Thursday, December 13, 2007

சோ‍ - நல்லவரா?? கெட்டவரா??

காலையில் எழுந்து "இட்லிவடை" சாப்பிடும் போது அறிவாளியாக,நடுநிலையானவாராக, தைரியமானவராக, நேர்மையானவராகத் திரியும் ஒரு மனிதர், தமிழினி பக்கம் ஒதுங்கினால் கோமாளியாக, ஒரு கட்சி சார்புடையவராக,பழமைவாதியாகத் தெரிவது எப்படி?.அவர் என்ன அந்நியன் படத்தில் வரும் விக்ரமா?. இது குறித்து பதிவு போடலாமா? வேண்டாமா? என்ற குழப்பம்.(யாருப்பா அது சோ னாலே குழப்பந்தான்னு சவுண்டு குடுக்கிறது).போடலாம் என்று அங்கீகரிப்பவர்கள் மேலே படியுங்கள்.

நல்லவரா???????

1) சோ வின் நகைச்சுவை உணர்ச்சி.தேன்மழை, நினைவில் நின்றவள் இந்த இரண்டு படங்கள் மட்டும் போதும் அவருடைய ஹியூமரை எடுத்துக்காட்ட.என்னைப் பொறுத்த வரை தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த காமெடி ஜோடிகளில் ஒன்று நாகேஷ்‍ - சோ.

2) அவருடைய எழுத்து.சமீபத்தில் அவருடைய புத்தகங்களில் சுமார் 10 புத்தகங்களைப் படித்தேன்.கவனிக்கப் பட வேண்டிய நகைச்சுவையான எழுத்து.விகடனில் வெளிவந்த மிஸ்டர்.ரீல் முதல் இப்போது வரும் லூசுப்பையன் வகை எழுத்துக்கு அவர் தான் முன்னோடி.அவருடய "துக்ளக் படமெடுக்கிறார்" படித்துப் பாருங்கள்.

3) அவர் நடத்தி வரும் துக்ளக் பத்திரிக்கையில் இது வரை ஒரு நடிகையின் நாபிக் கமலத்தைக் கூடக் காட்டியது இல்லை.சினிமாவில் குப்பை கொட்டிய அவருக்கு இது முடியாதது இல்லை.கவர்ச்சிப் படங்கள் போடாமல் வரும் வெகுசனப் பத்திரிக்கைகளை எண்ணுவதற்கு நம் ஒரு கையில் உள்ள விரல்களே போதும் என்ற இந்த சூழ்நிலையிலும் அவர் கொள்கை.ஹேட்ஸ் ஆப்.

4) அவர் வாதங்கள் எடுத்து வைக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியதே. அது சரியா? தவறா? என்பது வேறு.இன்றளவும் தமிழ்நாட்டின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரிடம் கருத்துக் கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

5) ஆட்சியில் இருப்பவர்களைப் பிரபலங்கள் "இவரு நல்லவரு, வல்லவரு, தங்கமான தங்கமானவரு" என்று மட்டுமே கூறும் இந்த வேளையில் குறைகளைச் சொல்ல இருக்கும் சில பேர்களில் ஒருவர்.வெறும் முரசொலியோ, நமது எம்.ஜி.யார் மட்டும் வெளிவரும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

6) "எங்கே பிராமணண்?", "சாத்திரங்கள் சொன்னதில்லை" போன்ற நூல்களை அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்குப் பிடிக்காத வண்ணம் எழுதியிருப்பார்.

கெட்டவரா????

1) "ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமானால் அவர்கள் மொழியை அழித்தால் போதும்", என்ற கருத்தை உணர்ந்து இன்று வரை டி.வி பேட்டிகளில் ஆகட்டும், மற்ற பேட்டிகளில் ஆகட்டும் அந்த பிராமண பாஷையை விடாமல் இருக்கும் பாஷாபிமானம்.இவருடைய சென்னைத் தமிழ் உலகறிந்தது.ஏன் அதிலேயே பேசலாமே.பெரியார் தாசன் சென்னைத் தமிழில் தான் பேசுவார்.ஆனால் மற்றவர்களின் மொழிப் போராட்டங்களை மட்டும் கிண்டல் செய்யும் ஹிப்பொக்ரெட்.

2) எழுதுவது குருமூர்த்தியாக இருந்தாலும் அந்த தீவிரவாதக் கருத்துகளை அங்கீகரித்து வெளியிடுவது இவர் தான்.உலகெங்கும் இருக்கும் தீவிரவாதத்தை எதிர்க்கும் இவர்கள் இஸ்லாம் சகோதரர்கள் பற்றி வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் படித்து என் நண்பர் ஒருவர் அந்த சமூகமே நமக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்த பின்பு நான் துக்ளக் படிப்பதை நிறுத்தினேன்.

3) பெண்கள் மீதான இவர் பார்வை.இவர் படத்தில் கூட பெண்களைத் தான் அதிகம் ஓட்டுவார்.சரி ஏதோ காமெடி செய்கிறார் என்று நினைத்தால், இப்போது தான் அது காமெடி மட்டும் இல்லை என்று புரிகிறது.

