Monday, July 26, 2010

கவிஞர் மகுடேஸ்வரனுடன் சந்திப்பு

”வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை”

எங்கு வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம் மேற்சொன்ன கவிதையை. இந்தக் கவிதையின் பின்புலத்தைக் கவிஞரின் வாயாலேயே கேட்கக் கூடிய பெரும்பாக்கியம் நேற்று எங்களுக்குக் கிடைத்தது.

திருப்பூர் வலைப்பதிவர் குழுமமாகிய ”சேர்தளம்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கவிஞர் மகுடேஸ்வரனுடன் திருப்பூர் பதிவர்கள் நேற்று உரையாடினோம்.

இது உண்மையில் ஓர் உரையாடல் அல்ல... அனுபவம்.... அந்த அனுபவத்திலிருந்து சில துளிகள் :

1. கவிஞரின் தமிழ்ப்பற்றுக்குக் காரணம் அவர்தம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர். அந்த தமிழாசிரியர் வகுப்பறையில் எப்படிப் பாடம் எடுப்பார் என்பதை பள்ளிக்கூட சிறுவனின் குதூகலத்தோடு பகிர்ந்தார். இன்றும் தமிழை வாழவைக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் தமிழாசிரியர்கள் தாம்.ஆனால் அவர்கள் (அனைவரும் அல்ல) கணித / அறிவியல் ஆசிரியர்களின் டியூசன் பற்றிய பொறாமையில் இருப்பது, நம் மொழியை செம்மொழி மாநாடு நடத்திக் காக்க வேண்டிய (!) நிலைக்குத் தள்ளியுள்ளது. (இதே ஆசிரியரிடம் படித்த மற்றொரு மாணவர் நம் பதிவர் முரளிகுமார் பத்மநாபன்)

2. கவிஞர் எழுதிய கவிதைகள் 90 களில் கணையாழியில் வெளிவந்தது, முதல் தொகுப்பிற்கு சுஜாதாவிடம் முன்னுரை பெற்றது, அதற்குக் கிடைத்த பாலச்சந்தரின் பாராட்டு போன்றவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.

3. கவிஞரின் சினிமாதொழில் குறித்தான எண்ணங்கள் மிகவும் யதார்த்தமானதாக, எளிதானதாக,இயல்பானதாக,கூர்ந்து நோக்கத் தக்க வகையில் இருந்த்து. யாருக்காவது சினிமாவில் நுழையும் எண்ணம் இருந்தால்,சிரமம் பார்க்காமல் கவிஞருடன் உரையாடிவிட்டுப் பின் செல்லவும்.

4. இது போக போனஸாக கோவையில் இருந்து வந்திருந்த திரு.செல்வேந்திரன் உடனான இலக்கிய உரையாடல்களும், பரிசல்காரனின் அவ்வப்போதைய டைமிங் கமெண்ட்டுகளும் சந்திப்பிற்கு இனிமை சேர்த்தது.

5. கவிஞருக்கு கிடைத்த இந்தியா டுடே பரிசான சன்னி - இரு சக்கர வாகனத்தை சென்னையில் இருந்து திருப்பூருக்கு ஓட்டிக் கொண்டு வந்த கதையைச் சிரிக்க சிரிக்கச் சொன்னார்.

6. இன்னும் ஜெயமோகன், சாரு, உலகமயமாக்கல், விவசாயம், திருப்பூர் தொழில், அரசியல் பார்வை என பலதரப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன.

உரையாடலில் கலந்து கொண்ட நண்பர்கள் :

வெயிலான், பரிசல்காரன், செல்வேந்திரன்,சிவகுமார் (வானகமே இளவெயிலே), சக்திவேல், பூந்தளிர் சாமிநாதன், முரளிகுமார் பத்மநாபன், செந்தில்நாதன், திருநாவுக்கரசு, ராமன், ரவிக்குமார் (குறும்பட இயக்குநர்) மற்றும் அவரது நண்பர், சொல்லரசன், ஆதவா, சௌந்தர் (வலைத்தள வாசகர்).

”சேர்தளம்” அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.

10 comments:

ஆதவா said...

மொத்தமாகச் சொன்னால், நேரம் போதவில்லை.... ஒரு புதுவிதமான அனுபவம் கலந்த சந்திப்பாக அமைந்துவிட்டது. நேற்று ஒருமணி நேரத்திற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்துத்தான் வந்தேன். ஆனால் அவ்விதம் சட்டென்று கிளம்பமுடியவில்லை. அவரது ஆளுமை என்னை நன்கு கட்டிப் போட்டுவிட்டது.

பகிர்தலுக்கு நன்றிங்க செல்வம்.

ஜோதிஜி said...

வாங்க பழகலாம்.பிடிச்சிருந்தா friends ஆ இருப்போம்,பிடிக்கலைனாலும்

friends ஆ இருப்போம்

இருப்போம்

செல்வம் said...

நன்றி...ஜோதிஜி...

இருப்போம்...

செல்வம் said...

நன்றி...ஆதவன்

☼ வெயிலான் said...

நறுக்குத் தெறித்தாற் போல், அல்லது ஊசி முனை போல் ;) நிகழ்வு குறித்து நன்கு எழுதியிருக்கிறீர்கள் செல்வம்.

செல்வம் said...

நன்றி...வெயிலான்.இதே போன்ற தருணங்கள் இன்னும், இன்னும், இன்னும் வேண்டும்.

பரிசல்காரன் said...

நல்லதொரு அனுபவமாக இருந்தது அவரது சந்திப்பு.

கோவையிலிருந்து வந்து பங்கேற்றுச் சிறப்பித்த செல்வேந்திரனுக்கும் நமது நன்றிகள்.

செல்வம் said...

நன்றி... பரிசல்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

இதே போன்றதொரு நிகழ்வுகளை இனி அடிக்கடி எதிர்பார்ப்போம்.

ஜோதிஜி said...

நறுக்குத் தெறித்தாற் போல், அல்லது ஊசி முனை போல் ;) நிகழ்வு குறித்து நன்கு எழுதியிருக்கிறீர்கள் செல்வம்

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம்.