Wednesday, December 5, 2007

தமிழ்சினிமாவும்‍ - பிள்ளைக் காதல்களும்

"அறியாத வயசு, புரியாத மனசு
இரண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்"

யுவனின் இசையில் இளையராஜாவின் வாய்சில் மனசை அள்ளும் பாடல்.பாடலைக் கேட்டு முடித்த பிறகு என்றாவது நமக்கு குற்ற உணர்வு வந்திருக்கிறதா???.நம் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது நாம் அவ‌ர்கள் பருவத்திற்குப் போகாமல் அவர்களை நம் பருவத்திற்கு இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை.

1990 ல் வெளிவந்த அஞ்சலி படத்தில் மணிரத்தினம் ஆரம்பித்து வைத்த கூத்து இது.அதில் தான் குழந்தைகளின் வாழ்க்கையைக் காட்டுகிறேன் என்று அதுகள் "I LOVE YOU",சொல்வதையும், காதலுக்கு ஹெல்ப் செய்வது போலவும் வயதுக்கு மீறிய செய்கைகளைப் பதிவு செய்திருப்பார்.நல்ல வேலையாக தாலி சென்டிமென்ட் (சின்னத்தம்பி) அம்மாசென்டிமென்ட் படங்களும் அப்போது வந்ததாலும்,பெண்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துக்கொண்டிருந்ததால் அவ்ர்களுக்கு இது பிடிக்காது என்பதாலும் மற்றவர்கள் யாரும் இந்த வழியைப் பின்பற்றவில்லை.

செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை" மீண்டும் பிள்ளைப் பருவக் காதலைக் கையில் எடுத்தது.சொல்லப்போனால் அவர் அதில் ஒரு படி தாண்டி உடலுறவையும் காண்பித்து தமிழ்சினிமாவை உலகத் தரத்திற்கு (??) உயர்த்தினார்.

இதைத் தொடர்ந்து இதே கதை அம்சம் கொண்ட சுமார் 15 படங்களுக்கு பூசை போடப்பட்டது.நல்ல வேளையாக ஒன்றும் வரவிலை.வெளிவந்த +2, பருவம், கிச்சா போன்ற படங்களும் ஊத்திக்கொண்டன.

தங்கரின் "அழகி" இந்த நேரத்தில் வெளிவந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.எல்லோரும் தங்கள் இளவயதுக் காதலுடன் கம்பேர் செய்து பார்த்து இது ஒரு மிகச் சிறந்த படம் என்று certificate கொடுத்தார்கள்.

அடுத்து வந்த "ஆட்டோகிராப்" இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.ஒரு ஆண் தன் வாழ்க்கையில் சந்தித்த / காதலித்த 3 பெண்களுக்கு, 4 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக பத்திரிக்கை வைக்கும் நாயகனைப் பற்றிய கதை இது.இதிலும் சேரன் பள்ளிக்கூடக் காதலைக் காட்டியிருப்பார்.திருவள்ளுவரையே எதிர்க்கும் பெண்ணிய வாதிகள் கூட இந்தப்படத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில்,ஒரு பெண் தன் கல்யாணத்திற்கு இதேபோல் பத்திரிக்கை வைக்கப் போனால் ஏற்றுக் கொள்வார்களா?? என்ற கேள்வி கூடக் கேட்காமல் வழக்கம் போல இது உலகத்தரமான படம் என்று கூடிக் கும்மிஅடித்தார்கள்.

பாலாஜிசக்திவேலின் "காதல்" வெளிவந்தது.படத்தை மேக்கிங்,மற்றும் திரைக்கதையால் எங்கோ கொண்டு சென்றிருப்பார்.ஆனால் அதிலும் இதே பள்ளிக்கூட காதல் எழவு தான்.அந்தப் படம் வெளிவந்த போது அப்படத்தில் வருவதாக காட்டப்படும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் நிசத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்."இப்படத்தை பார்த்து விட்டு எங்கள் பள்ளி பிள்ளைகள் கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.எனவே படத்தைத் தடை செய்யவேண்டும்",என்று தொடர்ந்தார்.தினத்தந்தியில் இந்த செய்தி 8 ம் பக்கத்தில் யாரும் படிக்காத ஒரு இடத்தில் வந்தது.அனைவராலும் இது உலகத்தரமான திரைப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்சினிமாவின் மைல்கல்லில் ஒன்று என்று அழைக்கப்பட்டது.

வெயில் (பாடலில்) ஆகட்டும், பருத்திவீரன் ஆகட்டும், தமிழ் M.A ஆகட்டும்,ஒன்பது ரூபாய் நோட்டு ஆகட்டும் நல்ல படங்கள் என்று சொல்லப்படும் எல்லாப் படங்களுமே பிள்ளைக்காதலைத் தான் காட்டுகிறார்கள்.

இந்த லிஸ்டில் தொலைக்காட்சியில் வரும் "கனா காணும் காலங்களும்" சேர்த்தி.

படம் எடுப்பவர்களுக்கு இது வாழ்க்கை, வியாபாரம்.எது ஓடுமோ அதைத் தான் காட்டுவார்கள்.நல்ல படங்களைத் தேர்ந்து எடுப்பது நம் கையில் தான் உள்ளது.பல நல்ல படைப்புகளை / படைப்பாளிகளை நாம் தான் தேர்ந்து எடுத்து அங்கீகரித்து உள்ளோம்.இளையராஜாவை அவர் ஆகச் சிறந்த பாடல்களைக் கொடுத்த போது தலையில் வைத்து ஆடியதும் நாம் தான்.அவர் மோசமான பாடல்களைக் கொடுத்த போது அங்கீகரிக்க மறுத்ததும் நாம் தான்.

17 வயது வரை உள்ள பருவம் காதலிக்க ஏற்றது அல்ல.அந்த வயதில் காதலித்துக் கொண்டிருந்தால்,அந்த வயதில் கிடைக்க வேண்டிய அனுபவம்,நட்பு,படிப்பு,விளையாட்டு,அறியாமை,அறிந்துகொள்ளல்,பாராட்டு,மகிழ்ச்சி இன்ன பிற வஸ்துக்களையும் இழக்க நேரிடும்.20 வயதுக்கு மேல் காதலிப்பவர்களுக்கே அது காதலா?? இனக்கவர்ச்சியா?? என்று தெரியாத நிலையில் பாவம் சிறுவர்களை விட்டுவிடுவோம்.

4 comments:

கார்த்திக் பிரபு said...

nanum oru padhivu podanumnu nianchane poteenga nalla iruku valthukal

செல்வம் said...

வாங்க கார்த்திக், கருத்துக்கு நன்றி

சீனு said...

//ஒரு ஆண் தன் வாழ்க்கையில் சந்தித்த / காதலித்த 3 பெண்களுக்கு, 4 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக பத்திரிக்கை வைக்கும் நாயகனைப் பற்றிய கதை இது.இதிலும் சேரன் பள்ளிக்கூடக் காதலைக் காட்டியிருப்பார்.//

எனக்கென்னவோ இதில் முதலாவது Infactuation, இரண்டாவது காதல், மூன்றாவது நட்பு என்ற ரீதியில் தான் படம் நகர்ந்திருக்கும், அதாவது வயதுக்கு ஏற்றார் போல காதலின் பெயர் மாறும்.

ஆமாம் மூன்றாவது நட்பு தானே? நீங்கள் 3 காதல் என்று போட்டிருக்கிறீர்கள்?

செல்வம் said...

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் சீனு.அதனால் தான் சந்தித்த / காதலித்த என்று எழுதியிருந்தேன்.