Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, May 14, 2011

அழகர்சாமியின் குதிரை



முதலிலேயே சொல்லி விடுகிறேன்.”அழகர்சாமியின் குதிரை” கதையை நாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான முயற்சி.இந்த அழகான முயற்சியை விமர்சித்து நார் நாராகக் கிழிப்பது எனது நோக்கமல்ல.படம் குறித்த எனது புரிதல்களின் பகிர்தல்களே இந்தப் பதிவு.

வெண்ணிலா கபடிக்குழு போலவே திருவிழாவோடு துவங்குகிறது படம்.தேனி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தின் தெய்வமாகிய அழகர்சாமியின் திருவிழாவை நடத்த முடியாமல் தவிக்கிறது ஊர்.”எப்படியாவது திருவிழாவை நடத்தி விடுங்கள்...அப்போது தான் ஊரில் மழை பெய்யும்” என்று ஊர் கோடாங்கி சாமி வந்து (வராமல்)சொல்லிவிட, ஊரும் பகீரத முயற்சி எடுக்கும் வேளையில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போகிறது.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அப்புக்குட்டியின் குதிரை ஊருக்கு வந்து சேர்கிறது. அதன் பின் திருவிழா நடந்ததா???அப்புக்குட்டிக்கு குதிரை கிடைத்ததா???மழை வந்ததா??? என்பதே இரண்டாம் பகுதி.

படத்தின் முதல் பகுதி முழுதும் இழையோடும் இயல்பான நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம். அதுவே இரண்டாம் பகுதியில் அந்த நகைச்சுவை இல்லாத போது ஜீரணிக்கவே முடியவில்லை.

”படத்தின் காலகட்டத்தை 1982 என அமைத்தது”, ”பல இடங்களில் மூட நம்பிக்கையை சாடியுள்ளது”,கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும் நம் மனதில் பதிய வைத்தது” என சுசீந்திரன் படத்தில் பல விடயங்களை அநாயசமாக செய்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள அத்துணை நடிகர்களும் குறிப்பிடத்தகுந்தவர்களே.

பாஸ்கர்சக்தியின் இயல்பான கதை, வசனம் படத்தின் மிகப் பெரிய பலம்.

தேனி ஈஸ்வர் தேனியை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குதிரைக்குட்டி பாடலில் இளையராஜாவின் குரல் அட்டகாசம். ஆனால் மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும் வழக்கம் போலவே ஏமாற்றிவிட்டார்.”வெண்ணிலா கபடிக்குழு படத்தின் ”லேசா பறக்குது மனசு” என்ற பாடலுக்கு ஈடாக படத்தில் ஒரு பாடலும் இல்லை. இத்தனைக்கும் படத்தில் ஒரு தனி லவ் ட்ராக்கும் இருக்கிறது.

இடைவேளை வரை மேலே மேலே போகும் படம், இடைவேளைக்குப் பிறகு கீழே, கீழே இறங்குகிறது.

அப்புக்குட்டியின் பெண் பார்க்கும் படலம் + காதல், குதிரை போய் கெட்டவர்களையெல்லாம் அழிப்பது என இரண்டாம் பாதியில் நாடகமாக்கமாகி விட்டது.

படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, நாடகமாக்கலையும் தவிர்த்திருந்தால் தமிழ்சினிமாவின் மைல்கல் சினிமாக்களில் ஒன்றாக இருந்திருக்கும் அழகர்சாமியின் குதிரை.

Monday, April 21, 2008

அறை எண் 305 ல் கடவுள் - விமர்சனம்

கடவுளின் பவரையே லவட்டிக் கொண்டு போகும் இரண்டு மேன்சன் வாழ் இளைஞர்கள் பற்றிய கதையில் லாஜிக் என்ற வஸ்துவை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லைதான்.

ஆபாசம்,வன்முறை இல்லாத,வித்தியாசமான‌ படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் சிம்புதேவனைப் பாராட்டலாம்.

கடவுளாகப் பிரகாஷ்ராஜ்...அழகாக செய்திருக்கிறார்.கடவுளாகவும்,பின்பு பவர் திருடப்பட்ட பிறகு சாதாரண மனிதனாகவும் பின்னியிருக்கிறார்.ஆனால் தான் கடவுள் என்பதை நிரூபிக்க அடிக்கடி விண்டோஸ் டெஸ்க்டாப் பேக்ரவுண்டு மாற்றுவது போல் அடிக்கடி பேக்ட்ராப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.