4) பாரதிய சனதா கட்சி என்ன செய்தாலும் சரி. தி.மு.க என்ன செய்தாலும் தவறு என்ற நிலைப்பாடு.இரண்டு கட்சிகளிலும் சரி, தவறு கலந்து உள்ளது என்ற மினிமம் கருத்துடன் கூட ஒத்துப் போகாத நடுநிலையாளர். என் பதின்ம வயதில் என்ன ஏது என்றே தெரியாமல் நான் r.s.s ல் சேர்ந்த போது அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை விதைத்த போது வேண்டாம் என்று விலகினேன்.(அப்போது வயது 10).

நல்லவரா? கெட்டவரா?

பதில்:

தெரியலயேப்பா!!!!!

10 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் ஈழத் தமிழன்;சோவின் தீவிர ரசிகன்; அவர் ஈழத் தமிழர் பற்றிய கருத்துக்கள் மனம் நோகடிப்பவை.ஆனால் உங்கள் எண்ணமே...இருபக்கமும் என் எண்ணம்.கூவம் நதிக்கரையினிலே ஜக்கு
மறக்க முடியாத கதாபாத்திரம்.
சரியாகச் சொன்னீர்கள் "எங்கே பிராமணன்" பிராமணர்களையே கேலி செய்தது.
உலகிலேயே வாசகர்கள் கேள்விகளுக்கு நேருக்கு நேர் பதில் கூறும் நிகழ்சியை அமைத்தவரும்
இவர் தானாமே!!!( ஆண்டு விழா)
உள்ளோன்று வைத்து புறமொன்று பேசாமல்; போட்டு உடைப்பதால்
கெட்டவரென இலகுவாகக் கூறி ஒதுக்க முடியாதவர்...
இவை என் சிற்றறிவுக்கெட்டிய தாழ்மையான அபிப்பிராயம்.

Anonymous said...

வடிகட்டிய சந்தர்ப்பவாதி. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து மகிழ்ச்சிப் பரிமாறல் செய்ய முன்னர் சோ ஈழ ஆதரவாளர். அதன் பின்னர் இலங்கை அரசின் உள்வீட்டுப் பிள்ளை.

சீனு said...

சில விஷயங்களில் சோ-வை எனக்கு பிடிக்கும்.

2001 தேர்தலில் எல்லோரும் தி.மு.க ஜெயிக்கும், 'பொற்கால ஆட்சி' என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது சோ மட்டும் தான் (முக்கியமாக) கிராமப்புறங்களில் தி.மு.க தோற்கும் என்று கூறினார். அவரின் அரசியல் விமரிசனங்கள் ப்பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

செல்வம் said...

வாங்க யோகன், உங்கள் கருத்துக்கு நன்றி.

செல்வம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனு.

வாக்காளன் said...

சோ... ரஜினி உண்ணாவிரதம் இருந்த போது, அதை ஏற்றவர், சமீபத்தில் கருனாநிதி, தி மு க உண்ணாவிரதம் இருந்த போது, அதை நக்கலடித்தார்..உண்ணாவிரத நோக்கத்தை நக்கலடிக்கவில்லை.. அப்படி அடித்திருந்திருந்தால் சரி.. ஆனால் அவர் சொன்னது : காலை 9 மணிக்கு நல்லா சாப்பிட்டுவிட்டு மாலை 5 மனி வரை உண்ணாவிரதம் இருப்பாங்க என்று உண்ணாவிரதத்தை நக்கலடித்தார்.. ரஜினி உன்னாவிரதம் இருந்ததும் 9 - 5 தான். பி ஜெ பி உன்னாவிரதம் இருந்திருந்தால், இப்படி நக்கல் அடித்திருக்க மாட்டார்.. கருனானிதி , தி மு க என்பதால் மட்டுமே இப்படி. நல்ல நடுனிலைவாதி..

அவரின் துக்ளக் அட்டை பட நக்கல் எப்பொதும் தி மு க, காங்கிரஸ் ஐ மட்டுமெ சாடும். எப்பொழுதாவது மட்டுமே பி ஜெ பி, அ தி மு க வை சாடும், அதுவும் மென்மையாக

புரட்சி தமிழன் said...

இதுக்கு நெருப்பு சுடுமா சுடாதானு பதிவு போட்டிருந்தாகூட கொஞ்சம் யோசிக்கலாம் இதல யோசிக்க என்ன இருக்கிறது.

செல்வம் said...

வாங்க திரு வாக்காளன், கருத்துக்கு நன்றி.

செல்வம் said...

வாங்க திரு,புரட்சிதமிழன்.கருத்துக்கு நன்றி

Anonymous said...

பாரதிய சனதா கட்சி என்ன செய்தாலும் சரி. தி.மு.க என்ன செய்தாலும் தவறு என்ற நிலைப்பாடு.இரண்டு கட்சிகளிலும் சரி, தவறு கலந்து உள்ளது என்ற மினிமம் கருத்துடன் கூட ஒத்துப் போகாத நடுநிலையாளர். என் பதின்ம வயதில் என்ன ஏது என்றே தெரியாமல் நான் r.s.s ல் சேர்ந்த போது அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை விதைத்த போது வேண்டாம் என்று விலகினேன்.(அப்போது வயது 10)
தங்கள் பதிவு கண்டேன்
ஒன்ற மட்டும் நன்றாகத் தெரிகிறது தாங்கள் நல்லவர்