Friday, December 16, 2011

போராளி திரைப்படமும்...சாதீயக் குறியீடுகளும்



அன்புள்ள சமுத்திரகனிக்கு,

உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குநராக ஆனீர்கள். படம் தோல்வி...பின்பு சசிக்குமாருடன் இணைந்து சுப்ரமணியபுரம் படத்தில் சித்தப்பா கதாபாத்திரத்தில் வந்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தீர்கள்.

அதன் பின்பு நீங்கள் இயக்கிய நாடோடிகள் அதிரி..புதிரி வெற்றி. சசியின் ஈசன் படத்திலும் காவல் துறை அதிகாரியாக நடித்தீர்கள். இன்று போராளி ஒரு நல்ல வெற்றி படம்...இது தான் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்த வரலாறு.

எளிமையான கதை, அதற்கேற்ற அழகான திரைக்கதை, பக்க பலமாக நகைச்சுவை, சசி-கதிர்-தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி, இயல்பான நடிகர்கள் இவை தான் உங்கள் படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைய காரணங்கள் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். போராளி திரைப்படத்தில் மனநிலை குன்றியவர்களின் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள்.

எல்லாவற்றையும் விட காதல் - நட்பு கலவை உங்களுக்கு மிக அழகாக வருகிறது. ரசிகர்களைத் திருப்தி படுத்தும் வசனங்கள் ஆகப் பெரிய எழுத்தாளர்களுக்குக் கூட கை வராத கலை. ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களுக்குக் கைதட்டல் வாங்குவது என்பது சாதாரண விடயம் கிடையாது.

இது வரை நலம்....

இவ்வளவு இருந்தும் ஏன் சாதியத்தைத் தூக்கிக் கொண்டே அலைகிறீர்கள் என்பது தான் புரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் தவறாமல் இடம் பெரும் முத்துராமலிங்கம் குறித்தான வசனங்கள்....இதை விட அதிகம் ஆபத்தானது போராளி படத்தில் அண்ணாச்சியின் சாதியைக் குறிக்க காமராஜர் படத்தையும், கிடை போடுவோர் சாதியைக் குறிக்க அம்பேத்கர் படத்தையும் காட்டியது. ஒரு வேளை தெரியாமல் தான் பிரேமில் கொண்டு வந்து விட்டீர்களோ என்று எண்ணினால் .... “உன் பின்னாடி ஒரு சாதின்னா..என் பின்னாடி ஒரு சாதி” என்று அண்ணாச்சி பேசுவதாக ஒரு வசனம், கிடை போடும் பெரியவர் சசியின் பெரியப்பா குறித்து வியந்து பேசும் வசனங்கள் என மிகத் தெளிவாகத் தான் திணித்துள்ளீர்கள்.

காமராசரை நாடாராகவும், வ.உ.சி யை பிள்ளைமாராகவும், அண்ணாவை செங்குந்தராகவும், அவ்வளவு என் தியாகராஜ பாகவதரை விஸ்வகர்மாவாகவும் தூக்கிக் கொண்டு அலையும் சமூகம் இது.

உங்களைப் போன்ற திரை மொழி மிகச் சிறப்பாக கைவரும் இயக்குநர்கள் மக்களை அதில் இருந்து வெளியே இழுக்கா விட்டாலும் பரவாயில்லை..மீண்டும் உள்ளேயே தள்ளாமலாவது இருங்கள்.

சசிக்குமார் இலங்கைக்கு இந்த படத்தை வியாபாரம் செய்ய மாட்டோம் என்று சொன்ன போது ஏற்பட்ட மதிப்பு..இது போன்ற காரணங்களால் ஒரு மாற்று குறைகிறது என்பதே உண்மை.

அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ இன்றைய தமிழ் சமூகத்தில் சமத்துவம் நிலவும் இடங்களில் ஒன்றாக திரையரங்கங்கள் உள்ளன. உங்கள் மேலான திறமையால் அதன் கதையையும் முடித்து விடாதீர்கள்.

தேவர் மகன் போல அவ்வளவு விசம் இல்லாவிட்டாலும்..போராளி போன்ற ஒரு நல்ல படத்தில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம் விசம்தானே....

2 comments:

Unknown said...

welcome back.
பயங்கர சீற்றத்துடன் மீண்டும் உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.
//தேவர் மகன் போல அவ்வளவு விசம் இல்லாவிட்டாலும்..போராளி போன்ற ஒரு நல்ல படத்தில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம் விசம்தானே//
தேவர் மகன் நல்ல படம் இல்லை என்கிறீர்களா? அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

Bhupathi said...

தமிழகத்தில் சாதி வெறியை தூண்டிவிட்ட குற்றம் புரிந்த படம்.அப்படத்தை பார்த்த பின் சிவாஜி மற்றும் கமலை நான் பார்த்து வந்த பார்வை மாறியது என்பது உண்மை.தமிழகத்தில் விஷம் கலந்த படம் அது.இப்பொழுதும் விஷம் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.வன்முறையால் எதையும் சாதிக்க துடிப்பவர்கள்
சாதியின் பின் நின்று கொண்டு இருக்கின்றனர்.வைரமுத்துவின் வரிகள் 'சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செய்ஞ்ச மோசம்' சொல்வதும் இதைத்தான்.இப்படிப்பட்ட படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.இல்லையேல் தமிழகம் பூகம்பத்தில் அழிந்து விட வேண்டும்.