சந்தானம்...அநியாயத்திற்கு நடித்துள்ளார்.இப்படியே போனால் அடுத்த பேரரசு படத்தின் நாயகன் ஆகிவிடுவார் போல் இருக்கிறது.சந்தானத்திடம் நாம் எதிர்பார்க்கும் டைமிங் மிஸ்ஸிங்.:-((

கஞ்சா கருப்பு நிறைவாக செய்துள்ளார்.தன் குடும்பத்தாருடனான காட்சிகளில் கலக்கியுள்ளார்.

நம் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கூட கொஞ்சம் அதிகமாக வைத்திருப்போம்.அதைவிட குறைவாகத்தான் நாயகி மதுமிதாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.ஜோதிர்ம‌தியும் அவ்வ‌ப்போது வ‌ந்து போகிறார்.

ராஜேஷ்,M.S பாஸ்கர்,இளவரசு,தலைவாசல் விஜய்,V.S ராகவன் என ரகளையான கேரக்டர்களை இயக்குநர் அறிமுகம் செய்கிறார்.ஆனால் அந்த அளவு இவர்களைப் பயன்படுத்தவில்லை என்பது கூடுதல் சோகம்.

குறையேதும் இல்லை....,அட அட அட என்ற இரண்டு பாடல்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது.

படத்தின் மிகப் பெரிய குறை சிரிப்பு தேவனாக இருந்திருக்க வேண்டிய சிம்புத்தேவன்,அட்வைஸ் தேவனாக மாறி மொக்கை போட்டு இருப்பதுதான்.பல இடங்களில் கொத்தி விட்டார்.

கடைசி சீனில் வரும் காமெடி படம் முழுக்க வந்திருந்தால் ரசிகர்களுக்கு பம்பர் பரிசாக இருந்திருக்கும்.இப்போ கொஞ்சம் கஷ்டம் தான்.:-(((

சங்கரின் ராசி எண்ணாண 8 வரும்படி டைட்டில் வைத்தால் மட்டும் போதாது என்பதை சிம்புத்தேவன் உணர அறை எண் 305 ற்கு வர்ம் கடவுளைப் பிரார்த்திப்போம்.

பின்குறிப்பு.
85000 சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையினரின் கைகளை மொன்னையாக்கும் சிம்புத்தேவன் இப்படத்தை இயக்குவத்ற்கு மாதம் 3500 சம்பளத்திற்கும்,அவருடைய காட்பாதர் சங்கர் ரோபோ படத்தை இயக்குவதற்கு மாதம் 2500 சம்பளத்திற்கும் வேலை செய்துள்ளார்கள் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகி உள்ளது...

கேட்கிறவன் கேனையனாக இருந்தால்............

Thursday, December 13, 2007

சோ‍ - நல்லவரா?? கெட்டவரா??

காலையில் எழுந்து "இட்லிவடை" சாப்பிடும் போது அறிவாளியாக,நடுநிலையானவாராக, தைரியமானவராக, நேர்மையானவராகத் திரியும் ஒரு மனிதர், தமிழினி பக்கம் ஒதுங்கினால் கோமாளியாக, ஒரு கட்சி சார்புடையவராக,பழமைவாதியாகத் தெரிவது எப்படி?.அவர் என்ன அந்நியன் படத்தில் வரும் விக்ரமா?. இது குறித்து பதிவு போடலாமா? வேண்டாமா? என்ற குழப்பம்.(யாருப்பா அது சோ னாலே குழப்பந்தான்னு சவுண்டு குடுக்கிறது).போடலாம் என்று அங்கீகரிப்பவர்கள் மேலே படியுங்கள்.

நல்லவரா???????

1) சோ வின் நகைச்சுவை உணர்ச்சி.தேன்மழை, நினைவில் நின்றவள் இந்த இரண்டு படங்கள் மட்டும் போதும் அவருடைய ஹியூமரை எடுத்துக்காட்ட.என்னைப் பொறுத்த வரை தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த காமெடி ஜோடிகளில் ஒன்று நாகேஷ்‍ - சோ.

