Tuesday, December 4, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்

முதலில் கதை.

பத்திரக் கோட்டை கிராமத்தில் ஊர் மெச்ச வாழ்ந்து வரும் தம்பதிகள் மாதவபடையாச்சி,வேலாயி.அவர்களுக்கு 3 ஆண்குழந்தைகள்,2 பெண்குழந்தைகள்.விவசாயியாக இருக்கும் மாதவர் கொடையாளியாகவும் உள்ளார்.ஊர் மக்கள் பிரச்சினையை அவ்வப்போது பணம் கொடுத்தோ / கொடாமலோ தீர்த்து வைக்கிறார்.அவர் நண்பர் பாய்க்கு(நாசர்) தொழிலில் முன்னேற தம்பதிகள் இருவரும் முகம் சுளிக்காமல் பண உதவி செய்கிறார்கள்.அவரும் தோல் தொழில் வியாபாரம் ஆரம்பித்து முன்னேறுகிறார்.

பிள்ளைகள் வளர்கிறார்கள்.கல்யாணம் முடித்த முதல் இரண்டு பையன்களும் தங்கள் மனைவி மற்றும் மாமாவால் (நடன இயக்குநர் சிவசங்கர்)தூண்டப்பட்டு அப்பாவை எதிர்க்கிறார்கள்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

கடைசிப் பையன் ஊரில் துணி துவைக்கும் சாதியை சார்ந்த பெண்ணைக் காதலிக்கின்றான்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

இதனால் மனம் உடைந்த மாதவரும்,வேலாயியும் ஊரை விட்டே வெளியேறி ஆம்பூரில் இருக்கும் நாசரிடம் தஞ்சம் அடைகிறார்கள்.ஆடு மேய்க்கும் தொழிலை மேற்கொள்கிறார்கள்.

சில ஆண்டுகள் கழித்து கடைசி பிள்ளையை ஏதேச்சையாக பார்க்கும் மாதவர் பிள்ளை நிலை கண்டு வெதும்பி திரும்பி ஊருக்கே செல்ல முடிவு எடுக்கிறார்கள்.தீடீரென பாம்பால் தீண்டப் பட்டு வேலாயி இறந்துவிட ஊருக்குப் போகும் முடிவைக் கை விடுகிறார் மாதவர்.

நாசரும் உடல் நலிவுற்று பெங்களூரு சென்று விட,பிறகு நாசரின் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்டு ஊருக்கே செல்கிறார்.அங்கு பிள்ளைகள் நிலை கண்டு மனம் வெறுத்து உயிர் விடுகிறார் மாதவர்.

சத்தியமா இதாங்க கதை.

பஸ் டிக்கெட்டிற்கு முழு பணம் இல்லாமல் பண்ருட்டி பஸ்ஸில் ஏறும் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்துவிடுகிறார் சத்தியராஜ்.திருடு போன பலாப்பழங்களைக் கண்டு பிடிப்பது, கால் மேல் கால் போட்டுத் தூங்குவது, கத்தும் குருவி என்னவென்று சரியாகச் சொல்வது, என மாதவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.விருதை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடித்தாரோ என்னவோ பல இடங்களில் இயல்பு மிஸ்ஸிங்.பத்திரக்கோட்டை சிலாங்கும் அங்கங்கே மிஸ்ஸிங்.

அர்ச்சனா எப்போதும் அழத் தயாராகவே உள்ளார்.முருகனையும், வாழுமுனி ஆண்டவனையும் அடிக்கடி கூப்பிட்டு நம்மைக் கடுப்பேற்றுகிறார்.

சிவசங்கர், ராமலிங்கமாக வருபவர், ராமலிங்கத்தின் காதலியாக வரும் பெண், அழகியில் "ஒளியிலே தெறிவது" பாட்டிற்கு வருவாரே அவர், அனைவரும் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான தேர்வுகள்.

படத்தில் குறிப்பிடத் தகுந்த மற்றோர் அம்சம் எடிட்டிங். B.லெனின் விளையாடியுள்ளார்.காமிராவும் அழகாக உள்ளது. இசை சுமார்.பல பாடல்கள் எங்கோ கேட்டது போன்ற உணர்வு.

குறைகளே இல்லையா?? இருக்கிறது.அது இல்லாமல் எப்படி.

சத்தியராஜ்,அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக சொல்லப்பட்டு இருப்பது
சரியான சப்பை.குடும்ப வன்முறை ஜாஸ்தி.யாராவது யாரையாவது அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

படம் முழுக்க சோகம்.மனிதனின் சோகங்களைப் பதிவு செய்வது தான் நல்ல படம் என்ற கருத்தை எப்போது தான் மாற்றுவார்களோ?? தெரியவில்லை.

இதிலும் 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் காதலிக்கிறது.லிப் கிஸ் கொடுக்கிறது.எல்லாமும் செய்கிறது.ஸ்கூல் பசங்களைக் கொஞ்சம் படிக்க விடுங்கப்பா ப்ளீஸ்.

படம் ரொம்ப நீளம்.அந்த ஊர் ஸ்லாங் பாதி பேத்துக்கு வரவில்லை.இருந்தாலும் மதுரை,நெல்லை, தேனி கிராமங்களையே பார்த்து வந்த நமக்கு பத்திரக்கோட்டை சற்று புதிது தான்.

கடைசி கிளைமாக்ஸ் ஒரு நல்ல‌ சிறுகதை.வாழ்த்துக்கள் தங்கர்.

பரிந்துரை ‍- பார்க்கலாம்(எல்லாரும் அல்ல)

பின்குறிப்பு:(தியேட்ட‌ரில் ந‌ட‌ந்த‌து)

1)இந்த‌ப் ப‌ட‌ம் வேணாம்,வேணாம்னு சொன்னேன் கேட்டியா?? (இர‌ண்டு டீனேஜ்க‌ள்)

2)இவ்வ‌ள‌வு டிக்கெட் வாங்கி வ‌ச்சிருக்கு,ஒர்த்த‌னும் வ‌ர‌ மாட்டேங்கிரானுங்க‌ளே(பிளாக் டிக்கெட் விற்ப‌வ‌ர்)