிகள் :

1. கவிஞரின் தமிழ்ப்பற்றுக்குக் காரணம் அவர்தம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர். அந்த தமிழாசிரியர் வகுப்பறையில் எப்படிப் பாடம் எடுப்பார் என்பதை பள்ளிக்கூட சிறுவனின் குதூகலத்தோடு பகிர்ந்தார். இன்றும் தமிழை வாழவைக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் தமிழாசிரியர்கள் தாம்.ஆனால் அவர்கள் (அனைவரும் அல்ல) கணித / அறிவியல் ஆசிரியர்களின் டியூசன் பற்றிய பொறாமையில் இருப்பது, நம் மொழியை செம்மொழி மாநாடு நடத்திக் காக்க வேண்டிய (!) நிலைக்குத் தள்ளியுள்ளது. (இதே ஆசிரியரிடம் படித்த மற்றொரு மாணவர் நம் பதிவர் முரளிகுமார் பத்மநாபன்)

2. கவிஞர் எழுதிய கவிதைகள் 90 களில் கணையாழியில் வெளிவந்தது, முதல் தொகுப்பிற்கு சுஜாதாவிடம் முன்னுரை பெற்றது, அதற்குக் கிடைத்த பாலச்சந்தரின் பாராட்டு போன்றவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.

3. கவிஞரின் சினிமாதொழில் குறித்தான எண்ணங்கள் மிகவும் யதார்த்தமானதாக, எளிதானதாக,இயல்பானதாக,கூர்ந்து நோக்கத் தக்க வகையில் இருந்த்து. யாருக்காவது சினிமாவில் நுழையும் எண்ணம் இருந்தால்,சிரமம் பார்க்காமல் கவிஞருடன் உரையாடிவிட்டுப் பின் செல்லவும்.

4. இது போக போனஸாக கோவையில் இருந்து வந்திருந்த திரு.செல்வேந்திரன் உடனான இலக்கிய உரையாடல்களும், பரிசல்காரனின் அவ்வப்போதைய டைமிங் கமெண்ட்டுகளும் சந்திப்பிற்கு இனிமை சேர்த்தது.

5. கவிஞருக்கு கிடைத்த இந்தியா டுடே பரிசான சன்னி - இரு சக்கர வாகனத்தை சென்னையில் இருந்து திருப்பூருக்கு ஓட்டிக் கொண்டு வந்த கதையைச் சிரிக்க சிரிக்கச் சொன்னார்.

6. இன்னும் ஜெயமோகன், சாரு, உலகமயமாக்கல், விவசாயம், திருப்பூர் தொழில், அரசியல் பார்வை என பலதரப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன.

உரையாடலில் கலந்து கொண்ட நண்பர்கள் :

வெயிலான், பரிசல்காரன், செல்வேந்திரன்,சிவகுமார் (வானகமே இளவெயிலே), சக்திவேல், பூந்தளிர் சாமிநாதன், முரளிகுமார் பத்மநாபன், செந்தில்நாதன், திருநாவுக்கரசு, ராமன், ரவிக்குமார் (குறும்பட இயக்குநர்) மற்றும் அவரது நண்பர், சொல்லரசன், ஆதவா, சௌந்தர் (வலைத்தள வாசகர்).

”சேர்தளம்” அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.

Sunday, May 4, 2008

உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??

உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்த‌வுடன் அவர் கேட்ட முதல் கேள்வி..

"த‌ம்பி எங்க‌ வேலைபார்க்கிறான்???"

"Wipro வுல"

"சம்பளம் எவ்வளவு வரும்???"

"17000 வரும்."

"என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே சேத்தீங்க??"

"இல்ல Campus Interview....

"சரி உனக்கு எவ்வளவு வரும்??"

"எனக்குத் திக் என்றது.என் தம்பிக்கே இந்தக் கதியென்றால் துகிலியல் துறையில் பணிபுரியும் என் கதி...."

"ஒரு 9000 வரும்."

"என்னது??9000...இதெல்லாம் ஒரு வேலைன்னு பாத்துக்கிட்டு இருக்க...பேசாம வுட்டுடு".

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தேன்.

சரி..சரி ஊருக்குப் போகனும்.பஸ்ஸுக்கு காசில்லை.ஒரு 250 ரூபாய் இருந்தாக் கொடு..கல்யாண‌த்துக்கு வரும் போது தந்திர்றேன்...

Friday, October 26, 2007

குழந்தைகள்...ஜாக்கிரதை

காலையில் குளிப்பதற்காக பக்கெட், சோப், சகிதமாக குளியலறை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.பக்கத்து வீட்டுப் பாப்பா(வயது 1 1/4)குளித்து முடித்து விட்டு ஆடையில்லாமல் நின்று கொண்டிருந்தது.நான் என்னுடைய குழந்தைப் பருவத்திற்கே போய் "ஷேம்,ஷேம் பப்பி ஷேம்" என்று சொன்னேன்.

அது என்னைப் பார்த்து முறைத்து ..தா போடா என்று மூன்று எழுத்து சென்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியது.நானும் அதிர்ந்து சரி கௌதம் மேனன் படம் பார்த்து வளர்ந்த குழந்தையாய் இருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

சரி நமக்கு மட்டும் ஏன் இந்த அவமானம் என்று எண்ணிய போது,"மூஞ்சினே, மூஞ்சி சில மூஞ்சிகளைப் பார்த்தலே இப்படியெல்லாம் தோணும்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு குளிப்பதற்க்குச் சென்றேன்.

குளித்து முடித்து விட்டு வரும் போது, பக்கத்து வீட்டு தாத்தா(வயது 65) அவரும் அதே வார்த்தையை அக்குழந்தையிடம் வாங்கியிருந்தார்.எங்கள் இருவர் காதிலும் same blood

குழந்தைகள் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் தான் அது தெரியாமல் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம்.

ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

என் மீது ஊர்ந்து கொண்டிருந்த எறும்பை
நசுக்கிக் கொன்றேன்
குழந்தைகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.