2) அவருடைய எழுத்து.சமீபத்தில் அவருடைய புத்தகங்களில் சுமார் 10 புத்தகங்களைப் படித்தேன்.கவனிக்கப் பட வேண்டிய நகைச்சுவையான எழுத்து.விகடனில் வெளிவந்த மிஸ்டர்.ரீல் முதல் இப்போது வரும் லூசுப்பையன் வகை எழுத்துக்கு அவர் தான் முன்னோடி.அவருடய "துக்ளக் படமெடுக்கிறார்" படித்துப் பாருங்கள்.

3) அவர் நடத்தி வரும் துக்ளக் பத்திரிக்கையில் இது வரை ஒரு நடிகையின் நாபிக் கமலத்தைக் கூடக் காட்டியது இல்லை.சினிமாவில் குப்பை கொட்டிய அவருக்கு இது முடியாதது இல்லை.கவர்ச்சிப் படங்கள் போடாமல் வரும் வெகுசனப் பத்திரிக்கைகளை எண்ணுவதற்கு நம் ஒரு கையில் உள்ள விரல்களே போதும் என்ற இந்த சூழ்நிலையிலும் அவர் கொள்கை.ஹேட்ஸ் ஆப்.

4) அவர் வாதங்கள் எடுத்து வைக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியதே. அது சரியா? தவறா? என்பது வேறு.இன்றளவும் தமிழ்நாட்டின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரிடம் கருத்துக் கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

5) ஆட்சியில் இருப்பவர்களைப் பிரபலங்கள் "இவரு நல்லவரு, வல்லவரு, தங்கமான தங்கமானவரு" என்று மட்டுமே கூறும் இந்த வேளையில் குறைகளைச் சொல்ல இருக்கும் சில பேர்களில் ஒருவர்.வெறும் முரசொலியோ, நமது எம்.ஜி.யார் மட்டும் வெளிவரும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

6) "எங்கே பிராமணண்?", "சாத்திரங்கள் சொன்னதில்லை" போன்ற நூல்களை அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்குப் பிடிக்காத வண்ணம் எழுதியிருப்பார்.

கெட்டவரா????

1) "ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமானால் அவர்கள் மொழியை அழித்தால் போதும்", என்ற கருத்தை உணர்ந்து இன்று வரை டி.வி பேட்டிகளில் ஆகட்டும், மற்ற பேட்டிகளில் ஆகட்டும் அந்த பிராமண பாஷையை விடாமல் இருக்கும் பாஷாபிமானம்.இவருடைய சென்னைத் தமிழ் உலகறிந்தது.ஏன் அதிலேயே பேசலாமே.பெரியார் தாசன் சென்னைத் தமிழில் தான் பேசுவார்.ஆனால் மற்றவர்களின் மொழிப் போராட்டங்களை மட்டும் கிண்டல் செய்யும் ஹிப்பொக்ரெட்.

2) எழுதுவது குருமூர்த்தியாக இருந்தாலும் அந்த தீவிரவாதக் கருத்துகளை அங்கீகரித்து வெளியிடுவது இவர் தான்.உலகெங்கும் இருக்கும் தீவிரவாதத்தை எதிர்க்கும் இவர்கள் இஸ்லாம் சகோதரர்கள் பற்றி வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் படித்து என் நண்பர் ஒருவர் அந்த சமூகமே நமக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்த பின்பு நான் துக்ளக் படிப்பதை நிறுத்தினேன்.

3) பெண்கள் மீதான இவர் பார்வை.இவர் படத்தில் கூட பெண்களைத் தான் அதிகம் ஓட்டுவார்.சரி ஏதோ காமெடி செய்கிறார் என்று நினைத்தால், இப்போது தான் அது காமெடி மட்டும் இல்லை என்று புரிகிறது.

4) பாரதிய சனதா கட்சி என்ன செய்தாலும் சரி. தி.மு.க என்ன செய்தாலும் தவறு என்ற நிலைப்பாடு.இரண்டு கட்சிகளிலும் சரி, தவறு கலந்து உள்ளது என்ற மினிமம் கருத்துடன் கூட ஒத்துப் போகாத நடுநிலையாளர். என் பதின்ம வயதில் என்ன ஏது என்றே தெரியாமல் நான் r.s.s ல் சேர்ந்த போது அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை விதைத்த போது வேண்டாம் என்று விலகினேன்.(அப்போது வயது 10).

நல்லவரா? கெட்டவரா?

பதில்:

தெரியலயேப்பா!!!!!